Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

ராஜபக்சே இந்தியா வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சேலத்தில் தீக்குளித்தவரின் முழு விபரம்

மத்திய பிரதேச மாநிலத்தில் நடக்கும் புத்த கல்வி நிலையங்களின் அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொள்வதற்கா வருகிற 21-ந் தேதி இலங்கை அதிபர் ராஜபக்சே இந்தியா வருகிறார். இதற்கு தமிழகம் மற்றும் புதுவையில் அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

ராஜபக்சே இந்தியா வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சேலத்தில் இன்று ஆட்டோ டிரைவர் ஒருவர் தீக்குளித்தார். அவரது பெயர் விஜயராஜ் (வயது 26). சேலம் நெத்திமேடு அருகே உள்ள காமராஜர் நகரைச் சேர்ந்தவர். ஷேர் ஆட்டோ டிரைவரான விஜயராஜ் தினமும் சேலம் பழைய பஸ்நிலையத்தில் இருந்து சேலம் கொண்டலாம்பட்டி பை-பாஸ் வரை ஆட்டோ ஓட்டி வந்தார்.

இன்று அதிகாலை 5 மணி அளவில் சேலம் பழைய பஸ்நிலையம் பகுதியில் உள்ள ஷேர் ஆட்டோ நிறுத்தும் இடத்திற்கு விஜயராஜ் வந்தார். பின்னர் அவர் அங்குள்ள டீக்கடை ஒன்றிற்கு சென்று டீக்குடித்தார். அப்போது அவர் திடீரென ஆட்டோவில் வைத்து இருந்த பெட்ரோல் பாட்டிலை எடுத்தார்.

திடீரென அவர் `இந்தியாவிற்கு ராஜ பக்சே வரக்கூடாது, அவர் வருவதை அரசு தடுக்க வேண்டும்' என்று கோஷமிட்டவாறு தனது உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதனால் உடல் முழுவதும் தீ பற்றி எரிந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த டீக்கடையில் இருந்தவர்களும், ஸ்டேண்டில் இருந்த ஆட்டோ டிரைவர்களும் ஓடிவந்து தீயை அணைக்க முயன்றனர்.

ஆனால் அதற்குள் விஜயராஜ் ரோட்டில் தேங்கி இருந்த மழை நீரில் விழுந்து புரண்டு `காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள்' என கதறினார். உடனே இதுகுறித்து 108 ஆம்புலன்ஸ்சுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பின்னர் அவர் ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விஜயராஜ் உடலில் 80 சதவீதத்திற்கு மேல் தீக்காயம் ஏற்பட்டுள்ளதால் அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக அவருக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள் தெரிவித்தனர். இச்சம்பவம் சேலத்தில் இன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தீக்குளித்தது குறித்து விஜயராஜ் `மாலை மலர்' நிருபரிடம் கூறியதாவது:-

ராஜபக்சே இந்தியா வருவதை யாரும் விரும்பவில்லை. இதனால் அவரது வருகையை தடுக்க வேண்டும், இதை வலியிறுத்தி தான் நான் தீக்குளித்தேன் என்று கூறினார்.

இச்சம்பவம் தொடர்பாக சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் கே.சி.மஹாலி உத்தவின்பேரில் உதவி கமிஷனர்கள் பெரியசாமி, ரவிசங்கர், இன்ஸ்பெக்டர் சூரியமூர்த்தி மற்றும் சேலம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். விஜயராஜ் தந்தை பெயர் தங்கவேலு, தாயார் பெயர் பெருமாயி.

இவருடன் பிறந்தவர்கள் 4பேர். விஜயராஜ் 9-ம் வகுப்பு வரை படித்துள்ளார். தற்போது அவர் சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கத்தில் உறுப்பினராக இருந்து வருகிறார். விஜயராஜ் தீக்குளித்ததை அறிந்த அவரது பெற்றோரும் , ஆட்டோ டிரைவர்களும் திரளாக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு திரண்டு வந்தனர்.

விஜயராஜ் தீக்குளித்தது குறித்து ஆட்டோ டிரைவர்கள் சிலர் கூறியதாவது:-

இலங்கை தமிழர்கள் மீது விஜயராஜ் பற்றாக இருப்பார். எப்போதும் இலங்கை பிரச்சினை பற்றித்தான் பேசி கொண்டார். இன்று வழக்கத்திற்கு மாறாக அதிகாலையிலேயே பஸ் நிலையத்திற்கு வந்து விட்டார். விஜயராஜை பார்த்து நாங்கள் என்ன இன்று சீக்கிரம் வந்துவிட்டாய் என கேட்டதற்கு சிரித்தார்.

ஆனால் பதில் ஏதும் கூற வில்லை. சுமார் 5மணி அளவில் விஜயராஜ் என்ன நினைத்தாரோ பெட்ரோலை தன்மீது கொட்டி தீவைத்து கொண்டார். ராஜபக்சேவை கண்டித்து கோஷம் எழுப்பினார். நாங்கள் அவருக்கு ஆறுதல் கூறி ஆஸ்பத்திரியில் சேர்த்தோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இந்த சம்பவம் குறித்து விஜயராஜின் பெற்றோர் கூறியதாவது:-

சேலம் பழைய பஸ் நிலையத்தில் இருந்து நேற்று இரவு 11மணி அளவில் விஜயராஜ் வீட்டிற்கு வந்தான். இன்று அதிகாலையிலேயே எழுந்து சென்று விட்டான். நாங்கள் ஏன் இப்போதே போகிறாய் என கேட்டதற்கு ஏதும் சொல்லவில்லை. என்னவோ ஏதோ என நாங்கள் நினைத்து இருந்தோம். அப்போது தான் ஆட்டோ டிரைவர்கள் சிலர் எங்கள் வீட்டிற்கு வந்து விஜயராஜ் தீக்குளித்து விட்டார் என தெரிவித்தனர்.

இதை கேட்டு நாங்கள் அதிர்ச்சி அடைந்தோம். பின்னர் விஜயராஜை ஆஸ்பத்திரிக்கு சென்று பார்த்தோம். விஜயராஜ் வீட்டிலும், அக்கம் பக்கத்திலும் நன்றாக பழகுவான். ஏழைகளுக்கு தேடி தேடி சென்று உதவி செய்வான், அவன் குணமாகி வர வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கண்ணீர் மல்க கூறினர்.
[vuukle-powerbar-top]

Recent Post