Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

துரை தயாநிதியின் முன் பிணை மனு நிராகரிப்பு!

துரை தயாநிதி
திமுக தலைவர் மு.கருணாநிதியின் பேரனும், மத்திய உரத்துறை அமைச்சர் அழகிரியின் மகனுமான துரை தயாநிதியின் முன் பிணை மனு சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை பிரிவினால் இன்று நிராகரிக்கப்பட்டது.

அரசு விதிமுறைகளை மீறி கிரானைட் கற்களைத் தோண்டும் பணியில் தயாநிதிக்கு சொந்தமான ஒலிம்பஸ் நிறுவனம் ஈடுபட்டதென்பதே அவர் மீதுள்ள முக்கிய குற்றச்சாட்டாகும்.

முன்னாள் மதுரை மாவட்ட ஆட்சியர் சகாயம் உரிமவிதிகளை மீறி கிரானைட் தோண்டியதில் அரசுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு என்று அரசுக்குத் தெரிவிக்க, அதன் பின்னர் அஇஅதிமுக அரசு கிரானைட் சுரங்க உரிமம் பெற்றவர் பலர் மீது கடும் நடவடிக்கை எடுக்கத் துவங்கியிருக்கிறது, அவ்வகையிலேயே துரை தயாநிதியின் ஒலிம்பஸ் மீதும் வழக்குத் தொடரப்பட்டிருக்கிறது.

ஒவ்வொருவராக கிரானைட் பிரச்சினையில் கைதாக, துரை தயாநிதி தலைமறைவாகிவிட்டார் எனக்கூறி, போலீசார் அவர் நாட்டை விட்டு வெளியேற அனுமதிக்கப்படக்கூடாது என பல்வேறு விமான நிலையங்களுக்கும் வேண்டுகோள் விடுத்தனர்.

இந்நிலையில் துரை தயாநிதி தான் ஒலிம்பசிலிருந்து 2010லேயே விலகிவிட்டதாகவும் பழிவாங்கும் நோக்குடன் தன் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும் கூறி முன் பிணை கோரினார். ஆனால் அவரது வாதங்களை ஏற்கமறுத்த நீதிபதி மதிவாணன் துரைதயாநிதியின் மனுவினை நிராகரித்தார். அவரது நிறுவன இயக்குநர் நாகராஜனின் முன் பிணை மனுவும் நிராகரிக்கப்பட்டிருக்கிறது.
[vuukle-powerbar-top]

Recent Post