Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் கரூர் மாநாட்டின் தீர்மானங்கள்


திராவிட இயக்க நூற்றாண்டு விழா பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் கரூர் மாநாடு - 15.9.2012

தீர்மானங்கள் திராவிட இயக்க நூற்றாண்டு விழா - பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக மாநாடு, இன்று (15.09.2012) கரூரில் நடைபெற்று வருகிறது. 

இம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: 

தீர்மானம் எண்: 1 தமிழ் ஈழமே தீர்வு- 

பொது வாக்கெடுப்பு நடத்துவீர் மனித குல வரலாற்றில் தேசிய இனங்கள், உரிமையோடும, மானத்தோடும் வாழ்வதற்காக, ஆயுதப் போராட்டம் நடத்தியும், அனைத்து உலக நாடுகளின் ஆதரவைப் பெற்றும், ஐ.நா. மன்றத்தின் தலையீட்டாலும், தங்கள் தாயகத்தை, சுதந்திர இறையாண்மை உள்ள நாடுகளாக பிரகடனம் செய்து விட்டன. 

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, இலங்கைத் தீவின் பூர்வகுடி மக்களான ஈழத்தமிழர்கள், சுதந்திர இறையாண்மை உள்ள அரசு அமைத்து, உலகின் தொன்மையான நாகரிகம், பண்பாட்டை அடையாளப்படுத்தும் பெருமையோடு வாழ்ந்து வந்தனர். 

ஐரோப்பியக் கண்டத்தில் இருந்து, போர்த்துகீசியரும், ஒல்லாந்தரும், பின்னர் பிரித்தானியரும், இலங்கைத் தீவில் ஆக்கிரமிப்பு அரசுகள் அமைத்தபோது, அதிலும் பிரித்தானியர் ஆளுகையில், தங்கள் நிர்வாக வசதிக்காக, தமிழர்களையும், சிங்களவர்களையும், ஒரே அதிகாரக் குடையின்கீழ் இணைத்து, ஆட்சி புரிந்தனர். 

அதுவரை பிரித்தானியக் காலனியாக இருந்த இலங்கை, 1948 பிப்ரவரி 4 இல், சுதந்திரம் பெற்றபோது, சிங்களவர்களோடு, சம உரிமையும், அதிகாரமும் உள்ள மக்களாக, தாங்களும் வாழ முடியும் என்ற, தவறான நம்பிக்கையில், தமிழர்கள், சிங்களரோடு சகவாழ்வு சாத்தியம் என்றே நம்பினர். 

ஆனால், எடுத்த எடுப்பிலேயே, 1948 இல், அத்தீவினை தங்கள் உழைப்பால், வியர்வையால், வளம் கொழிக்கும் பூமியாக ஆக்கிய இந்திய வம்சாவழித் தமிழரான, பத்து இலட்சம் தமிழர்களை நாடு அற்றவர்களாக ஆக்கி, அவர்களின் குடி உரிமையையும், சிங்கள இனவாத அரசு பறித்த செயல், உலகத்தில் இதுவரை எங்கும் நடைபெறாத அநீதி ஆகும். பரந்த இப்பூவுலகில் எங்கே அநீதி நேர்ந்தாலும் அதனை எதிர்த்துக் குரல் கொடுத்தபண்டித நேருவின் இந்திய அரசாங்கம், அன்று வாய்மூடி மௌனியாகக் கிடந்தது என்பதும், அன்றிலிருந்தே இந்திய அரசின் துரோகம் தொடர்ந்தது என்பதும், வரலாற்று உண்மை ஆகும். 

1956 இல், சிங்களம்தான் ஆட்சிமொழி என்று, சிங்கள அரசு அறிவித்ததோடு, நீதி கேட்டு அறப்போர் நடத்திய தமிழர்கள் மீது, அடக்குமுறையை ஏவத் தொடங்கியது. 1957 இல், தமிழர் தலைவர் தந்தை செல்வா அவர்களோடு, சிங்கள அதிபர் பண்டாரநாயகே, ஒப்பந்தம் செய்து கொண்டார். ஆனால், ஜெயவர்த்தனேயும், புத்த பிட்சுகளும் எதிர்த்ததால், ஒப்பந்தம் குப்பைத் தொட்டிக்குப் போயிற்று. 

தமிழர்கள் தொடர்ந்து அறவழியில் போராடினர்.1965 இல், தந்தை செல்வாவோடு, இலங்கை அதிபர் சேனநாயகே செய்த ஒப்பந்தமும், சிங்களர் எதிர்ப்பால், புதைகுழிக்குப் போயிற்று. தமிழர்கள் மீது, கொடிய அடக்குமுறை சிங்களரால் ஏவப்பட்டது. 

1974 இல் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில், சிங்களரின் கோரத் தாக்குதலால், 9 தமிழர்கள் மாண்டனர். இதனால், தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை தந்தை செல்வா ராஜினாமா செய்தார். 1975 இல் காங்கேசன்துறை இடைத்தேர்தல் நடந்தது. 

சுதந்திர இறையாண்மை உள்ள தமிழ் ஈழ தேசம் என்ற கோரிக்கையை முன்வைத்து, தந்தை செல்வா போட்டியிட்டார். 74 விழுக்காடு வாக்குகளுடன், மகத்தான வெற்றியும் பெற்றார். இலங்கை நாடாளுமன்றத்தில், தமிழ் ஈழக் கோரிக்கையை முன்வைத்து, முரசு கொட்டினார். 

1976 மே மாதம் 14 ஆம் தேதி, பண்ணாகம் வட்டுக்கோட்டையில், அனைத்துத் தமிழர் அமைப்புகளையும் ஒன்றாகத் திரட்டி, சுதந்திர தமிழ் ஈழ தேசம் ஒன்றே, ஈழத்தமிழர்களின் இலக்கு என்று பிரகடனமும் செய்தார். 

இதுவே, வட்டுக்கோட்டைப் பிரகடனம் என்று, வரலாற்றில் புகழ் பெற்றது. 1977 பொதுத்தேர்தலில், சுதந்திரத் தமிழ் ஈழக் கோரிக்கையை முன்வைத்து, தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி பெரு வெற்றி பெற்றது. சிங்கள அரசு, ஜனநாயகத்தின் மென்னியை முறிக்கும், கொடிய சட்டங்களை நிறைவேற்றியது. 

1981 இல் தமிழர்கள், சிங்கள அரசின் இராணுவம்,போலீஸ் மற்றும் சிங்களக் காடையர்களால், கொடூரமாகத் தாக்கப்பட்டனர். அதன் உச்சகட்டமாக,1983இல் தமிழ் இனப் படுகொலை நடந்தது. ஜூலை ¹25 ஆம் நாள், வெலிக்கடை சிறையில், 53 தமிழர்கள், குட்டிமணி, ஜெகன், தங்கதுரை உள்ளிட்டோர், மிகக் கோரமாகக் கொல்லப்பட்டனர். 

1983 ஆகஸ்ட் 16 ஆம்தேதி, இந்திய நாடாளுமன்றத்தில், அன்றைய தலைமை அமைச்சர் இந்திரா காந்தி அம்மையார் அவர்கள், இலங்கையில் நடப்பது, தமிழ் இனப் படுகொலை என்று அறிவித்தார். தமிழ் மக்கள் தாக்கப்படுவது கண்டும், தமிழ்ப் பெண்கள், சிங்கள போலீஸ், இராணுவத்தால், கற்பழிக்கப்படும் சகிக்க முடியாத அக்கிரமம் கண்டும், தமிழர்களின் சின்னஞ்சிறு குழந்தைகளையும், சிங்களர்கள் கொதிக்கும் தாரில் போட்டு, ஈவு இரக்கம் இன்றிக் கொலை செய்ததைக் கண்டும், இனி ஆயுதம் ஏந்திப் போர் புரிவது ஒன்றே, அடிமை இருளில் இருந்து தமிழர்களை விடுவிக்கும் என்று, ஈழத்து இளைஞர்கள், முடிவுக்கு வந்தனர். 

வரலாறு நெடுகிலும், உலகில் இப்படித்தான் ஆயுதப்போர் நடந்தது என்பதால், மாவீரர் திலகம் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள், முதலில் புதிய புலிகள் என்ற அமைப்பைத்தொடங்கி, பின்னர் தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் என்று பெயரிட்டு, உலகம் இதுவரை கண்டும் கேட்டுமிராத வீர சாகசம் புரியும்,புரட்சிகர விடுதலைப்படையாக உருவாக்கினார். 

இந்திரா காந்தி அம்மையார் ஆட்சிக் காலத்தில், விடுதலைப்புலிகள் உள்ளிட்ட தமிழ் அமைப்புகளுக்கு, இந்திய அரசு, ஆயுதப் பயிற்சியும் உதவியும் செய்தது. ஆனால், அவரது மறைவுக்குப்பின், இந்தியாவின் ஆட்சிப்பொறுப்பை ஏற்ற ராஜீவ் காந்தி அரசு, சுவீடன் நாட்டில் இருந்து இந்தியாவுக்கு விலைக்கு வாங்கிய போஃபர்ஸ் பீரங்கிகள் பேரத்தில் நடைபெற்ற ஊழல், அம்பலத்துக்கு வந்ததால், இந்திய மக்கள் கவனத்தைத் திசை திருப்ப, புலிகளின் தலைவர் பிரபாகரனை, நயவஞ்சகமாக ஏமாற்றி இந்தியாவுக்கு அழைத்து வந்து, தில்லி அசோகா ஓட்டலில் சிறைவைத்து, இலங்கையோடு இந்தியா ஒப்பந்தம் செய்யப் போகிறது என்றும், அதனை ஏற்றுத் தீர வேண்டும் என்றும் நிர்பந்தம் செய்தது. 1987 ஜூலை 29 ஆம் நாள், ஒப்பந்தம் கையெழுத்தானது. 

இந்திய அரசோடும், மக்களோடும் மோதல் போக்கை விரும்பாத பிரபாகரன் அவர்கள், ஆகஸ்ட் 4 ஆம் தேதி ஈழத்தில் சுதுமலையில், தனது தாயக மக்களிடம் தெரிவிக்கையில், தமது பூகோள அரசியல் நலன்களுக்காக, வல்லரசான இந்தியா, நம்மீது ஒப்பந்தத்தைத் திணித்து, நாம் தியாகத்தாலும் வீரத்தாலும் கட்டி எழுப்பிய, மகத்தான விடுதலைக் கோட்டையைத் தகர்க்கின்றது. இனி, ஈழத்தமிழ் மக்களைப் பாதுகாக்கும் பொறுப்பை, இந்திய அரசுதான் ஏற்றுக்கொள்ள வேண்டும்; 

சிங்கள இனவாத பூதம், இந்திய இலங்கை ஒப்பந்தத்தை விழுங்கும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று, தீர்க்கதரிசனமாகச் சொன்னார். ஈழத்தமிழர்களின் நியாயமான ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து, 1987 செப்டெம்பர் 15 ஆம் நாள், விடுதலைப்புலிகளின் முன்னணித் தளகர்த்தர்களுள் ஒருவரான திலீபன், நல்லூர் கந்தசாமி கோவிலுக்கு எதிரே உள்ள திடலில் துளிநீரும் பருகாத உண்ணாநிலை அறப்போரைத் தொடங்கினார். 

பலாலி வரை வந்த இந்தியத் தூதர் தீட்சித், திலீபனைப் போய்ச் சந்திக்கவும் முற்படவில்லை. அதற்கு மாறாக, செப்டெம்பர் 14 ஆம் தேதி இரவில், இந்திய அமைதிப்படையின் தளபதி ஹர்கிரத்சிங் அவர்களை, தீட்சித் தொலைபேசியில் அழைத்து, பிரபாகரனைச் சுட்டுக் கொன்று விடுமாறு, இந்திய அரசு கூறி உள்ளதாகத் தெரிவித்தார். அதற்கு அத்தகைய துரோகத்தை, இந்திய இராணுவம் ஒருபோதும் செய்யாது என்று ஹர்கிரத்சிங் மறுத்துவிட்டார். செப்டெம்பர் 26 ஆம் தேதி திலீபன் உயிர்நீத்தார். 

இந்தியா தந்த வாக்குறுதிக்கு மாறாக, விடுதலைப்புலிகளின் வீரத்தளபதிகள், குமரப்பா, புலேந்திரன் உள்ளிட்ட 17 பேர், சிங்களப் படையினரால், அக்டோபர் 3 ஆம் நாள் கைது செய்யப்பட்டு, பலாலியில் சிறை வைக்கப்பட்டு, இந்திய அரசின் துரோகத்தால், அங்கு போடப்பட்டு இருந்த காவல் விலக்கப்பட்டு, சிங்கள இராணுவத்தினர் கரங்களில், சிக்க விரும்பாத 12 புலிப்படைத் தளபதிகள், நச்சுக்குப்பிகளைக் கடித்து மாண்டார்கள். 

இந்திய இராணுவம், விடுதலைப்புலிகள் மீது தாக்குதல் நடத்தியது. தற்காப்புக்காக, அவர்கள் திருப்பித் தாக்கினர். ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட இந்தியப் படை அங்கே குவிக்கப்பட்டது. அமைதிப்படை, அமளிப்படை ஆயிற்று. ஈழத்தமிழர்கள், பெண்கள், இந்திய இராணுவத்தால் வதைபட்டனர். அனைத்துக்கும் ராஜீவ் காந்தி அரசே பொறுப்பாயிற்று. 1989 இல், இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் வி.பி.சிங் பிரதமர் ஆனார்.இந்திய இராணுவம் திரும்ப அழைக்கப்பட்டது. இலங்கையில் அரசியல் அதிகார மாற்றங்கள் ஏற்பட்டன. சந்திரிகா குமாரதுங்கே அதிபரானதும், ஈழத்தமிழர்கள் மீது முப்படைகளை ஏவினார். 

1998 இல் யாழ்ப்பாணத்தில் இருந்து ஐந்து இலட்சம் தமிழர்கள் வெளியேற நேர்ந்தது. சிங்கள அரசுக்கு எந்த உதவியும் செய்வது இல்லை என, இந்தியாவின் அன்றைய பிரதமர் வாஜ்பாய், அனைத்துக்கட்சிக் கூட்டத்தைக் கூட்டி அறிவித்தார். விடுதலைப்புலிகள், தங்கள் பாசறைகளைப் பலப்படுத்தினர். யானை இறவு களத்தை, போரில் வென்றனர். ஓயாத அலைகள், அக்கினி அலைகளில் வென்றனர். 

இந்தப் பின்னணியில், ரனில் விக்கிரமதுங்கே இலங்கைப் பிரதமர் ஆனார். விடுதலைப்புலிகளுடன் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்த, நார்வே அரசு உதவியது. அதிபர் சந்திரிகா அதைச் சீர்குலைத்தார். 2004 இல், திருமதி சோனியா காந்தி அம்மையார் இயக்குகின்ற ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, இந்தியாவில் பொறுப்பு ஏற்றது. பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே அதிபர், இலங்கை அதிபர் ஆனான். 

இந்தியாவின் மன்மோகன் சிங் அரசு, அளவிட முடியாத ஆயுதங்களையும், பணத்தையும், சிங்கள அரசுக்குக் கொடுத்து, தமிழ் ஈழ விடுதலைப்புலிகளை, போரில் தோற்கடிக்க கங்கணம் கட்டிக் கொண்டு, மன்னிக்க முடியாத துரோகங்களைத் தமிழர்களுக்குச் செய்தது. பலாலி விமான தளத்தை,இந்திய விமானப்படை பழுதுபார்த்துக் கொடுத்தது.

செஞ்சோலையில், 61 தமிழ்ச் சிறுமிகள் கொல்லப்பட்டனர். நாடாளுமன்ற உறுப்பினர்களான நான்கு தமிழர்கள், பட்டப்பகலில் சுட்டுக் கொல்லப்பட்டனர். படுபயங்கரமான தமிழ் இன அழிப்புக் கொலைகளை, இராஜபக்சே அரசு செய்தது. 

உலகின் பல நாடுகள் போர் நிறுத்தத்தை வேண்டின. தமிழ்நாட்டில், முத்துக்குமார் உள்ளிட்ட 17 தமிழர்கள், போரை நிறுத்தக் கோரி, தீ வளர்த்துத் தங்கள் உயிர்களைத் தந்தனர். பாம்புக்குத் தலையையும், மீனுக்கு வாலையும் க்hட்டுகின்ற விலாங்கு மீன் வேலையை,அப்போது முதல் அமைச்சராக இருந்த கலைஞர் கருணாநிதி செய்தார்.

மத்திய அரசின் மந்திரி பதவிகளுக்காக ஈழத்தமிழ் இனத்தைக் காவு கொடுத்தார். உச்சகட்டமாக முள்ளிவாய்க்கால் படுகொலைகள் நிகழ்ந்தன. எங்கள் போரை இந்திய அரசுதான் நடத்தியது என்று, ராஜபக்சே, இலங்கை நாடாளுமன்றத்திலேயே அறிவித்தான். ஈழத்தமிழ் இளைஞர்கள் எட்டுப் பேர், அம்மணமாக இழுத்துச் செல்லப்பட்டு, கண்களும், கைகளும்கட்டப்பட்டு, சுட்டுக் கொல்லப்பட்ட காட்சி, 2010 ஆகஸ்ட் 25 ஆம் தேதி அன்றும், இசைப்பிரியா என்னும் தமிழ் நங்கை, சிங்கள இராணுவத்தினரால், கோரமாகக் கற்பழிக்கப்பட்டுக்கொல்லப்பட்ட காட்சி, 2010 டிசம்பர் 2 ஆம் தேதியும், லண்டன் சேனல் 4 தொலைக்காட்சியில் ஒளிபரப்பானபோது,உலகத்தின் மனசாட்சி அதிர்ச்சியுற்றது. 

ஐ.நா.மன்றத்தின் பொதுச்செயலாளர் பான் கி மூன் அமைத்த மூவர் குழு அறிக்கை, சிங்கள இராணுவம் நடத்திய தமிழ் இனப் படுகொலையை, உலகுக்கு அறிவித்தது. 2011 ஆம் ஆண்டு ஜெனீவாவில் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில், இந்தியாவும்,கியூபாவும்வரிந்து கட்டிக்கொண்டு, இலங்கை அரசுக்குப் பாராட்டுத் தீர்மானம் நிறைவேற்றின. ஆனால், 2012 ஆம் ஆண்டும் , அதே துரோகத்தை இந்தியா செய்ய இருந்தபோது, அதனை எதிர்த்து முதல் கண்டனக் குரல் எழுப்பி, இந்தியப் பிரதமருக்குக் கடுமையான கண்டனத்தை, ம.தி.மு.க.பொதுச்செயலாளர் வைகோ, பிப்ரவரி 28 ஆம் தேதி அன்று அனுப்பினார்.அதன்பின்னரே, மற்றவர்களின் எதிர்ப்பு எழுந்தது. 

அமெரிக்கா, மனித உரிமைகளுக்காகக் கொண்டு வந்த தீர்மானத்தை, இந்திய அரசு நீர்த்துப் போகச் செய்து, ஒப்புக்காக, அதை நிறைவேற்ற வாக்கு அளித்தது. ஈழத்தமிழர் தேசிய இனப்பிரச்சினைக்கு, சுதந்திரத் தமிழ் ஈழமே தீர்வு ஆகும் என்று, 1995 ஜூலை 1 ஆம் தேதி, திருச்சியில் நடைபெற்ற மறுமலர்ச்சி தி.மு.க.வின் மாநில மாநாடு, தொலைநோக்கோடு தீர்மானம் நிறைவேற்றியது. அதே நிலையில், எந்த சமரசமும் செய்து கொள்ளாமல், இழ விடுதலைக்காகப் போராடுகிறது. 

முள்ளிவாய்க்காலுக்குப் பின்னரும், தமிழர் தாயகப் பகுதிகளில், சிங்களர் குடியேற்றம் வேகமாக நடக்கின்றது. சிங்கள இராணுவமும்,போலீசும், தமிழர் பகுதிகளில் குவிக்கப்பட்டு உள்ளன. அவர்களையும், சிங்களக் குடியேற்றங்களையும் அப்புறப்படுத்த வேண்டும் என்றும், சுதந்திரத் தமிழ் ஈழக் கோரிக்கையை முன்வைத்து, ஒரு பொது வாக்கெடுப்பை, அனைத்து உலக நாடுகளும், ஐ.நா. மன்றமும் நடத்த வேண்டும் என்றும், அந்தப் பொது வாக்கெடுப்பில், உலகின் பல நாடுகளில் ஏதிலிகளாக வாழும் ஈழத்தமிழர்கள், அந்தந்த நாடுகளிலேயே, அந்த வாக்குப்பதிவில் பங்கு ஏற்க வகை செய்ய வேண்டும் என்றும், 2011 ஆம் ஆண்டு, ஜூன் 1 ஆம் தேதி, பெல்ஜியம் நாட்டின் தலைநகர் பிரஸ்ஸல்ஸ் நகரில், ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றக் கட்டடத்தில் நடைபெற்ற மாநாட்டில், மறுமலர்ச்சி தி.மு.க.பொதுச்செயலாளர் வைகோ, பிரகடனம் செய்தார். இந்தக் கருத்து, உலகெங்கும் உள்ள ஈழத்தமிழர்களால் பெரிதும் வரவேற்கப்பட்டது. 

எனவே, தமிழ் இனக்கொலை புரிந்த, ராஜபக்சே கூட்டத்தை, அனைத்து உலக நீதிமன்றக் குற்றக்கூண்டில் நிறுத்தித் தண்டிப்பதையும், பொது வாக்கெடுப்பு மூலம், சுதந்திரத் தமிழ் ஈழத்தை அமைப்பதையும், ஒரே இலக்காகக் கொண்டு, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் பாடுபடும்; தமிழகத்திலும், தரணியிலும் இதற்கான ஆதரவைத் திரட்டுகின்ற பணியில், தன்னை ஈடுபடுத்திக்கொள்ளும் என இம்மாநாடு தீர்மானிக்கின்றது. 

தீர்மானம் எண்: 2 

தமிழக மீனவர்களைக் காப்பாற்றுக! தமிழக மீனவர்கள், தொடர்ந்து இலங்கைக் கடற்படையினரால், தாக்கப்படுவதும், கொல்லப்படுவதும், அன்றாட நிகழ்வாக ஆகிவிட்டது. இதுவரை 570 தமிழக மீனவர்கள், சிங்களக் கடற்படையால் கொல்லப்பட்டு உள்ளனர். ஒவ்வொரு முறையும், தமிழக அரசு, மத்திய அரசுக்குக் கடிதம் எழுதுவதும், அந்தக் கடிதங்கள் குப்பைத்தொட்டிக்குப் போவதும், வாடிக்கை ஆகிவிட்டது. நாடாளுமன்றத்தில் இதுகுறித்துப் பலமுறை ம.தி.மு.க. பொதுச்செயலாளர் குரல் கொடுத்ததோடு,இந்தியத் தலைமை அமைச்சரை நேரில் பலமுறை சந்தித்தும், தமது கண்டனத்தைப் பதிவு செய்தார். 

நாள்தவறாமல், தமிழக மீனவர்களை சிங்களக் கடற்படையினர் தாக்குவதும், ஆடைகளை அவிழ்த்து அம்மணமாக்கிக் கடலில் தூக்கிப் போடுவதும், வலைகளை அறுத்து, படகுகளை உடைத்து எரிப்பதும், அவர்களுக்கு வேடிக்கைப் பொழுதுபோக்காகி விட்டது. 

தமிழகத்துக்கும், இந்தியாவுக்கும், உரிமையான கச்சத்தீவினை, 1974 ஆம் ஆண்டு,இந்திய காங்கிரஸ் அரசு, சிங்களருக்குத் தாரை வார்த்துக் கொடுத்தது, தமிழர்களுக்கு, குறிப்பாக தமிழக மீனவர்களுக்குச் செய்த மிகப்பெரிய துரோகம் ஆகும். கடல் நீர் உப்புக்கரிப்பது, தமிழர்களின் கண்ணீரால் என்றார் அண்ணா. இன்றோ வங்கக் கடல், தமிழக மீனவர்களின் கண்ணீரும், இரத்தமும் கலந்த கடலாகி விட்டது. 

தங்களுக்கு நாதியே இல்லையா? இந்தக் கடல்தானே எங்களுக்கு வாழ்க்கை. இதிலேயே நாங்கள் மடிவதா? என்று, தமிழகத்தின் மீனவர்கள் எழுப்புகின்ற துன்ப ஓலம், நெஞ்சைப் பிளக்கிறது. எனவே, தமிழக மீனவர்களின் கண்ணீரைத் துடைக்கவும், அவர்களின் வாழ்வாதாரங்களைப் பாதுகாக்கவும், திட்டவட்டமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், மீனவர் வாழ்வு உரிமை மாநாட்டினை, 2012 நவம்பர் 24 ஆம் தேதி அன்று, தூத்துக்குடியில் நடத்துவது என்று, இம்மாநாடு தீர்மானிக்கின்றது. 

தீர்மானம் எண்: 3 

முழுமையான மதுவிலக்கே நமது இலக்கு ஒட்டுமொத்தத் தமிழகமும், இன்று நாசப் படுகுழியில் தள்ளப்பட்டு விடுமோ என்ற, பலத்த கவலை, தமிழக நலனில் அக்கறை உள்ள நன்மக்கள் அனைவர் மனதிலும் மூண்டு விட்டது. ஆம்; மது எனும் அரக்கன், இந்த நரகக்குழியில், தமிழகத்தை ஆழ்த்திவிடும் அபாயம், தலைக்குமேல் கத்தியாகத் தொங்குகிறது. 

பெருந்தலைவர் தியாகச்சுடர் காமராசர் ஆட்சிக்காலத்திலும், பேரறிஞர் அண்ணா அவர்கள் ஆட்சிக்காலத்திலும், அரசுக்கு வருமானம் என்ற நோக்கத்துக்காக, மது எனும் நச்சுப்பிடிக்குள், தமிழகத்தைச் சிக்க வைக்க அவர்கள் முற்படவில்லை. அண்ணா அவர்கள் மறைவுக்குப் பிறகு, அடுத்தடுத்து அமைந்த, தி.மு.க., அ.தி.மு.க. அரசுகள், மதுவைப் பெருக்கெடுத்து ஓடவிட்டு, சாராயக் கடைகளைத் திறந்து விட்டு, தமிழ்நாட்டைப் பாழ்படுத்தி விட்டன. 

தெருவுக்குத்தெரு ஒயின் ஷாப்புள் ஊருக்கு ஊர் டாஸ்மாக் கடைகள், இளந்தலைமறையினர், மாணவர்கள், மதுப் பழக்கத்துக்கு ஆளாகின்ற பெருந்தீங்கு நாளும் நடக்கின்றது. கலாச்சாரச் சீர்கேட்டுக்கும் பண்பாட்டு அழிவுக்கும், கொலை, கொள்ளை, கற்பழிப்பு உள்ளிட்ட பஞ்சமா பாதகங்களுக்கும் மதுவே காரணமாகி விட்டது. 

இலவசங்களை அள்ளிக்கொடுத்து, தமிழக மக்கள் காலம்காலமாகப் போற்றி வந்த, உழைப்பே உயர்வு தரும் என்ற நெறியை நாசமாக்கி, சோம்பேறிக் கூட்டத்தை, தமிழக அரசு தமிழகத்தில் வளர்த்து வருகிறது. தேர்தலில் ஓட்டு வாங்குவதற்காக, இந்த இலவசங்களை, ஆட்சி புரியும் கட்சிகள் ஊக்குவித்ததால், இலவச போதையிலும், மதுவின் போதையிலும், தமிழகம் தள்ளாடுகிறது. 

பூரண மதுவிலக்கே, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் இலக்கு. எனவே, தமிழகம் எங்கும், குறிப்பாக, கிராமப்புறங்களிலும் நகரங்களிலும், மதுவினால் விளையும் கேடுகளை விளக்கி, மக்களிடம் மதுவிலக்கு விழிப்பு உணர்ச்சியை ஏற்படுத்தி, அதன் மூலம், முழுமையான மதுவிலக்குக்கான சூழலை உருவாக்க வேண்டியது, தலையாய கடமை என்று கருதுவதால், தமிழகம் எங்கும், மறுமலர்ச்சி தி.மு.கழகத்தினர், மதுவிலக்குப் பிரச்சாரப் பயணம் மேற்கொள்வது அவசியமாகும். நெல்லை மாவட்டம் உவரியில், 1912 இல் பரிசுத்த அமலோற்பவ மாதா சபை அமைக்கப்பட்டு, மதுப்பழக்கத்தால், துன்பக்கண்ணீரில் தவிக்கும் குடும்பங்களைக் காப்பாற்ற, பேராயர் மறைதிரு அந்தோணி சூசைநாதர் அவர்களின் அரிய முயற்சியால் 1921 இல் அச்சபையை, பரிசுத்த அமலோற்பவ மதுவிலக்கு மாதா சபை என்று பெயர் மாற்றம் செய்து, அச்சபையில், மது அருந்தாதவர்களை உறுப்பினர்களாகச் சேர்த்து, எண்ணற்ற குடும்பங்களில் மதுவை ஒழித்து நிம்மதி ஏற்படுத்தினார்.

2012 ஆகஸ்ட் 15 ஆம் தேதி, இச்சபையின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. எனவே, மதுவிலக்குப் பிரச்சாரப் பயணத்தை, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ, டிசம்பர் 12 ஆம் தேதி, உவரியில் தொடங்கி, வழிநெடுக கிராமங்களில் பிரச்சாரம் செய்து கொண்டு, தூத்துக்குடி, பசுவந்தனை, கோவில்பட்டி, சாத்தூர், அங்கிருந்து 400 க்கும் மேற்பட்ட கிராமங்கள் வழியாக சிவகாசி, விருதுநகர், திருமங்கலம், திருப்பரங்குன்றம், மதுரை மாநகரில் டிசம்பர் 25 ஆம் நாள், பிரச்சாரப் பயணத்தை நிறைவு செய்வது என்றும், இதே காலகட்டத்தில் டிசம்பர் 16 ஆம் தேதி முதல், 22 ஆம் தேதி வரை, ஒரு வார காலம், கழக அமைப்புகளின் நிர்வாகிகளும், கழகக் கண்மணிகளும், கிராமப்புறங்களிலும், நகரங்களிலும் மதுவிலக்குப் பிரச்சாரப் பயணத்தை மேற்கொள்வது என்றும், இம்மாநாடு தீர்மானிக்கிறது. 

தீர்மானம் எண்: 4 

கூடங்குளம் அணு உலையை அகற்றுக நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில், மத்திய அரசு அமைத்து உள்ள அணு உலைக்கூடம், ஆழிப்பேரலை தாக்கினாலோ, அணு உலையில் தானாகவே விபத்து நேர்ந்தாலோ, நாம் கற்பனை செய்ய முடியாத பேரழிவைத் தென் தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளில் ஏற்படுத்தும் என்பதால், இந்த அணு உலையை மூட வேண்டும் என்ற நியாயமான கோரிக்கையை முன்வைத்து, மீனவ மக்களும் மற்றும் அனைத்துத் தரப்பு மக்களும் இடிந்நதகரையில் ஓராண்டுக்கும் மேலாக இந்தியத் துணைக்கண்டம் இதுவரை சந்தித்து இராத மகத்தான அறப்போராட்டத்தை நடத்தி வருகின்றனர். 

1988 நவம்பர் 21 இல், இந்திய நாடாளுமன்றத்தில், அன்றைய பிரதமர் இராஜீவ் காந்தி அவர்கள், அன்றைய சோவியத் ரஷ்யாவின் அதிபர் மிகாயில் கோர்பச்சேவ் அவர்களை வரவேற்ற உரையை வாசிக்கும்போது, பூடகமாக, மூடுமந்திரமாக, இந்திய அரசு சோவியத் ரஷ்யாவுடன் ஒரு அணு உலையை இந்தியாவில் அமைக்க, ஒப்பந்தம் செய்து இருக்கிறது என்று, இரண்டு வரிகளில் குறிப்பிட்டு இருந்தார். 

இந்திய நாடாளுமன்றத்தில் மக்கள் அவையிலும், மாநிலங்கள் அவையிலும், அணு உலைக் கூடம் அமைப்பதை எதிர்த்த ஒரேயொரு உறுப்பினர் வைகோதான் என்பது மறுக்க முடியாத உண்மை ஆகும். தமிழக மீனவர்களின் எதிர்ப்பையும் மீறி, நீங்கள் கூடங்குளத்தில்தான் அந்த அணு உலையை அமைக்கத் திட்டமிட்டு இருக்கின்றீர்கள் என்றும், அது எங்கள் தென்தமிழ்நாட்டுக்கே பேரழிவாக அமையும் என்றும், கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்துப்பேசினார். 

அமெரிக்காவில் 1979 இல் மூன்று கல் தீவு அணு உலைக் கூட விபத்து நேர்ந்து மூடப்பட்டதையும், 1986 இல் ரஷ்யாவில், செர்னோபில் அணு உலைக்கூடம் விபத்து நேர்ந்து மூடப்பட்டதையும் சுட்டிக்காட்டி வைகோ பேசினார். 2011 மார்ச் 11 ஆம் நாள், ஜப்பானில் புகுஷிமாவில், ஆழிப்பேரலையால், அணு உலைக்கூடம் அழிந்து, அணுக்கதிர்வீச்சால், பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிர் இழந்தார்கள். 

மூன்றரை இலட்சம் மக்கள் வீடு வாசல் இழந்தார்கள். உலகமே அதிர்ச்சியுற்றது. ஜப்பானில் மொத்தம் இருந்த 56 அணு உலைக்கூடங்களில், ஐம்பத்து ஐந்து அணு உலைகளை, ஜப்பான் நிரந்தரமாக மூடி விட்டது. மிச்சம் உள்ள ஒரேயொரு உலையையும், விரைவில் மூடப்போகிறது. 

மின்சாரமே இன்றி, இருளில் நாங்கள் தவித்தாலும் தவிப்போமேதவிர, அணு உலையால் இன்னும் நாங்கள் சாகத் தயாராக இல்லை என்று, ஜப்பான் பிரதமர் அறிவித்து விட்டார். ஜெர்மனியின் அதிபர் ஆங்கெலா மெர்கல் அவர்கள், 2022 ஆம் ஆண்டுக்குள், ஜெர்மனியில் உள்ள அனைத்து அணு உலைகளையும் மூடப் போவதாக அறிவித்து விட்டார். 

பெல்ஜியம் நாடும், அணு உலைகளை மூட முடிவு செய்து விட்டது. பிரான்ஸ் நாட்டில், அணு உலைகளை மூடுவது குறித்து, பொது வாக்கெடுப்பு நடத்தப் போகிறது. 1977 க்குப் பின், அமெரிக்க, புதிதாக ஒரு அணு உலையைக் கூட அமைக்கவில்லை. எனவே, கூடங்குளத்தில் அணு உலை கூடாது என்று, அணு உலை எதிர்ப்பு மக்கள் இயக்கம் நடத்தும் போராட்டம், முழுக்க முழுக்க நியாயமான, தேவையான போராட்டம் ஆகும். 

குதிரை கீழே தள்ளியதும் அல்லாமல், குழியும் பறித்ததாம் என்பதுபோல, கூடங்குளத்தில் ஏற்கனவே இரண்டு அணு உலைகளை அமைத்ததோடு, மேலும் புதிதாக, நான்கு உலைகளை அமைக்க, மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. மின்வெட்டினால் பாதிக்கப்படுகின்ற மக்கள் மத்தியில், கூடங்குளம் அணு உலை அமைந்தால், மின்சாரம் கிடைக்கும் என்ற, மிகத்தவறான கருத்து பரப்பப்படுகிறது. இந்தியாவில், மொத்தம் 21 அணு உலைக்கூடங்கள் உள்ளன. இங்கு உற்பத்தியாகும் மின்சாரம், இந்தியாவின் மொத்த மின்சார உற்பத்தியில், மூன்று விழுக்காட்டுக்கும் குறைவு என்பது, அதிர்ச்சி தரும் உண்மை ஆகும். 

கூடங்குளத்தில் உற்பத்தியாகும் 1000 மெகாவாட் மின்சாரத்தையும் தமிழ்நாட்டுக்கே கொடுக்க வேண்டும் என்று, இல்லாத ஊருக்குப் போகாத வழியை, முதல்அமைச்சர் சொல்லி, மக்களைத் திசை திருப்ப முயலுகிறார். 2011 செப்டெம்பர் 16 ஆம் தேதி, முதல் அமைச்சர் ஜெயலலிதா அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் ஆழிப்பேரலை, ஏழு மீட்டர் உயரத்துக்குத் தாவி வந்தாலும், கூடங்குளம் அணு உலைக்கு எந்த ஆபத்தும் இல்லை என்றும், பாதுகாப்பானதுதான் என்றும், எதிர்ப்பு தேவை அற்றது என்றும் கூறினார். ஆனால், இடிந்தகரை போராட்டம், உலகத்தின் கவனத்தையே ஈர்த்ததாலும், கன்னியாஸ்திரிகளும், மாற்றுத் திறனாளிகளும், தாய்மார்களும், சாகும்வரை உண்ணநிலை அறப்போர் நடத்தியதாலும், கடற்கரையோர மக்களின் கொந்தளிப்பாலும், தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு, அப்பகுதி மக்களின் அச்சம் தீரும்வரையிலும், கூடங்குளம் அணு உலையைத் திறக்க, அனுமதிக்க மாட்டேன் என்று கூறினார். 

உள்ளாட்சித் தேர்தல் முடிந்ததும், மீண்டும் தன் நிலையை மாற்றிக் கொண்டார். மத்திய,மாநில அரசுகளின் நிபுணர் குழுக்கள், மக்களைச் சந்திக்கவும் இல்லை; போராட்டக் குழுவினரின் நியாயமான கேள்விகளுக்கு விளக்கம் தரவும் இல்லை; தற்போது, கூடங்குளம் அணு உலை இயங்குவதற்கு தமிழக அரசு முழு ஒத்துழைப்பு வழங்கும் என, முதல் அமைச்சர் அறிவித்து விட்டார். 

துளிஅளவு வன்முறையிலும் ஈடுபடாமலும், கூடங்குளம் அணு உலையை எதிர்த்து, இடிந்தகரையிலும், கடலோரக் கிராமங்களிலும் மக்கள் போராடி வருகிறார்கள்.2012 செப்டெம்பர் 9 ஆம் தேதியன்று, அணு உலை முற்றுகைப் போராட்டத்தை, போராட்டக்குழுவினர் அறிவித்தபோதிலும், அணு உலையில் இருந்து அரை கிலோமீட்டர் தொலைவுக்கு அப்பால், கடற்கரை மணலில் அமைதியாக அமர்ந்து, அறப்போர் நடத்தினார்கள். 

மறுநாள், செப்டெம்பர் 10 ஆம் நாள் காலையில், அமைதிப் போராட்டம் நடத்தியவர்கள் மீது, காவல்துறை, தடியடியும், கண்ணீர்ப்புகைப் பிரயோகமும் செய்தது.இதில், பெண்கள், குழந்தைகள் உட்படப் பலர் படுகாயம் உற்றனர். மணப்பாடு கிராமத்தில், அந்தோணி ஜான் என்ற மீனவச் சகோதரர்,காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். 

இந்தப் படுகொலையைச் செய்த காவல்துறையினர் மீது, கொலைவழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவர்கள் உடனடியாகப் பணி நீக்கம் செய்யப்பட வேண்டும். இடிந்தகரை, கூத்தங்குழி மக்கள், அணு உலைக்குத் தங்கள் எதிர்ப்பைக் காட்டுவதற்காக, கடலில் இறங்கி, கழுத்து அளவு தண்ணீரில் நின்றுகொண்டு, அமைதியாக அறப்போர் நடத்தியது, உலகத்திலேயே இதுவரை எங்கும் நடைபெறாத போராட்டம் ஆகும். 

ஆனால், 13.9.2012 அனறு, இந்திய விமானப்படையின் சிறிய ரக விமானங்கள், மீனவப் பகுதிகள் மீது தாழ்வாகப் பறந்தன. அப்படிப் பறந்த ஒரு விமானம் மோதியதில், சகாயம் எனும் இடிந்தகரை மீனவர், மண்டை உடைந்து படுகாயமுற்று, இரத்தம் கொட்டி, சிகிச்சை பலன் இன்றி மாண்டு விட்டார். இந்தக் கொலைக்குக் காரணமான இந்திய விமானப்படையினர் மீது, கொலை வழக்குப் பதிவு செய்து, அவர்களைக் கைது செய்ய வேண்டும். இராணுவ அமைச்சர், ஏ.கே. அந்தோணி பதவி விலக வேண்டும். 

அந்தோணி ஜாண், சகாயம் ஆகியோர் கொல்லப்பட்டதற்கும், கடற்கரைப் பகுதி மீனவர்கள், தமிழகக் காவல்துறையினரால் தாக்கப்பட்டதற்கும், தற்போது பதவியில் இருக்கும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியைக் கொண்டு, நீதி விசாரணை நடத்த வேண்டும். 

கூடங்குளம் அணு உலையில் உற்பத்தியாகும் மின்சாரத்தை, தமிழ் இனப் படுகொலை செய்த சிங்களவர்களுக்குக் கொடுக்க, கடலுக்குஅடியில், கேபிள் பதிக்கும் வேலை வேகமாக நடக்கிறது. கூடங்குளம் அணு உலையில், யுரேனியம் எரிபொருளை நிரப்பக்கூடாது; அணு உலையை நிரந்தரமாக அகற்ற வேண்டும். தமிழக மின்சாரத் தேவைக்கு, இயற்கை எரிவாயு, சூரிய வெப்பம்,புனல்வழியாகவும், மின்வாரிய சீர்கேட்டைத் தடுத்து, மின்சாரத்தைச் சிக்கனப்படுத்தும் நவீன விளக்குகளைப் பயன்படுத்துவதன் மூலமும், மின்சாரம் வழங்க முடியும். 

எனவே, கூடங்குளம் அணு உலைக்கு 13,000 கோடி ரூபாய் செலவழித்தாகி விட்டதே என்று, சில மேதாவிகள் அங்கலாய்க்கிறார்கள். 2 ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டு ஊழலில், 1,76,000 கோடி ரூபாய், மத்திய அரசில் ஊழல் கொள்ளை நடந்து இருக்கின்றது. 

இந்தக் கொள்ளையில்,தி.மு.க.வுக்குப் பிரதான பங்கு உண்டு. நிலக்கரிச்சுரங்கங்களிலும், 1 இலட்சத்து 86000 கோடி ஊழல் கொள்ளை நடந்து இருப்பதாக, கணக்குத் தணிக்கையாளர் அறிவித்து விட்டார். தமிழ்நாட்டின் கிரானைட் கனிம வளங்களைக் கொள்ளை அடித்ததில், இலட்சக்கணக்கான கோடிகள்,தமிழ்நாட்டுக்கு இழப்பு ஆகும். எனவே, கூடங்குளத்தில் நிறையப் பணம் செலவாகிவிட்டது என்பது கவைக்கு உதவாத வாதம்ஆகும். அந்த உலையையே இயற்கை எரிவாயு மின்சாரம் தயாரிக்கப் பயன்படுத்தலாம். எனவே, கூடங்குளம் அணு உலையை அகற்றக்கோரியும், அணு சக்தி எதிர்ப்பு மக்கள் இயக்கக்துக்கு முழுமையான ஆதரவு கொடுப்பது என்றும் இம்மாநாடு தீர்மானிக்கின்றது. 

தீர்மானம் 5 

ஊழல் புரிந்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் போஃபர்ஸ் பீரங்கி பேர ஊழலால், இராஜீவ் காந்தியின் காங்கிரஸ் அரசை மக்கள் தூக்கி எறிந்தனர். சோனியா காந்தி இயக்கும், காங்கிரஸ் கட்சியின் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின், 2 ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஊழல், இமாலய ஊழல் ஆகும். இந்த ஊழலில், தி.மு.க.வின் மத்திய அமைச்சரும், தி.மு.க.நாடாளுமன்ற மாநிலங்கள் அவை உறுப்பினரும், கைது செய்யப்பட்டு, டெல்லி திகார் மத்திய சிறையில் அடைக்கப்பட்டது, தமிழ்நாட்டுக்கே பெருத்த அவமானம் ஆகும். 

அடுத்து இன்னொரு இமாலய ஊழலாக, மத்திய அரசின் நிலக்கரிச் சுரங்க ஊழல் வெளிச்சத்துக்கு வந்து உள்ளது. மத்திய அரசின் கணக்குத் தணிக்கை பொது மேலாளர் வினோத்ராய், கோல் இந்தியா, 86 நிறுவனங்களுக்கு வழங்கிய உரிமங்களால், மொத்தம் உள்ள 215 கோல் இந்தியாவின் சுரங்க வயல்களில், 150 வயல்களை, மத்திய அரசு நிலக்கரி அமைச்சகம், தனியார் நிறுவனங்களுக்கு ஒதுக்கி உள்ளது. 

மேலும், 64 நிறுவனங்கள் கொள்ளையடித்து உள்ளன. எரிசக்தி, மின்சக்தி பற்றிய தொழில்நுட்பங்களுடன் தொடர்பே இல்லாத, போலி பினாமி நிறுவனங்களுக்கு நிலக்கரி வயல்களை ஒதுக்கீடு செய்து உள்ளதன்மூலம், 1,86,000 கோடி ரூபாய், நாட்டுக்கு வருவாய் நட்டம் என்று தணிக்கையாளர் தெரிவித்து உள்ளார். 

அரசு அனல் மின் நிலையங்களுக்கு வர வேண்டிய நிலக்கரி வந்து சேராதது ஏன்? இந்தக் கேள்விகள் எல்லாம் இன்று விஸ்வரூபம் எடுத்து உள்ளன. பசிக்காக, தேவைக்காகத் திருடுகிறவனை, சட்டம் தண்டிக்கிறது, சிறையில் தள்ளுகிறது. நாட்டு மக்களின் சொத்துக்களை, இலட்சக்கணக்காண கோடிகளில் கொள்ளை அடிப்பவர்களையும் சிறையில் அடைக்க வேண்டும்; 
மக்கள் மன்றமும் தண்டிக்க வேண்டும். 

அதற்குத் தீர்வு, ஒருவரோ,இருவரோ பதவி விலகுவது அல்ல. சமுத்திரம் போன்ற ஊழல்களைச் செய்த காங்கிரஸ் கட்சியும், அதன் கூட்டணிக் கட்சிகளும், தேர்தல் களத்தில் மக்கள் மன்றத்தால் தண்டிக்கப்பட வேண்டும். 

மீண்டும் தலையெடுக்க முடியாத பலத்த அடியை அவர்களுக்கு மக்கள் கொடுத்தால்தான், அரசுப் பதவிகளுக்கு வருகிறவர்கள், ஊழல் செய்ய அஞ்சுவர். இதுகுறித்த விழிப்பு உணர்வை, பணத்துக்கு ஓட்டுப் போடும் தவறைச் செய்யாது, வாக்குச்சீட்டைப் பயன்படுத்தும் விதத்தை, மக்கள் மன்றத்தில் ஏற்படுத்த, மறுமலர்ச்சி தி.மு.கழகம் தீவிரமான பிரச்சாரப் பணியில் ஈடுபடும் என, இம்மாநாடு தீர்மானிக்கின்றது. 

தீர்மானம்:6 

தமிழக நதிநீர் ஆதாரங்களைக் காப்போம் தந்தை பெரியார் காலத்தில், பேரறிஞர் அண்ணா காலத்தில் ஏற்படாத ஆபத்து, தமிழ்நாட்டை நாலாத் திசைகளிலும் சுற்றி வளைத்து உள்ளது. கொங்குச்சீமையில், சிறுவாணி, கீழ் பவானி, பாம்பாறு, அமராவதி, தென்பாண்டி மண்டலத்தில் முல்லைப்பெரியாறு, நெல்லை மாவட்டத்தில் செண்பகவல்லி தடுப்பு அணை, குமரி மாவட்டத்தில் நெய்யாறு இடதுகரை வாய்க்கால் ஆகிய தமிழகத்தின் நதிநீர் ஆதாரப் பிரச்சினைகளில், கேரள அரசு சட்டத்துக்கு எதிராகவும், நீதிக்குப் புறம்பாகவும்,ஆண்டாண்டுக் காலமாகத் தமிழகம் அனுபவித்து வரும் பாசன உரிமைகளை அடியோடு மறுக்கும் விதத்திலும், தொடர்ந்து கேடு செய்து வருகிறது. 

அரபிக் கடலில், 2000 டி.எம்.சி. தண்ணீர் வீணாகக் கலந்தபோதிலும், தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர மாட்டோம் என்று, கேரளம், அநியாயமாக அடம் பிடிக்கிறது. மத்திய அரசும், கேரளத்தின் தீங்கான போக்குக்கு உடந்தையாகச் செயல்பட்டு, தமிழகத்துக்குத் துரோகம் இழைக்கிறது. எனவே,தமிழ்நாட்டு விவசாயிகளின் பாசன நீர் உரிமையையும், தமிழக மக்களின் குடிதண்ணீர் உரிமையையும் பாதுகாத்துக் கொள்ள நமக்கும் வழி இருக்கிறது. அதுதான்,பொருளாதார முற்றுகை ஆகும். 

கேரளத்துக்குத் தேவையான, அரிசி, பழங்கள்,பால், முட்டை, இறைச்சிக்குப் பயன்படும் கால்நடைகள், இங்கிருந்து கடத்தப்படும் மணல் அனைத்தும் தமிழகத்தில் இருந்துதான் செல்கின்றது. 

எனவே, தமிழ்நாட்டுக்குக் கேடு விளைவிக்காதீர்; முல்லைப்பெரியாறு பென்னி குயிக் அணையை உடைக்க முற்படாதீர்; தமிழகத்துக்கு வரும் தண்ணீரை அணை கட்டித் தடுக்காதீர் என்று எச்சரிக்கை செய்வதற்கு, கேரளம் செல்லும் அனைத்துச் சாலைகளிலும், போக்குவரத்தைத் தடுத்து நிறுத்தி, முற்றுகைப் போராட்டம் நடத்தி, கேரள மக்களுக்கு நிலைமையை உணர்த்தத் தொடர்ந்து முற்படுவோம்; 2013 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் முற்றுகைப் போராட்டம் நடத்துவது என்றும் இம்மாநாடு தீர்மானிக்கின்றது. 

தீர்மானம் எண்; 7 

கொலைகாரன் ராஜபக்சேவை, இந்தியா காங்கிரஸ் கூட்டணி அரசு கௌரவப்படுத்துவதை நிறுத்த வேண்டும் இலங்கைத் தீவில், தமிழ் இனப் படுகொலை செய்த, சிங்களப் பேரினவாத அரசின் அதிபர், மகிந்த இராஜபக்சேயை, முள்ளிவாய்க்காலுக்குப் பின்னர், இந்தியாவுக்கு, மத்திய காங்கிரஸ் அரசு வரவழைத்து, காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியிலும், கிரிக்கெட் விளையாட்டுப் போட்டியிலும் சிறப்புச்செய்து, தமிழர் மனங்களில் தணலைக் கொட்டியது. 

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கே அழைத்து வந்து மரியாதை செய்து, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியது. ஆனால், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திலும், லண்டன் நகரத்திலும், உரையாற்றச் சென்ற ராஜபக்சேவை ஈழத்தமிழர்கள் விரட்டி அடித்தனர். பிரித்தானிய அரசும்,ஈழத்தமிழர்களின் உணர்வுகளை மதித்து நடந்தது. 

ஆனால், இந்திய அரசுக்கு,சிங்கள அதிபர் இராஜபக்சே, புத்தர் பிரானின் ஈம எலும்புகளை, காட்சிப் பொருளாக, கொழும்பிலும், மற்ற இடங்களிலும் காட்ட கோரிக்கை விடுத்ததை இந்திய அரசு ஏற்று, 2012 மே 18 ஆம் நாள் அன்று, கொழும்பு நகரில் இந்திய அரசும், இலங்கை அரசும் ஒரு ஒப்பந்தம் செய்தன. அதனைக் கண்டித்து, மறுநாள், மே 19 ஆம் தேதி, பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங்குக்கு, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ எழுதிய கடிதத்தில், தமிழர்களைப் படுகொலை செய்த ராஜபக்சே அரசிடம், மனித குலத்துக்குக் கருணையைப் போதித்த, புத்தர் பிரானின் ஈம எலும்புகளைத் தரக்கூடாது என்று குறிப்பிட்டு இருந்தார். 

ஆனாலும், 2012 ஆகஸ்ட் 19 அன்று, இந்திய கலாச்சாரத் துறை அமைச்சர் செல்ஜா, கொழும்புக்குச் சென்று, புத்தரின் ஈம எலும்புகளை, கொடியவன் இராஜபக்சேயின் கைகளில் வழங்கிய அநீதி நடந்தது. 

நாடாளுமன்ற மக்கள் அவையில் எதிர்க்கட்சித் தலைவரான சுஷ்மா சுவராஜ்,அவரது தொகுதியான விதிஷாவில் உள்ள சாஞ்சியில், மாமன்னர் அசோகர் எழுப்பிய புத்த விகாரையில், புத்தமத கல்வி வழங்குவதற்கான மையத்தைத் தொடங்கும் அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொள்ள அழைத்தன்பேரில், இராஜபக்சே வர இருப்பதை, செப்டெம்பர் 1 ஆம் தேதி, டெல்லியில் உள்ள இலங்கைத் தூதரக விழாவில் அவரே அறிவித்தார். மத்திய அரசும், இராஜபக்சேவை வரவேற்பதற்கு ஏற்பாடுகளைச் செய்கிறது. ஈழத்தமிழர்களின் இரத்தம் தோய்ந்த கரங்களைக் கொண்ட கொடியவன் இராஜபக்சேயை சாஞ்சிக்கு வர அனுமதிக்கக்கூடாது: 

அப்படி வந்தால், ம.தி.மு.க. கருப்புக்கொடி அறப்போர் நடத்தும் என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அறிவித்தார். அதற்காக, தந்தை பெரியார் பிறந்த நாளான செப்டெம்பர் 17 அன்று, அறிஞர் அண்ணா சதுக்கத்தில் இருந்து புறப்பட்டுச் செல்ல இருக்கின்றார்கள். பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் நடைபெறும் இந்த அறவழிப் போராட்டம் வெற்றிகரமாக நடைபெற, இம்மாநாடு வாழ்த்துகளைத் தெரிவிக்கின்றது. 

தீர்மானம் எண்: 8 

நலிந்து வரும் விவசாயிகளை காப்பாற்றுக! இன்று இந்தியாவில், மிகமிக நசித்து, நலிந்து, துன்பத்தின் பிடியில் சிக்கி, விவரிக்க முடியாத, அல்லலுக்கும், அவதிக்கும், கண்ணீருக்கும் ஆளாகி வருகின்றவர்கள், விவசாயப் பெருமக்கள்தான். அதிலும், கிராமப்புறங்களில் விவசாயிகள், விவசாயத்தில், உழுதவன் கணக்குப் பார்த்தால், உழக்கும் மிஞ்சுவது இல்லை என்பது போல, எந்த இலாபமும் ,இல்லாமல்,வேறு தொழிலுக்கும் செல்ல முடியாமல், தங்கள் நிலத்திலேயே போராடி வாடுகிறார்கள். இந்தியாவில் விவசாயிகள்தான் அதிகமாகத் தற்கொலை செய்து கொள்கிறார்கள். 

கேள்வி கேட்பார் இல்லை என்ற மமதையில், விவசாயிகள் பயன்படுத்தும் இரசாயன உரங்களின் விலையை, நான்கு மடங்கு, ஆறு மடங்கு, எட்டு மடங்கு மத்திய அரசு உயர்த்தியது. கிராமப்புறங்களில் விவசாயிகளுக்குத் தங்கள் நிலங்களில், சொந்தக் குடும்பத்தினர் தவிர, வேறு ஆள்களைக் கொண்டு விவசாய வேலை செய்ய, தற்போது வழியே இல்லை. 

நூறு நாள் வேலைத் திட்டத்தில், ஒரு நாளைக்கு, 100 ரூபாய் என்றும், 130 ரூபாய் என்றும், ஊதியம் கிடைப்பதால், விவசாய வேலைக்கு ஆள்கள் வருவது இல்லை. ஏழை எளியோருக்கு உதவிட, 100 நாள் வேலத்திட்டம் உதவிடும் என்பதை வரவேற்கிறோம். ஆனால், விவசாயிகள் நிலத்திலும் 100 நாள் வேலைத்திட்டத்தைப் பயன்படுத்தலாம்; 

அதற்கு உரிய கூலியை அரசாங்கமே கொடுக்கலாம்; விவசாயிகளை வாழ வைக்கலாம்.இந்த வகையில் திட்டத்தைச் செயல்படுத்தினால் அன்றி, கிராமப்புற விவசாயிகளின் வாழ்வைப் பாதுகாக்க இயலாது என்பதால், மாநில அரசுகளும், மத்திய அரசும், இத்திட்டத்தைச் செயல்படுத்த முன்வரவேண்டும் என்று, இம்மாநாடு கேட்டுக் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது. 

தீர்மானம் எண்: 9 

அண்டை மாநிலங்களும், மத்திய அரசும், செய்யும் கேடு ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தமிழகம் அனுபவித்து வரும் காவிரி நீர் உரிமையில், கர்நாடக அரசு தொடர்ந்து அநீதி செய்து வருவதும், நமக்கு உரிய தண்ணீரைத் திறந்து விட மறுப்பதும் மட்டும் அன்றி, தென்பெண்ணை ஆற்றுக்கு வரும் தண்ணீரையும் தடுப்பதற்கு அணை கட்ட கர்நாடக அரசு திட்டமிட்டு உள்ளது. 

இது வட தமிழ்நாட்டைப் பெரிதும் பாதிக்கும். அதுபோலவே, பாலாற்றுக்கு வரும் தண்ணீரைத் தடுக்க, ஆந்திர அரசு அணை கட்ட முற்பட்டு அக்கிரமம் செய்கிறது. கேரளம், கர்நாடகம், ஆந்திரம் எனும் அண்டை மாநிலங்கள், தமிழகத்துக்கு உரிய சட்டப்பபடியான தண்ணீரைத் தர மறுப்பதும், அம்மாநிலங்களில் புதிய அணைகளைக் கட்ட முற்படுவதுமான ஆபத்து சூழ்ந்து வருகின்ற வேளையில், அணை பாதுகாப்பு என்ற பெயரில், மத்தியில் உள்ள கேரள அரசு அதிகாரிகள் தயாரித்துக் கொடுத்த ஒரு மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு தருணம் பார்த்துக் கொண்டு இருக்கின்றது. 

இந்த மசோதா சட்டம் ஆக்கப்பட்டால், அந்தந்த மாநிலங்களில் உள்ள நீர்த்தேக்கங்கள் குறித்து, அம்மாநிலங்களில் உள்ள அரசுகளே, பராமரிக்கவோ, ஏன் அணைகளை உடைக்கவோ கூட அதிகாரம் பெற்றவையாகி விடும். இது தமிழ்நாட்டின் மீது வீசப்படும் கொடுவாள் ஆகும். இப்படிப்பட்ட ஒரு கொடிய மசோதாவைச் சட்டமாக்கக் கூடாது என்று, கடந்த ஆண்டு, 2012 டிசம்பர் 5 ஆம் தேதியன்று, இந்தியப் பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங் அவர்களை, மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நேரில் சந்தித்துக் கூறியதோடு, அப்படிச் சட்டமாக்கினால், அந்தந்த மாநில அரசுகள், தங்கள் எல்லைக்கு உட்பட்ட மத்திய அரசு நிறுவனங்களைத் தங்களுக்கே சொந்தமாக்கிக் கொள்ளும் ஆபத்து நேரிடும் என்றும், சோவியத் ஒன்றியம் உடைந்ததுபோல, இந்தியா உடைந்து போய்விடும் என்பதை எச்சரிப்பது தனது கடமை என்றும் தெரிவித்தார். 

எனவே, அணை பாதுகாப்பு மசோதாவை, மத்திய அரசு எக்காரணத்தை முன்னிட்டும் சட்டமாக ஆக்க மத்திய அரசு முயற்சிக்கக்கூடாது என இம்மாநாடு கேட்டுக் கொள்கின்றது. 

தீர்மானம் எண்:10 

சில்லரை வணிகத்தில் அயல் நாட்டு நேரடி முதலீடு அனுமதியைத் திரும்பப் பெற வேண்டும் மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகள் எல்லையில்லாமல் நீண்டுகொண்டே போகின்றன. சில்லரை வணிகத்தில் 51 விழுக்காடு அயல்நாட்டு நிறுவனங்கள் முதலீடு கூடாது என்று நாடு முழுமையும் கடுமையான எதிர்ப்பு அலை எழுந்த பின்பும், மத்திய அரசு விடாப்பிடியாக அதனை நடைமுறைப்படுத்த முடிவு எடுத்து உள்ளது, கடும் கண்டனத்திற்கு உரியது ஆகும். 

இந்தியாவில், விவசாயத்துக்கு அடுத்தபடியாக கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரமாக இருப்பது சில்லறை வணிமே. தமிழ் நாட்டில் சில்லரை வணிகத்தின் மூலம் இருபது இலட்சத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பிழைத்துக்கொண்டு இருக்கின்றன. 

இந்த நிலையில், உப்பு, புளி, மிளகாய், மளிகை வணிகத்தில் கூட, அமெரிக்காவின் வால் மார்ட், மெட்ரோ,எஸ்மோ, கேர்போர் போன்ற, பெரும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு, இந்தியச் சந்தையைத் திறந்துவிடுவதன் மூலம், சாதாரண எளிய மக்களின் வாழ்வாதாரத்தைப் பறித்து, வயிற்றில் அடித்துள்ளது மத்திய அரசு. 

இந்தியா போன்ற நாடுகளில் உள்ள மனிதவளத்தைப் பயன்படுத்தி, சந்தையில் கொள்ளை அடிக்கவே, அயல்நாட்டு நிறுவனங்கள் வருகின்றனவே ஒழிய, மக்களுக்குச் சேவை செய்வதற்கு அல்ல. ஆண்டுக்கு 25 இலட்சம் கோடி ரூபாய் சில்லரை வணிகத்தில் புழங்குவதால் தான், அயல்நாட்டு நிறுவனங்கள் இதில் ஆர்வம் காட்டுகின்றன. 

பொருளாதார நெருக்கடிகளாலும், விலைவாசி உயர்வாலும் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது அயல்நாட்டு நிறுவனங்கள் விலையை தாறுமாக விருப்பம்போல், நிர்ணயித்துக்கொண்டு, கொள்ளை அடிக்க மத்திய அரசு அனுமதித்து உள்ளது. 

ஏற்கனவே பன்னாட்டு நிறுவங்களின், உரம், பூச்சி மருத்துக் கொள்ளையால், விவசாயத் தொழில் நொறுங்கிக் கிடக்கின்றது. சில்லரை வணிகத்தையும் அவர்களுக்குத் தாரை வார்கின்றது. வணிகத்துக்காக வருகிறோம் என்று கூறிக்கொண்டு, இந்தியாவுக்கு உள்ளே நுழைந்த கிழக்கு இந்தியக் கம்பெனி, கடைசியில் இந்தியாவையே கைப்பற்றி அடிமைப் படுத்தியது. 

அதுபோலத்தான், இப்போது அயல்நாட்டு நிறுவனங்களிடம் இந்தியாவின் சில்லரை வணிகத்தை ஒப்படைத்தால் எதிர்காலத்தில் இந்திய சில்லரை வணிகர்கள், பன்னாட்டு நிறுவனங்களின் பணியாளர்களாக மாறக்கூடிய நிலை ஏற்பட்டுவிடும். எனவே, இந்திய மக்களை மீண்டும் அடிமைகளாக ஆக்குகின்ற இந்த முடிவை, மறுமலர்ச்சி தி.மு.கழகம் வன்மையாகக் கண்டிப்பதுடன், உடனடியாக திரும்பப் பெறவேண்டும் என இம்மாநாடு வலியுறுத்துகின்றது. 

‘தாயகம்’ 
தலைமைக் கழகம் 
சென்னை-8 
மறுமலர்ச்சி தி.மு.க.
[vuukle-powerbar-top]

Recent Post