Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

கிளிநொச்சி விவசாயிகள் கவலை-இரணைமடுக் குளம் வற்றிவருகின்றது


கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள இரணைமடுக் குளத்தின் நீரானது தற்போது வற்றிவருகின்றது. இலங்கை அரசாங்கத்தால் யாழ்ப்பாண விவசாயிகளுக்கு நீர் வழங்கப்படுவதாக உறுதியளிக்கப்பட்ட இரணைமடுக் குளம் அமைந்துள்ள பகுதியில் விவசாயத்தில் ஈடுபடும் விவசாயிகளுக்கு கூட இக்குளத்து நீர் தற்போது பற்றாக்குறையாகக் காணப்படுகிறது. இதன்விளைவாக, இவ்வாண்டில் பயிர்ச்செய்கைக்காக வழங்கப்படும் நீரின் அளவை மட்டுப்படுத்துவதென இதனுடன் தொடர்புபட்ட அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.

எவ்வாறெனினும், இவ்வாறு வரையறுக்கப்பட்ட நீரின் அளவுக்கு மேலதிகமாக நெற்பயிர்ச்செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்கு மேலதிக நீர் வழங்கப்படமாட்டாது எனவும், இது சட்டரீதியற்ற பயிர்ச்செய்கையாக கருதப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சியில் நெற்பயிர்ச் செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்கே இரணைமடுக் குளத்து நீர் பற்றாக்குறையாகக் காணப்படும் போது, இக்குளத்திலிருந்து யாழ் மாவட்டத்துக்கு அதிகாரிகள் எவ்வாறு நீரை விநயோகிக்க முடியும் என சில விவசாயிகள் கேள்வியெழுப்பியுள்ளனர்.

இலங்கையின் வடக்கில் மிகப் பெரிய குளமான இரணைமடுக் குளமானது 1902ல் கட்டப்பட்டது. பிரித்தானிய ஆட்சிக் காலத்தின் போது, 1866 நீர்ப்பாசனத் திட்டத்தின் கீழ் நீர்ப்பாசனப் பொறியியலாளரான ஹென்றி பார்க்கர் இரணைடுக் குளத்திற்கான வரைபை வரைந்தார்.

இரணைமடுக் குளத்தை அமைப்பதற்கான முதற் கட்டப் பணி 1902ல் நிறைவுற்றது. இதற்காக ரூபா 194,000 செலவிடப்பட்டது. இக்குளத்தின் ஆழம் 22 அடியாகக் காணப்பட்டது. இது 44,000 ஏக்கரைத் தனது கொள்திறனாகக் கொண்டிருந்தது. இதன் பின்னர் இக்குளத்திற்கான இரண்டாங்கட்ட வேலைத் திட்டமானது 1954ல் பூர்த்தியாக்கப்பட்டது. இதன் பின்னர் இக்குளத்தின் ஆழம் 30 அடியாகவும், இதன் கொள்திறன் 80,000 ஏக்கராகவும் அதிகரிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இரணைமடுக் குளத்திற்கான மூன்றாங்கட்டப் பணி 1977ல் பூர்த்தியாக்கப்பட்டது. தற்போது 9கிலோ மீற்றர் நீளமும் 2 கி.மீற்றர் அகலத்தையும் கொண்ட இக்குளமானது 34 அடி ஆழத்தைக் கொண்டுள்ளது. 32.5 கி.மீற்றர் வாய்க்கால்களின் ஊடாக கிளிநொச்சி மாவட்டத்தில் 20,882 ஏக்கர் நிலப்பரப்பில் நீர்ப்பாசனத்தை மேற்கொள்வதற்கு இரணைமடுக் குளம் துணைபுரிகிறது.

[vuukle-powerbar-top]

Recent Post