Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

இலங்கை யாத்ரீகர்கள் மீது கல்வீசி தாக்குதல்: திருச்சியில் பதற்றம்!

இலங்கையிலிருந்து வந்த யாத்ரிகர்கள் சென்ற வாகனங்கள் மீது திருச்சி அருகே கல்வீசித் தாக்குதல் நடைபெற்றுள்ளது. இதனால் சிறிது நேரம் அங்கு பதற்றம் நிலவியது.

அந்தத் தாக்குதலில் வாகனங்களின் கண்ணாடிகள் சேதமடைந்து, யாத்ரிகர்கள் சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால், யாரும் காயமடையவிலலை என்று போலீசார் தெரிவிக்கின்றனர்.

இலங்கையிலிருந்து பெண்கள், குழந்தைகள் உள்பட சுமார் 100 யாத்ரிகர்கள் தமிழ்நாடு வந்துள்ளனர். நேற்று நாகூர் தர்காவுக்குச் சென்றபோது, அங்கு தமிழ் அமைப்புக்களைச் சேர்ந்த சிலர் அவர்களைத் தடுத்து நிறுத்தினார்கள். அதையடுத்து, போலீசார் அந்த யாத்ரிகர்களைத் திருப்பி அனுப்பினார்கள்.

பிறகு பூண்டி மாதா கோயிலுக்குச் சென்ற அந்த யாத்ரிகர்கள், அங்கும் எதிர்ப்பைச் சந்திக்க வேண்டியிருந்தது. அங்கும் உள்ளே செல்ல முடியவில்லை. அதையடுத்து, இன்று காலை வேளாங்கண்ணி மாதா கோயிலுக்குச் சென்றபோது, அவர்களை உள்ளே அனுமதிக்க எதிர்ப்புத் தெரிவித்து சிலர் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். அதனால், அவர்கள் அங்கும் தரிசனம் செய்ய முடியவில்லை.

இலங்கை யாத்ரிகர்களுக்கு எதிர்ப்பு வலுத்துவரும் நிலையிலும், அதுதொடர்பான செய்தி வேகமாகப் பரவிவரும் நிலையிலும் அவர்களை இலங்கைக்கு பாதுகாப்பாகத் திருப்பியனுப்ப போலீசார் நடவடிக்கை மேற்கொண்டார்கள்.

அதற்காக, அவர்கள் வாகனங்களில் ஏற்றப்பட்டு, திருச்சி விமான நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டார்கள். திருச்சியின் புறநகர் பகுதியில் வரும்போது, அந்த வாகனங்களை சிலர் கல்வீசித் தாக்குதல் நடத்தினார்கள். அதில் வாகனங்களின் கண்ணாடிகள் சேதமடைந்தன.

பின்னர் அவர்கள் பாதுகாப்பாக விமான நிலையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டார்கள். இன்று இரவு விமானம் மூலம் அவர்கள் இலங்கை திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கை பிரஜைகள் தமிழ்நாட்டுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு இலங்கை வெளியுறவு அமைச்சகம் ஏற்கெனவே அறிவுறுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

திருச்சி வந்திருந்த இலங்கையைச் சேர்ந்த கலைப் பள்ளி மாணவர்கள் சில தினங்களுக்கு முன்பு அச்சுறுத்தல் காரணமாக திரும்பச் சென்றனர்.
[vuukle-powerbar-top]

Recent Post