Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

மதுரையில் உருவாகிறது உலகத் தமிழ்ச் சங்கம் !



மதுரை, செப். 19: மதுரையில் அமைக்கப்படும் உலகத் தமிழ்ச் சங்கத்தில் 30 துறைகள் ஏற்படுத்தப்படுகின்றன. உலகத் தமிழ்ச் சங்கத்தின் செயல்பாடுகளை தமிழக அரசு தீவிரப்படுத்தியுள்ளது.

 உலகத் தமிழ்ச் சங்கத்தின் தனி அலுவலராக மு.ராஜேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். சங்க உறுப்பினர்கள்: உலகத் தமிழ்ச் சங்கத்தின் உறுப்பினர்களாக மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம், அன்னை தெரசா பல்கலைக்கழகம், அழகப்பா பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் துணைவேந்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 

மதுரை மாவட்ட ஆட்சியர் நிர்வாக உறுப்பினராகவும், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் நிதிக் கட்டுப்பாட்டு அலுவலராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். சங்க உறுப்பினர்களின் முதல் கூட்டம் அக்டோபரில் நடைபெறவுள்ளது. 

உலகத் தமிழ்ச் சங்கத்தின் செயல்பாடுகளுக்காக ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் கட்டுமானப் பணிகளுக்கு மட்டும் ரூ.25 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மதுரையில் தமிழ்ச் சங்கத்துக்கு ஒதுக்கப்பட்ட 14 ஏக்கர் நிலத்தில் கட்டடம் கட்டுவதற்கான ஆரம்ப கட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. 

உலகத் தமிழ்ச் சங்கம் மேற்கொள்ள இருக்கும் பணிகள் குறித்து தனி அலுவலர் மு. ராஜேந்திரன் தினமணிக்கு அளித்த பேட்டி: இருபதாம் நூற்றாண்டுக்கு முன், இருபதாம் நூற்றாண்டுக்கு பின் என இரு பிரிவுகளாகப் பிரித்து செயல்பாடுகளைத் தொடங்க உள்ளோம். 

சிங்கப்பூர், மலேசியா, மோரிஷியஸ், இலங்கை உள்ளிட்ட நாடுகளில் பழந்தமிழர்கள் குடியேறி விட்டனர். அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் பிற்காலத்தில்தான் தமிழர்களின் குடியேற்றம் இருந்தது. இதை அடிப்படையாகக் கொண்டு கலாசார, பண்பாடு நிகழ்வுகளை நடத்த உள்ளோம். 

உலக நாடுகளின் தமிழறிஞர்கள், கலைஞர்கள் பரிமாற்ற நிகழ்வுகள் நடத்துவது, ஆய்வுக் கட்டுரைகள், புத்தகங்கள் அச்சிட உதவுவது, தமிழ்ப் பணிக்கு உதவி அளிப்பது போன்றவை உலகத் தமிழ்ச் சங்கத்தின் முக்கியப் பணிகளாக இருக்கும். உலகத் தமிழ் மாநாடுகள், சங்கத்தின் ஒப்புதலின்பேரிலேயே இனி நடைபெறும். 

முப்பது துறைகள்: உலகத் தமிழ்ச் சங்கத்தில் நாடகத் தமிழ், இசைத் தமிழ், இயற்றமிழ், கணினித் தமிழ், அறிவியல் தமிழ் என 30 துறைகள் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு துறைக்கும் 5 பணியாளர்களை நியமிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. யுனெஸ்கோ நடத்திய ஆய்வு ஒன்றில், இன்னும் 200 ஆண்டுகளில் இந்திய மொழிகளில் ஹிந்தியும், வங்க மொழியும் மட்டுமே நிலைத்து நிற்கும் எனக் கூறியுள்ளது. 

உலகத் தமிழ்ச் சங்கம் மேற்கொள்ளும் தீவிர செயல்பாடுகளால், ஆங்கிலத்துக்கு இணையான உலக மொழியாக தமிழைக் கொண்டு வர முடியும். முதல்கட்டமாக உலகத் தமிழ்ச் சங்கத்துக்கு கட்டுமானப் பணிகள் தொடங்க உள்ளன. தமிழ்ச் சங்க கட்டடத்துக்கான வரைபடம் பொதுப்பணித் துறை அதிகாரிகளால் தயாரிக்கப்பட்டு, அரசின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. சங்கத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலத்தைச் சுற்றிலும் சுற்றுச்சுவர் அமைத்துவிட்டு, அதன்பிறகு கட்டுமானப் பணிகள் தொடங்கப்படும். இதற்கிடையே தமிழ் அமைப்புகளை ஒருங்கிணைக்கும் பணிகளையும் மேற்கொள்ள இருக்கிறோம் என்றார்.

நன்றி : தினமணி 
[vuukle-powerbar-top]

Recent Post