Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

ராஜபக்சேவிற்கு அழைப்பு விடுத்த சுஷ்மாவின் வீட்டை முற்றுகையிட இந்து மக்கள் கட்சி முடிவு


ராஜபக்சேவிற்கு அழைப்பு  விடுத்த  சுஷ்மாவின் வீட்டை முற்றுகையிட இந்து மக்கள் கட்சி முடிவு! 

இந்து மக்கள் கட்சி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டதாவது...  

சிறிலங்கா அதிபர் மகிந்த ராசபக்சவை தனது தொகுதிக்கு அழைத்து புத்தவிகாரைக்கு அடிக்கல் நாட்ட திட்டமிட்டுள்ள இந்திய நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவியும் பாரதிய ஜனதா கட்சி தலைவியுமான சுஷ்மா சுவராஜின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த இந்து மக்கள் கட்சி முடிவு செய்திருக்கிறது. 

எதிர்வரும் 21ஆம் திகதி சிறிலங்கா அதிபர் ராஜபக்ச இந்திய நாடாளுமன்ற எதிர்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் அவர்களின் அழைப்பின் பேரில் அவரது சொந்தத் தொகுதி மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள சாஞ்சியில் நடைபெறும் புத்த மத விழாவிற்கு பங்கேற்க வருகை தருகிறார். இது நாடு முழுவதும் உள்ள இந்துக்களுக்கு அதிர்ச்சியையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் சுமார் இரண்டு லட்சம் இந்துக்களை இனப்படுகொலை செய்த போர்க்குற்றவாளி இராஜ பக்ஷே இன்றளவும் இலங்கைத் தமிழ் இந்துக்களுக்கு எவ்வித சம உரிமையும் வழங்கவில்லை. புத்த மதத்தின் பேரில் இலங்கைத் தமிழ் இந்துக்களின் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட கோயில்களை இடித்து தள்ளி பல கோயில்களை புத்தமத விகாரங்களாக மாற்றி வருகின்றார். சமீபத்தில் கூட இலங்கை இந்துத் தமிழர்கள் தங்கள் கோயில்களில் இந்துமத அடிப்படை சடங்குகளான காதணி விழா, ஆடு கோழி பழியிடுதல் உள்ளிட்ட இந்து சமய பூஜைகளை நடத்த தடை விதித்துள்ளார். சீனாவிற்கு இராணுவ தளம் அமைக்க இடம் கொடுத்து இலங்கை மண்ணில் இந்தியாவிற்கு எதிரான சதிச் செயல்களை ஊக்கு வித்து வருகிறார். 

இலங்கை கடற்படை அன்றாடம் இந்தியத்தமிழ் மீனவர்களை தாக்குவதும் படுகொலை செய்வதும் தொடர்கிறது. போரில் பாதிக்கப்பட்ட அப்பாவி இந்துத் தமிழர்கள் இன்றும் முள்வேலி முகாம்களிலேயே உள்ளனர். இந்துத் தமிழர்களின் பூர்வீக நிலங்களான வயல்வெளிகள் குடியிருப்புக்கள் ஆகியவை இலங்கை இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டு சிங்கள குடியேற்றங்கள் மூலம் பௌத்த மயமாக்கப்படுகின்றன.

 பாரதிய ஜனதா கட்சி கடைபிடித்து வரும் இந்துத்துவ கொள்கைகளுக்கு விரோதமாகவும் வாஜ்பாய் அவர்கள் கடைபிடித்த வெளியுறவுக் கொள்கைகளுக்கு மாறாகவும் சுஷ்மா சுவராஜ் செயல்படுகிறார். காங்கிரசின் இந்த விரோத வெளியுறவுக் கொள்கைகளை சுஷ்மா சுவராஜ் கடைபிடிக்கத் துவங்கியுள்ளார். காங்கிரஸ் மற்றும் இராஜ பக்ஷேவின் இராஜ தந்திர நடவடிக்கைகளுக்கு சுஷ்மாசுவராஜ் பலியாகி உள்ளார். தமிழக பா.ஜ.க-வின் கருத்துக்களை உதாசீனப்படுத்தி உள்ளார். இலங்கை கடற்படையில் படுகொலை செய்யப்பட்ட தமிழக மீனவர்களுக்கு கடந்த வருடத்தில் நேரடியாக வந்து நிதி உதவி செய்த சுஷ்மா சுவராஜ் இத்தகைய நிலைப்பாட்டை மேற்கொண்டு உள்ளது தமிழக இந்துக்களுக்கு வேதனையை ஏற்படுத்தியுள்ளது. 

ராஜபக்சவின் இந்திய வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், சுஷ்மா சுவராஜின் இந்து தமிழர் விரோத கொள்கைகளை கண்டித்தும் சுஷ்மா சுவராஜ் வீடு முற்றுகை போராட்டத்தை டெல்லியில் உள்ள இந்து அமைப்புக்களுடன் இணைந்து எதிர்வரும் வாரத்தில் நடத்திட தீர்மானித்துள்ளோம். இதற்கான ஏற்பாடுகளை இந்து மக்கள் கட்சி டெல்லி மாநிலக்கிளை தலைவர் வழக்கறிஞர் சங்கர் முன்னின்று நடத்துகிறார். தமிழகத்திலிருந்து இ.ம.க தொண்டர்களும் முக்கிய நிர்வாகிகளும் தோழமை அமைப்புக்களின் நிர்வாகிகளும் சுஷ்மா வீடு முற்றுகை போராட்டத்தில் பங்கேற்க உள்ளனர். விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும். இந்துசமய உணர்வாளர்கள் அனைவரும் ஒத்துழைப்புத்தர வேண்டுகிறோம்.

 அர்ஜூன் சம்பத் 
(இந்து மக்கள் கட்சி).
[vuukle-powerbar-top]

Recent Post