Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

மெனிக்பாமில் உள்ள 6200 ஏக்கர் நிலத்தைக் கைப்பற்றுவதற்கு இலங்கை இராணுவம் கடும் போட்டி

செட்டிக்குளம் மெனிக்பாமில் உள்ள 6200 ஏக்கர் நிலத்தைக் கைப்பற்றுவதற்கு இலங்கை இராணுவம், வெளிநாட்டு நிறுவனங்கள், உள்நாட்டு வர்த்தகர்களிடையே கடும்போட்டி எழுந்துள்ளது.

3 இலட்சத்துக்கும் அதிகமான தமிழ் மக்கள் ஒருகாலத்தில் அடைக்கப்பட்டிருந்த மெனிக் பாமில், இறுதியாகத் தங்கியிருந்த சுமார் 1000 இற்கும் அதிகமான மக்களை கடந்தவாரம்
இலங்கை  படையினர் அவசர அவசரமாக வெளியேற்றியிருந்தனர்.

தற்போது இந்த முகாம் அமைந்திருந்த பகுதி முற்றாக மூடப்பட்டுள்ளது.

இந்த நில ஒதுக்கீடு முடியும் வரை அந்தப் பகுதி மூடப்பட்டிருக்கும் என்று இலங்கையின் காணி அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.

மெனிக் பாமில் உள்ள நிலத்தை தமக்கு வழங்குமாறு இலங்கை அரச நிறுவனங்கள், வெளிநாட்டு முதலீட்டாளர்கள், வர்த்தகர்களிடம் இருந்து பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் இலங்கை அரசுக்கு கோரிக்கைகள் வந்துள்ளதாகவும், அவை பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

மெனிக் பாமில் உள்ள நிலத்தை ஒதுக்கீடு செய்வது தொடர்பாக வவுனியா மாவட்டச் செயலர் பந்துல ஹரிச்சந்திரவுடன், காணி அமைச்சின் செயலர் அசோக பீரிஸ், மாகாண காணி ஆணையாளர் தயாந்தா ஆகியோர் கலந்துரையாடியுள்ளனர்.

விவசாய பாடசாலை ஒன்றை அமைப்பதற்கு 200 ஏக்கர் நிலத்தை இலங்கை இராணுவம் கோரியுள்ளதாக காணி அமைச்சின் செயலர் அசோக பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இலங்கை  இராணுவம் பயிற்சி முகாம் ஒன்றை அமைப்பதற்காகவும் நிலத்தைக் கோரியுள்ளது.

அதேவேளை தொல்பொருள் ஆய்வு திணைக்களமும் ஒரு தொல்பொருள் ஆய்வுக்காக 40 ஏக்கர் நிலத்தை கேட்டுள்ளது.

முன்னணி சீமெந்து உற்பத்தி நிறுவனம் ஒன்றும் இங்குள்ள நிலத்தைத் தருமாறு கோரியுள்ளது.

அதேவேளை செட்டிக்குளம் மெனிக்பாம் பிரதேசத்தை தமது சொந்த இடமாகக் கொண்ட 45 குடும்பங்கள் மீண்டும் தாம் அங்கு குடியேற விரும்புவதாக தெரிவித்துள்ளதாக செட்டிக்குளம் பிரதேச செயலக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அவர்கள் தமது நிலத்தை தமக்கு மீளவழங்க வேண்டும் என்று கோரியுள்ளனர்.

அதேவேளை, வீடுகள், காணிகளற்ற பொதுமக்களுக்கு அந்த நிலத்தை பகிர்ந்தளிக்க வேண்டும் என்று என்று அரசியல்வாதிகள் சிலர் கேட்டுள்ளனர்.

இதற்கிடையே மெனிக்பாமில் இலங்கை  இராணுவம் தளம் ஒன்றை அமைக்கவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே வடக்கில் அதிகளவு இலங்கை  படையினர் நிலைகொண்டுள்ள நிலையில், அங்கு மேலும் படையினரைக் குவிக்க இலங்கை அரசாங்கம் முனைவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

இதற்கிடையே செட்டிக்குளம் வலயம் 2இல் 250 ஏக்கர் நிலப்பரப்பில்
இலங்கை இராணுவம் ஆறு மாதங்களுக்கு முன்னரே காலாற்படை பயிற்சி முகாம் ஒன்றை அமைத்துள்ளதாக பிரதேச செயலர் கமலதாசன் தெரிவித்துள்ளார்.

இந்தத் தளத்தை விரிவாக்கவோ, மேலதிக நிலத்தை பெறுவதற்கோ
இலங்கை  இராணுவம் முயற்சிக்கிறதா என்பது குறித்து தனக்கு ஏதும் தெரியாது என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
[vuukle-powerbar-top]

Recent Post