Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

இன்றைய முழு அடைப்பின் முழு விபரம் (படங்கள்)

டீசல் விலை உயர்வு, சில்லரை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, எதிர்க்கட்சிகள் இன்று நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

நாடு தழுவிய வேலைநிறுத்தம் : டீசல் விலை உயர்வு,சமையல் எரிவாயு சிலிண்டருக்கான கட்டுப்பாடு, சில்லறை வணிகத்தில் அந்நிய நேரடி முதலீட்டிற்கு அனுமதி அளித்த விவகாரத்தில் மத்திய அரசு கடும் எதிர்ப்பை சந்தித்து வருகிறது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைகளுக்கு எதிராக பாரதிய ஜனதா, இடதுசாரி கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் இன்று தனித் தனியாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. 

நிதின் கட்கரி கருத்து : மத்திய அரசுக்கு எதிரான எங்களது எதிர்ப்பை அமைதியாகவும், ஜனநாயக ரீதியிலும் பதிவு செய்கிறோம். மம்தா, முலாயம் மற்றும் திமுகவும், சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிக்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிராக சரியான நிலையை எடுத்துள்ளனர் என கருத்தை பதிவு செய்துள்ளார் பாரதிய ஜனதா தலைவர் நிதின் கட்கரி. 

வலுவான எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும் : மத்திய அரசின் இந்த நடவடிக்கைகள் மக்களுக்கு எதிரானவை என்று தெரிவித்துள்ள இடதுசாரிகள், இதன் மூலம் மன்மோகன் சிங் தலைமையிலான அரசு பதவியில் இருப்பதற்கான தகுதியை இழந்துவிட்டதாக குற்றம்சாட்டி உள்ளது. இது போன்ற பிரச்னைகள் அமைச்சர்கள் குழுவுக்கு அனுப்புவதில்லை. குழுவும் ஏன் எதற்கு என்று கேள்வி எழுப்புவதில்லை. எனவே, சில்லறை வணிகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக்கும் முடிவே தவறாக எடுக்கப்பட்டுள்ளது எனக் கூறியிருக்கிறார் மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் சீத்தாராம் யெச்சூரி. 

இயல்பு வாழ்க்கை பாதிப்பு : இன்று நடைபெறும் முழு வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு சமாஜ்வாதி, பிஜு ஜனதா தளம், மதச்சார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளதால், பல்வேறு மாநிலங்களில், குறிப்பாக வடமாநிலங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. 

உ.பி., பீகாரில் ரயில் மறியல் : உத்தரப்பிரதேசத்தில் ஆளும் சமாஜ்வாதி கட்சியினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்று அதிகாலை அலகாபாத் ரயில் நிலையத்தில் திரண்ட அக்கட்சித் தொண்டர்கள் ரயில்களை மறித்து போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள், டீசல் விலை உயர்வைத் திரும்பப் பெற வேண்டும், சமையல் எரிவாயு சிலிண்டர் மீதான கட்டுப்பாடுகளைத் தளர்த்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இந்தப் போராட்டத்தால், உத்தரப்பிரதேச மாநிலத்தில் பல பகுதிகளில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் பந்த் நிலவரம் : வழக்கம் போல் சென்னை : சென்னையில் பந்த்துக்கு பெருமளவில் ஆதரவு இல்லை என்றே சொல்ல வேண்டும். பேருந்துகள் வழக்கம் போல் இயக்கப்படுகின்றன. கடைகளும் பெரும்பாலும் திறந்திருக்கின்றன. பள்ளிகளுக்கு ஏற்கனவே பள்ளிக் கல்வித் துறை சுற்றரிக்கை அனுப்பியிருப்பதால், பள்ளிகள் வழக்கம் போல் இயங்குகின்றன. 

கோயம்பேட்டில் வர்த்தகம் பாதிப்பு : ஆனால் கோயம்பேடு மார்க்கெட் மட்டும வெறிச்சோடி காணப்படுகிறது. வியாபாரிகள், வணிகர்கள் முழு ஆதரவு தெரிவித்திருப்பதால் கடைகள் மூடப்பட்டிருக்கின்றன. லாரிகள் இயக்கப்படவில்லை. 

கரூர் : டீசல் விலை உயர்வைக் கண்டித்து, கேரளாவில் நடைபெற்று வரும் லாரி ஓட்டுநர்கள் வேலைநிறுத்தம் காரணமாக, கரூரில் இருந்து கேரளாவுக்கு, செல்லும் பொருட்கள் தேக்கமடைந்துள்ளன.இதனால் தொழிலாளர்கள் பலர் வேலையை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான போர்வைகள், திரைச்சீலைகள், கால் மிதியடிகள், மாடுகள் உள்ளிட்டவை தேக்கமடைந்துள்ளதால், வாடிக்கையாளர்களுக்கு உரிய நேரத்தில் விநியோக்கிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. லாரிகள் புக்கிங் செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தீபாவளிப் பண்டிகை நெருங்கும் நேரத்தில், இந்த நிலை நீடிப்பது, தங்களை பெரும் பாதிப்புக்கு உள்ளாக்கும் என்று வியாபாரிகள் வருத்தம் தெரிவிக்கின்றனர். 

அரியலூர்: அரியலூரில்6 சிமெண்ட் தொழிற்சாலைகள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளன. இதனால் 2 லட்சம் மெட்ரிக் டன் சிமெண்ட் தேக்கமடைந்துள்ளன. 

திருச்சி நிலவரம் : திருச்சியில் இன்றைய நாடு தழுவிய போராட்டத்திற்கு பரவலாக ஆதரவு தெரிவிக்கப்பட்டிருக்கிறது. திருச்சி பெரிய கடை வீதியில் இருக்கும் 2000க்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டு இருக்கின்றன. வணிகர் சங்கம், சிறு மற்றும் குறு வர்த்தக சங்கங்கள் இணைந்து நாடு தழுவிய போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இதனால் திருச்சியில் காந்தி மார்க்கெட் வெறிச்சோடி காணப்படுகிறது. கடைகள் பெரும்பாலும் அடைக்கப்பட்டிருந்தாலும், போக்குவரத்தில் பெரும் அளவில் பாதிப்பு இல்லை. திருச்சியில் ரயில் மறியலில் ஈடுபடப்போவதாக பல்வேறு தரப்பு அறிவித்துள்ளதால் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. 

நெல்லையில் பாதிப்பு இல்லை : நெல்லையில் நாடு தழுவிய பந்த் காரணமாக இயல்பு வாழ்க்கை சிறிதளவு கூட பாதிக்கப்படவில்லை என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அனைத்து வாகனங்களும் வழக்கம் போல் இயங்குவதாகவும், கடைகள் திறக்கப்பட்டிருப்பதாகவும், பள்ளிகள் ஏற்கனவே அரசு வெளியிட்ட அறிக்கைக்கு ஏற்ப இயங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மதுரையில் முழு ஆதரவு : சில்லறை வணிகத்தில் 51 % அந்நிய முதலீட்டை எதிர்த்து நடைபெறும் பந்த்திற்கு மதுரையில் முழு ஆதரவு அளிக்கப்பட்டுள்ளது. லாரிகள் இயங்கவில்லை. வணிகர் சங்கங்கள் முழு ஆதரவு அளித்துள்ளது. பள்ளி, கல்லூரிகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

கிருஷ்ணகிரியிலும் கடையடைப்பு : நாடு தழுவிய வேலைநிறுத்தம் கிருஷ்ணகிரியிலும் எதிரொலித்துள்ளது. கிருஷ்ணகிரியில் கடைகள் அடைக்கப்பட்டிருக்கின்றன. அண்ணா தொழிற்சங்கத்தைச் சேர்ந்த ஓட்டுநர்கள் மட்டும் பேருந்துகளை இயக்கி வருவதாக கிருஷ்ணகிரி போக்குவரத்து பணிமணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் இயங்குகின்றன. கிருஷ்ணகிரி மாவட்டம் தமிழகம் – கர்நாடக எல்லையில் இருப்பதால், தமிழகத்தில் இருந்து கர்நாடகாவிற்கு அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிச் செல்லும் லாரிகள் இயங்கவில்லை. 

தொழில் நகர் திருப்பூரில் பாதிப்பு : தொழில் நகரான திருப்பூரில், இன்றைய நாடு தழுவிய ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மின்வெட்டால் பாதிக்கப்பட்டுள்ள திருப்பூர் தொழிற்சாலைகள் தற்போது டீசலை நம்பியிருக்கின்றன. இந்நிலையில் டீசல் விலையும் ஏற்றப்பட்டிருப்பது அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. எனவே இன்றைய பந்த்துக்கு வணிகர்கள் சங்கங்கள் முழு ஆதரவு தெரிவித்துள்ளன. 5000க்கும் மேற்பட்ட பனியன் நிறுவனங்கள் பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. 

தமிழக அரசியல் கட்சிகள் ஆதரவு : மத்திய அரசைக் கண்டித்து தேசிய அளவில் இன்று நடைபெறும் முழுஅடைப்புப் போராட்டத்திற்கு தமிழகத்தில் முக்கிய அரசியல் கட்சிகளும், பல்வேறு சங்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன. திமுக, தேமுதிக, பாரதிய ஜனதா, மதிமுக, பாமக, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் போராட்டத்தில் பங்கேற்கின்றன. மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இடம்பெற்றுள்ள திமுக, அமைச்சரவையில் இருந்து வெளியேறுவது என்ற பேச்சு இப்போதைக்கு எழவில்லை என்று கூறியுள்ளது. சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டுக்கு அனுமதிப்பது குறித்து தமிழக அரசு எடுக்கும் நிலைப்பாட்டை பொறுத்து அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்ளப்படும் என்றும் அக்கட்சி தெரிவித்துள்ளது. 

பல்வேறு சங்கங்கள் ஆதரவு : தமிழ்நாடு லாரி உரிமையாளர் சங்கம், தமிழ்நாடு செங்கல் உற்பத்தியாளர் சங்கம் உள்பட பல்வேறு சங்கங்களும் முழு அடைப்புப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன. தொமுச, சிஐடியூ, ஏஐடியூசி உள்ளிட்ட தொழிற்சங்கங்களும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளதால் சாலைகள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன. 

லாரி உரிமையாளர்கள் எச்சரிக்கை : மத்திய அரசுக்கு 21 நாள் கால அவகாசம் அளிக்கப் போவதாகவும், அதற்குள் டீசல் விலையைக் குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் அடுத்த மாதம் 19ம் தேதி முதல் தேசிய அளவில் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாகவும் லாரி உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர். 

சில்லரை வர்த்தகர்கள் ஆதரவு : தமிழ்நாடு வணிகர் சங்கம், தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை, ஓட்டல் உரிமையாளர் சங்கம் உள்ளிட்ட பல சங்கங்களும் போராட்டத்தில் பங்கேற்றுள்ளன. இதனால், தமிழகம் முழுவதும் பெரும்பாலான கடைகள், வர்த்தக நிறுவனங்கள், ஓட்டல்கள் இன்று திறக்கப்படவில்லை. 

விசைப்படகு மீனவர்கள் வேலைநிறுத்தம் : சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட் உரிமையாளர்களும் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதேநேரத்தில், டீசல் விலை உயர்வைக் கண்டித்து புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம், கோட்டைப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் 7வது நாளாக இன்றும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
[vuukle-powerbar-top]

Recent Post