Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

அக்டோபர் 2 இல் மறைமலை நகரில் வைகோ தலைமையில் உண்ணாநிலை அறப்போராட்டம்

அக்டோபர் 2 : மறைமலை நகரில் வைகோ தலைமையில் உண்ணாநிலை அறப்போராட்டம் தமிழ்நாட்டைப் படுநாச நரகக் குழியில் தள்ளும் மது எனும் அரக்கனை ஒழித்தால் அன்றி, தமிழ்நாட்டுக்கு விமோசனம் கிடையாது. 

எனவே, பூரண மதுவிலக்கைத் தமிழகத்திலே நிலைநாட்டுவதற்கான விழிப்பு உணர்வை மக்கள் மன்றத்தில் ஏற்படுத்துவதற்கு மறுமலர்ச்சி தி.மு.க. திட்டமிட்டு இருக்கிறது. 

முதல் கட்டமாக, அண்ணல் காந்தியார் பிறந்த நாளாகிய அக்டோபர் 2 ஆம் தேதி அன்று பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி தமிழகம் எங்கும் மாவட்டத் தலைநகரங்களில் மறுமலர்ச்சி தி.மு.க. உண்ணாநிலை அறப்போராட்டம் நடத்தும். 

வடசென்னை, தென்சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களின் சார்பாக, சென்னை - செங்கல்பட்டு பிரதான நெடுஞ்சாலைக்கு கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள மறைமலை நகரில் நடைபெறும் உண்ணாவிரத அறப்போருக்கு கழகப் பொதுச்செயலாளர் வைகோ தலைமை தாங்குவார்; 

கழக அவைத்தலைவர் திருப்பூர் சு.துரைசாமி இந்த அறப்போரை துவக்கி வைப்பார்; கழகப் பொருளாளர் டாக்டர் இரா.மாசிலாமணி உண்ணாநிலை அறப்போரை நிறைவு செய்து வைப்பார். துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா முன்னிலை ஏற்பார். 

இந்நிகழ்ச்சியை ஆவடி அந்திரிதாஸ் தொகுத்து வழங்குவார். அக்டோபர் 2 ஆம் தேதி காலை 9 மணிக்கு உண்ணாநிலை அறப்போர் தொடங்கும். இந்த அறப்போரின் ஏற்பாடுகளை மாவட்டச் செயலாளர்கள், பாலவாக்கம் க.சோமு, டி.ஆர்.ஆர்.செங்குட்டுவன், வேளச்சேரி பி. மணிமாறன், சு.ஜீவன் ஆகியோர் திட்டமிட்டு ஏற்பாடு செய்து வருகின்றனர். 

இந்த உண்ணாவிரதத்துக்கு கட்சி, சாதி, மத எல்லைகளைக் கடந்து, தமிழக மக்கள் ஆதரவு தருமாறு அன்புடன் வேண்டுகிறோம். 

‘தாயகம்’ 
தலைமை நிலையம் 
சென்னை-8 
மறுமலர்ச்சி தி.மு.க. 
29 .09.2012
[vuukle-powerbar-top]

Recent Post