Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

கூடுதல் சிலிண்டர்களுக்கு மானியம் தரப் போவதாக டெல்லி மாநில அரசு அறிவிப்பு

சமையல் எரிவாயு சிலிண்டருக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பை உருவாக்கியுள்ளது. இந்நிலையில், டெல்லி மாநில அரசு தரப்பில் கூடுதல் சிலிண்டர்களுக்கு மானியம் தரப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது டெல்லி அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிலிண்டர் கட்டுப்பாட்டுக்கு காரணம்? எல்.பி.ஜி நுகர்வோர்களில் 44 சதவிகிதத்திற்கும் அதிகமானோர் ஆண்டுக்கு 6 அல்லது அதற்கு குறைவான சிலிண்டர்களை பயன்படுத்துவதாகவும், இதன் அடிப்படையில்தான் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் பெட்ரோலிய அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனால், ஆண்டுக்கு 6 சிலிண்டர்களை மட்டுமே மானிய விலையில் பெற முடியும் என்பதால், நடுத்தர மற்றும் ஏழை மக்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகினர். 

இந்நிலையில், சிலிண்டர்களுக்கான கட்டுப்பாடு, சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு உள்ளிட்ட விவகாரங்களில் வெளியிடப்பட்ட அறிவிப்புகளை திரும்பப் பெற மாட்டோம் என்று மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் தெளிவுபடுத்தியுள்ளார்.

இதனிடையே, மாநில அரசு சார்பில் 3 சிலிண்டர்களுக்கு மானியம் வழங்குவதாக டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித் அறிவித்துள்ளார். மேலும் டெல்லியில் 3.25 லட்சம் குடும்பங்கள் சமையல் எரிவாயு சிலிண்டர்களை பயன்படுத்தி வருகின்றனர். அவர்களுக்கான மானிய விலை சிலிண்டர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்த்தப்படுகிறது. மத்திய அரசு தரப்பில் 6 சிலிண்டர்களுக்கும், மாநில அரசு தரப்பில் 3 சிலிண்டர்களுக்கும் மானியம் வழங்கப்படும் என ஷீலா தீட்சித் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு : டெல்லியை பின்பற்றி மற்ற மாநிலங்களும் சிலிண்டருக்கான மானியத்தை வழங்கலாம் என்ற கோரிக்கையை மறைமுகமாக வலியுறுத்துவதற்காகவே காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முதல்வர் ஷீலா தீட்சித் இத்தகைய அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே, நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு முறைகேட்டை திசை திருப்புவதகற்காகவே, இதுபோன்ற அடுத்தடுத்து பல திருப்பங்களை மத்திய அரசு ஏற்படுத்தி வருவதாக பாரதிய ஜனதா குற்றட் சாட்டியுள்ளது.

நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ரத்து செய்ய வேண்டும், இதுகுறித்து சுதந்திரமாக விசாரணை நடத்த வேண்டும் என அனைவரும் வலியுறுத்தி வந்த நிலையில், டீசல் விலை உயர்த்தப்பட்டது. அந்த பிரச்சனை ஓயும் முன்னரே, சமையல் எரிவாயுகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன என கருத்து தெரிவித்துள்ளார் பாஜக செய்தித் தொடர்பாளர் ஷாநவாஸ் உசேன்.
மேலும் 6 சிலிண்டர்களுக்கு மானியம் : 

இந்நிலையில், கோவாவில் ஆண்டு வருமானம் 3 லட்சத்திற்கு கீழ் இருப்பவர்களுக்கு கூடுதலாக 6 சிலிண்டர்களுக்கு மாநில அரசு மானியம் வழங்கும் என பாரதிய ஜனதா அரசு அறிவித்துள்ளது. இதனிடையே, சமையல் எரிவாயு சிலிண்டருக்கான கட்டுப்பாட்டை 10 ஆக அதிகரிப்பது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
[vuukle-powerbar-top]

Recent Post