Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

இலங்கையர்கள் தொழில் வாய்ப்புக்காகவே அகதிகள் கடல்வழி பயணம் செய்கின்றனர்

இவ்வாண்டில் குறிப்பாக கடந்த சில மாதங்களில் கடல் வழியாக 3670 இற்கும் மேற்பட்ட
இலங்கையர்கள் புகலிடம் கோரி அவுஸ்திரேலியாவை நோக்கிப் பயணம் செய்துள்ளனர். கடந்த ஆண்டு 211 பேர் மட்டுமே கடல் வழியாக அவுஸ்திரேலியாவைச் சென்றடைந்தனர். ஆனால் 2009ல் இலங்கையில் நீண்ட காலம் தொடரப்பட்ட உள்நாட்டுப் போர் நிறைவடைந்த பின்னர், பல மடங்கான இலங்கையர்கள் அவுஸ்திரேலியாவுக்கு தப்பிச் செல்வதற்கான காரணம் என்ன?

"பொருளாதாரமே இதற்கான முக்கிய காரணம். அதாவது தொழில் வாய்ப்புக்களைத் தேடியே பெருமளவான இலங்கையர்கள் அவுஸ்திரேலியா நோக்கிப் படையெடுக்கின்றனர்" என அவுஸ்திரேலியாவுக்கான இலங்கைத் தூதர் திசார சமரசிங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் இலங்கையில் வாழும் சிறுபான்மை தமிழ் மக்கள் தொடர்ந்தும் துன்புறுத்தப்படுவதாலேயே புகலிடம் கோரி அவுஸ்திரேலியா நோக்கிச் செல்வதாக கூறப்பட்ட குற்றச்சாட்டை திசார சமரசிங்க ஏற்க மறுத்துள்ளார்.

"புகலிடம் கோரும் 95 சதவீதமானவர்களுக்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் பாதுகாப்பு வழங்கியுள்ளது. இது தொடர்பில் பொய்யான தகவல்கள் காணப்படுகின்றன. போலித் தகவல்களைக் கூறி புகலிடம் கோருபவர்களின் அல்லது நாட்டை விட்டு வெளியேற முற்படும் தீவிரவாதிகளின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதற்கு இன்னும் சில காலம் எடுக்கும்" எனவும் அவுஸ்திரேலியாவுக்கான இலங்கைத் தூதர் தெரிவித்துள்ளார்.

படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்குள் நுழையும் இலங்கையர்களுக்கு  அகதி நிலை வழங்கப்படுவது ஒப்பீட்டளவில் குறைவாகும். இவ்வாண்டில் இதுவரையில் 166 இலங்கையர்களின் புகலிடக் கோரிக்கை மட்டுமே ஏற்றுக் கொள்ளப்பட்டு அகதி நிலை வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் அவுஸ்திரேலியாவுக்குள் நுழைந்த 5173 இலங்கையர்களில் 901 இலங்கையர்களின் புகலிடக் கோரிக்கை மட்டுமே ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

தொழில் வாய்ப்புக்களைத் தேடியே பெரும்பாலான இலங்கையர்கள் அவுஸ்திரேலியாவைச் சென்றடைவதாக இலங்கை  அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில், இதனை அவுஸ்திரேலியாவின் எதிர்க்கட்சியும் சுட்டிக்காட்டியுள்ளது.

அவுஸ்திரேலிய கடற்பரப்புக்குள் நுழைவதற்கு முன் படகுகளில் பயணிக்கும் இலங்கையர்களை இடைமறிக்கப்பட்டு அவர்களை அவர்களது சொந்த நாட்டுக்கு அனுப்பவேண்டும் என குடிவரவு தொடர்பான அவுஸ்திரேலிய எதிர்க்கட்சிப் பேச்சாளர் ஸ்கொற் மொறிசன் தெரிவித்துள்ளார். இவர்களை வேறு நாடுகளுக்கு அனுப்புவது தொடர்பாக பரிசீலிக்க வேண்டும் எனவும் அல்லது
இலங்கை அரசாங்கத்துடன் சாத்தியமான வேறு வழிமுறைகள் தொடர்பாக பேச்சுக்கள் நடாத்த வேண்டும் எனவும் ஸ்கொற் மொறிசன் குறிப்பிட்டுள்ளார்.

"இலங்கையில் இடம்பெற்ற யுத்தம் முடிவடைந்து விட்டது. அங்கே தற்போது வெடிச் சத்தங்கள் இல்லை. ஆனால் பாதுகாப்பு மற்றும் மனித உரிமைகள் என்ற பெயரில் அங்கே பல மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன" என அவுஸ்திரேலிய தமிழர் அமைப்பைச் சேர்ந்த பாலா விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இலங்கையிலிருந்து
  புகலிடக் கோரிக்கை கோருபவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு அவர்கள் மீண்டும்இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டால் அங்கே அவர்கள் சித்திரவதைக்கு உள்ளாக்கப்படும் ஆபத்து காணப்படுவதாக பிரித்தானிய நீதிபதி ஒருவர் கடந்த மாதம் தெரிவித்திருந்தார்.

"விவசாயம் மற்றும் மீன்பிடி போன்றவற்றில்
இலங்கை அரசாங்கம் கட்டுப்பாட்டை விதிப்பதால் தமிழ் மக்களின் வாழ்வாதாரம் அச்சுறுத்தலைச் சந்தித்துள்ளது. கல்வி, சுகாதாரம் மற்றும் ஏனைய கட்டுமானங்கள் என்பன தொடர்ந்தும் மிக மோசமான நிலையை எட்டியுள்ளது" எனவும் பாலா விக்கினேஸ்வரன் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை அரசாங்கம் தனது நாட்டில் வாழும் மக்களின் சுதந்திரத்தில் தலையீடு செய்வதால் சிங்கள மற்றும் முஸ்லீம் மக்கள் கூட நாட்டை விட்டு வெளியேற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் பாலா விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். 
[vuukle-powerbar-top]

Recent Post