Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

முஸ்லிம் காங்கிரஸ் மோசம் செய்து விடக்கூடாது


கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் கொடுத்த வாக்குறுதியை நம்பி, அந்தக் கட்சிக்கு வாக்களித்த முஸ்லிம் மக்களின் ஆணையை முஸ்லிம் காங்கிரஸ் காப்பாற்ற வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று காலை நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அங்கு அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தேர்தல் பரப்புரைகளின் போது பல வாக்குறுதிகளை அள்ளி வீசினார்.

அதன்போது வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடுவது வெட்கக்கேடானது என்றும் கூறியிருந்தார்.

இலங்கை அரசுக்கு எதிராக பரப்புரைகளை மேற்கொண்டு தான் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஏழு ஆசனங்களைப் பெற்றுக்கொண்டது.

இலங்கை அரசுக்கு எதிரான பிரசாரங்களை நம்பி, ஜனநாயக ரீதியில் வாக்களித்த முஸ்லிம் மக்களை சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒருபோதும் கைவிடக்கூடாது.

பெரும்பாலான முஸ்லிம் மக்கள் கிழக்கு மாகாணசபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சேர்ந்து செயற்பட வேண்டும் என்றே கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாம் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு கிழக்கு முதல்வர் பதவியை விட்டுக்கொடுக்க தயாராகவே இருக்கிறோம்.

எமது தேர்தல் பரப்புரைகளில்கூட இதனை வலியுறுத்தியிருந்தோம். இப்பொழுதும் அதையேதான் நாங்கள் கூறுகிறோம்.

முஸ்லிம் மக்களின் ஜனநாயக ரீதியான விருப்பங்களுக்கு சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வழிவிட வேண்டும்.

இலங்கை அரசாங்கத்தின் பணத்துக்கோ, பதவிக்கோ தமிழ்த் தேசிய கூட்டமைப்பினராகிய நாம் ஒருபோதும் விலைபோக மாட்டோம்.

முஸ்லிம்களின் உணர்வுகளை மதித்து முஸ்லிம் காங்கிரஸ் சரியான முடிவை எடுக்கும் என்று தொடர்ந்தும் எதிர்பார்த்திருக்கிறோம்.

எமக்கு பதவி மோகம் கிடையாது. அதற்காக எமது உணர்வுகளை விட்டுக்கொடுத்து விலைபோக மாட்டோம்.

கிழக்கில் தேசிய அரசாங்கத்தை அமைப்பது தொடர்பாக இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சவே எம்முடன் பேச வேண்டும்”“ என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்தச் செய்தியாளர் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான, மாவை சேனாதிராசா, சுரேஸ் பிறேமச்சந்திரன், அரியநேந்திரன், செல்வம் அடைக்கலநாதன், அப்பாத்துரை விநாயகமூர்த்தி, எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

கிழக்கு மாகாணசபைக்குத் தெரிவான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களும் இதில் பங்கேற்றனர்.

[vuukle-powerbar-top]

Recent Post