Latest News

வியாழன், 21 ஜூன், 2012

புதுவசதிகளுடன் வண்டலூர் உயிரியல் பூங்கா

வண்டலூர் உயிரியியல் பூங்காவில் ரூ.31/4 கோடி செலவில் புதிய வசதிகள்
ஜெயலலிதா திறந்து வைத்தார்

சுற்றுலாத் துறையின் மூலம் வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியியல் பூங்காவில் 3 கோடியே 25 லட்சம் ரூபாய் செலவில் முடிக்கப்பட்டுள்ள பணிகளை முதல்-அமைச்சர் நேற்று தலைமை செயலகத்தில் திறந்து வைத்தார்.

வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியியல் பூங்கா முகப்பு தோற்றத்தில் 9 அடி உயரமுள்ள செங்கல் மற்றும் கருங்கல்லால் கட்டப்பட்ட 205 மீட்டர் நீளமுடைய கற்சுவற்றில் பூங்காவிலுள்ள பல்வகையான பாலூட்டிகள், பறவைகள், ஊர்வன ஆகியவற்றின் 43 உருவங்கள் கருங்கல்லில் செதுக்கப்பட்டு மின்விளக்குகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. பார்வையாளர்கள் நுழைவு வாயிலில் 10.5 மீட்டர் உயரம் கொண்ட நேர் பக்க கோபுர வாசல் மற்றும் 8.5 மீட்டர் உயரம் கொண்ட பக்க கோபுர வாசல்களில், கிரானைட் மற்றும் பளிங்குக் கற்கள் பொருத்தப்பட்டு அதன் மேல் தமிழக அரசு முத்திரை பதிக்கப்பட்டுள்ளது.

மதில் சுவரிலிருந்து 40 அடி இடைவெளியில் இரும்பு கம்பிகளை கொண்டு பாதுகாப்பு வேலி அமைக்கப்பட்டு, இடைப்பட்ட பகுதிகளில் புல் தோட்டம், நீர் தெளிப்பானுடன் இரவு விளக்குகளில் மிளிரும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது. வாகனம் நிறுத்துமிடம் விரிவாக்கப்பட்டு, வண்டிகள் நிறுத்துவதற்கு ஏதுவாக தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி. சாலையிலிருந்து பிரதான நுழைவுவாயில் 6 மீட்டர் அகலத்தில் விரிவு செய்யப்பட்டு, பார்வையாளர்கள் வசதிக்காக வழுக்காத ஓடுகள் பதிக்கப்பட்டு இருபுறமும் துருப்பிடிக்காத எக்கு(இரும்பு) வேலிகள் அமைக்கப்பட்டுள்ளது. நுழைவு வாயிலில் 20 அதிநவீன தனித்தனி நுழைவுச்சீட்டு வழங்கும் இயந்திரங்களுடன் 2 நுழைவுச்சீட்டு மையங்கள் கருங்கல் மற்றும் பளிங்கு கற்களால் ஒளிரும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது.

பார்வையாளர்கள் பூங்கா கட்டண விவரங்களை தெரிந்து கொள்ளும் வகையில் பித்தளை எழுத்துகளால் கட்டண விவரங்கள் பதிக்கப்பட்டுள்ளது. பார்வையாளர்கள் எவ்வித சிரமமுமின்றி நுழைவுச்சீட்டு வாங்கும் பொருட்டு பரந்த வெளியிடம் நுழைவுச்சீட்டு வழங்கும் மையங்களின் முன்பாக உருவாக்கப்பட்டுள்ளது.

குகையுடன் கூடிய மலைவடிவ நுழைவு வாயிலுக்கு இயற்கையான வண்ணம் தீட்டப்பட்டு, அருவி அமைக்கப்பட்டு, தமிழக அரசின் முத்திரை மற்றும் பூங்காவின் பெயர் பித்தளையால் பதிக்கப்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி. சாலையிலிருந்து பூங்கா நுழைவுவாயில் வரை உள்ள வெற்றிடங்களில் நீர் தெளிப்பான் மற்றும் புல் தோட்டம் அமைக்கப்பட்டு புல்லுக்குள் சிறு ஒளிரும் மின்விளக்குகள் மற்றும் நீருற்று அமைக்கப்பட்டுள்ளது. கலையரங்கம், செயல் விளக்க அறை, பூங்கா நூலகம் மற்றும் கலந்தாய்வுக் கூடம் ஆகியவற்றில் ஓடுகள் பதிக்கப்பட்டு இவற்றிற்கு செல்லும் சாலைகள் முழுவதும் சிமெண்ட் சாலையாக அமைக்கப்பட்டுள்ளது.

புதுப் பொலிவுடன், பார்வையாளர்கள் கண்டுகளிக்கும் வகையில் வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியியல் பூங்காவில் 3 கோடியே 25 லட்சம் ரூபாய் செலவில் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. முடிக்கப்பட்டுள்ள இந்த புதிய பணிகளை முதல்-அமைச்சர் ஜெயலலிதா நேற்று தலைமைச் செயலகத்தில் திறந்து வைத்தார்.
[vuukle-powerbar-top]

Recent Post