Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

காவிரி உரிமை மீட்க அக்டோபர் 04இல் அணிதிரள்வோம் ~ த.தே.பொ,க அறிவிப்பு

காவிரி உரிமை மீட்க அக்டோபர் 04இல் அணிதிரள்வோம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் காவிரியில் கல்லணை கட்டி வேளாண்மை செய்த இனம் தமிழினம். கல்லணை கட்டி, வெண்ணாறு வெட்டி காவிரிக்குக் கரை போட்ட மன்னன் கரிகால் பெருவளத்தான். 

அப்படிப்பட்ட தமிழினம் இன்று காவிரி உரிமையை இழந்து நிற்கிறது. பன்னிரண்டு மாவட்டங்களில் பாசனம் தந்து 2 கோடி மக்களுக்கு வாழ்வளிக்கிறது காவிரி. சென்னை முதல் இராமநாதபுரம் வரை தமிழகத்தின் 5 கோடி மக்களுக்குக் குடிநீர் தருகிறது காவிரி. 

காவிரித் தீர்ப்பாயத்தின் இடைக்காலத் தீர்ப்பையும் இறுதித் தீர்ப்பையும் ஏற்க மறுத்து அடாவடித் தனம் செய்கிறது கர்நாடகம். இடைக்காலத் தீர்ப்பு 1991 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 11-ஆம் நாள் இந்திய அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டது. 

மாநிலங்களுக்கிடையிலான தண்ணீர்த் தகராறுச் சட்டம் 1956 (6 (2)) இன்படி தீர்ப்பாய முடிவை இந்திய அரசு தனது அரசிதழில் வெளியிட்டு விட்டால் அது உச்ச நீதி மனறத் தீர்ப்பிற்குச் சமம் ஆகும். இறுதித் தீர்ப்பு உச்ச நீதிமன்ற ஆய்வில் இருக்கும் போது இடைக்காலத் தீர்ப்புதான் செயல்பாட்டில் இருக்கிறது. 

நீண்ட காலமாக காவிரி ஆணையத்தைக் கூட்ட மறுத்து வந்த பிரதமர், உச்ச நீதிமன்றத்தின் கண்டிப்புக்கும் இடித்துரைக்கும் பிறகு 19.9.2012 அன்று கூட்டினார். அதில் தமிழக முதலமைச்சர், பற்றாக்குறைக் காலத்தில் செயல்படுத்த வேண்டிய பகிர்வுக் கோட்பாட்டின் படி 1 நாளைக்கு 2 டி.எம்.சி. வீதம் அக்டோபர் 25 வரைக் கர்நாடகம் தண்ணீர் திறந்து விட ஆணையிடுமாறு கேட்டார். ஆனால் பிரதமர் மிகக் குறைவாக ஒரு நாளைக்கு முக்கால் டி.எம்.சி.(நொடிக்கு 9 ஆயிரம் கன அடி) தண்ணீர் திறந்து விடுமாறு கர்நாடகத்திடம் தமது முடிவை அறிவித்தார். 

கர்நாடக முதலமைச்சர் அதை மறுத்துவிட்டு ஆணையக் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்து விட்டார். உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே அறிவித்திருந்த நொடிக்குப் பத்தாயிரம் கன அடி நீரை விடவும் குறைவாகப் பிரதமர் மன்மோகன் சிங் கூறியும், அதையும் ஏற்க மறுத்து அடாவடித்தனம் செய்கிறது கர்நாடகம். 

அதன் பிறகு பிரதமர் தமது தீர்ப்பை நிறைவேற்ற அதிகாரம் இருந்தும் எதுவும் செய்யாமல் அச்சிக்கலிருந்து ஒதுங்கிக் கொண்டுள்ளார். அரசமைப்புச் சட்ட விதி 355-இன் கீழ், தமது முடிவை நிறைவேற்றுமாறு கர்நாடக அரசுக்குக் நடுவண் அரசு கட்டளைத் தாக்கீது அனுப்ப முடியும். அதை செய்ய மறுக்கிறார் பிரதமர். இந்திய அரசு தமிழ்நாட்டை வஞ்சிக்கிறது. 

கர்நாடகத்தில் கே. ஆர். சாகர், ஏமாவதி, ஏரங்கி, கபினி ஆகிய அணைகளின் மொத்த கொள்ளளவு 115 டி.எம்.சி. அவற்றில் கர்நாடகம் உச்ச நீதி மன்றத்தில் ஒப்புக் கொண்டுள்ளபடி இப்பொழுது 90 டி.எம்.சி. தண்ணீர் இருக்கிறது. ஆயினும் தமிழகத்துக்கு ஒரு சொட்டுத் தண்ணீரும் தர முடியாது என்று இனவெறியுடன் கர்நாடகம் கூறுகிறது. 

தமிழ் மக்களைப் பகைவர்கள் போல் கருதுகிறது. இந்திய மற்றும் உலகத் தண்ணீர்ச் சட்டங்களை ஏற்கமறுக்கிறது. அத்துடன் மிகக் குறைந்த அளவுத் தண்ணீர் விடுமாறு ஆணையத்தில் பிரதமர் கூறிய தீர்ப்பை எதிர்த்துக் கர்நாடகத்தில் இரயில் மறியல் உள்ளிட்ட போராட்டங்கள் நடத்துகின்றனர்.

அம்மாநிலம் முழுவதும், முழு அடைப்பு நடத்தவும் ஏற்பாடு செய்து வருகிறார்கள். ஆனால் வஞ்சிக்கப்பட்ட, தொடர்ந்து பாதிக்கப்பட்டு வரும் தமிழ் மக்கள் உரிமையை நிலைநாட்ட இன்னும் உரியவாறு போராடவில்லை. அனைத்து விவசாயிகள் சங்கங்களும் கட்சிகளும் பங்கேற்கும் முதற்கட்டப் போராட்டம் 4.10.2012 அன்று நடைபெற உள்ளது. 

காவிரிப் பாசன மாவட்டங்களின் இரயில் மறியல் அது! அன்று முழுவதும், இரயில்கள் இயங்காமல் பெருந்திரள் மறியல் செய்வோம். இந்திய அரசின் வஞ்சகத்தைக் கண்டிப்போம். ஒரு நாளைக்கு 2 டி. எம்.சி. வீதம். 2012 அக்டோபர் 30ஆம் நாள் வரைக் கர்நாடகம் தண்ணீர் திறந்துவிட ஆணையிட்டு அதைச் செயல்படுத்துமாறு இந்திய அரசை வலியுறுத்துவோம். 

சட்டத்தையும் நீதியையும் மதிக்காமல் சமூக விரோதிபோல் நடந்து கொள்ளும் கர்நாடகத்திற்குப் பாடம் புகட்டுவோம். அடுத்த கட்டமாக, நெய்வேலியிலிருந்து கர்நாடகத்திற்கு அன்றாடம் செல்லும் 11 கோடி யூனிட் மின்சாரத்தைத் தடுத்து நிறுத்தும் போராட்டம் நடத்துவோம். 

ஐந்து இலட்சம் ஏக்கர் குறுவை சாகுபடியை இழந்தோம். 16 இலட்சம் ஏக்கர் சம்பா சாகுபடியும் கேள்விக்குறியாக உள்ளது. 5 கோடி மக்களின் குடிநீர்க்கும் ஆபத்து வர உள்ளது. (காவிரி உரிமை மீட்புக் குழு)
[vuukle-powerbar-top]

Recent Post