Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

டீசல் விலை உயர்வு. ஏழைகளின் வயிற்றில் அடிக்கும் மத்திய அரசு - ஜெயா தாக்கு


டீசல் விலை உயர்வு, சமையல் எரிவாயு கட்டுப்பாடு மூலம் ஏழை மக்களின் வயிற்றில் மத்திய அரசு அடித்துள்ளதாக முதல்வர் ஜெயலலிதா குற்றம்சாட்டியுள்ளார். டீசல் விலை உயர்வையும், சமையல் எரிவாயு மீதான கட்டுப்பாட்டையும் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

விஷம் போல ஏறும் விலைவாசி, வரலாறு காணாத பணவீக்கம், வீழ்ச்சியடைந்து வரும் இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு அவ்வப்போது அறிவிக்கிறது. ஆனால், இதற்கு நேர்மாறாக பெட்ரோலியப் பொருள்களின் விலையை உயர்த்துவதை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு வாடிக்கையாகக் கொண்டுள்ளது. 

இதனைப் பார்க்கும்போது படிப்பது ராமாயணம், இடிப்பது பெருமாள் கோயில் என்ற பழமொழிதான் நினைவுக்கு வருகிறது. வஞ்சிக்கும் செயல்: திமுக அங்கம் வகிக்கும் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு, வியாழக்கிழமை நள்ளிரவு முதல் டீசல் விலையை வரலாறு காணாத அளவுக்கு லிட்டருக்கு ரூ.5 உயர்த்தியுள்ளது. மேலும், ஒரு குடும்பத்துக்கு 6 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் மட்டுமே மானிய விலையில் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது. இதன் மூலம் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு ஏழை, எளிய மக்களின் வயிற்றில் அடித்துள்ளது.

இது மிகுந்த மன வேதனையை அளிக்கிறது. பட்ட காலிலே படும், கெட்ட குடியே கெடும் என்ற பழமொழிக்கேற்ப திரும்பத் திரும்ப ஏழை, எளிய பாமர மக்களை மத்திய அரசு வஞ்சித்து வருவது கண்டனத்துக் குரியது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அதிகரித்துக் கொண்டே செல்வதும், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்து கொண்டே வருவதும்தான் இந்த விலை உயர்வுக்கு காரணம் என்பதை ஏற்க முடியாது. இது ஒரு வலுவற்ற வாதமாகும். இந்தியாவில் உற்பத்தியாகும் கச்சா எண்ணெயையும், எண்ணெய் நிறுவனங்களின் லாபத்தையும் கணக்கில் எடுத்துக் கொண்டு இந்திய ரூபாயின் வீழ்ச்சியைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த விலை உயர்வைத் தவிர்த்திருக்கலாம். 

ஆனால், இதனைக் காரணம் காட்டி ஒவ்வொரு முறையும் பெட்ரோலியப் பொருள்களின் விலையை உயர்த்துவது சரியான பொருளாதார நடவடிக்கையாக அமையாது என்பதோடு விலைவாசி உயரவே இது வழிவகுக்கும். அனைவருக்கும் பாதிப்பு: டீசல் விலை உயர்வினால் ஆட்டோ, கார், வேன், லாரி போன்ற தனியார் வாகனக் கட்டணங்கள் கிடுகிடுவென உயரும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. தனியார் வாகனங்களில் பள்ளி செல்லும் மாணவர்கள் மற்றும் அலுவலகம் செல்வோர், சுற்றுலாப் பயணிகள், ஏழை, எளிய பொதுமக்கள் என அனைத்துத் தரப்பு மக்களும் அதிக கட்டணத்தை செலுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இது தவிர, காய்கறிகள், பழங்கள் உள்பட அனைத்து அத்தியாவசியப் பொருள்களின் விலையும் விஷம்போல உயரும். 

டீசலை பயன்படுத்தி பம்பு செட்டுகளை இயக்கும் விவசாயிகளும் இதனால் பாதிக்கப்படுவார்கள். ஒரு குடும்பத்துக்கு ஆண்டுக்கு 6 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் மட்டுமே மானிய விலையில் வழங்கப்படும் என்ற கட்டுப்பாடு ஏழை, நடுத்தர மக்களை வெகுவாகப் பாதிக்கும். இரண்டு மாதத்துக்கு ஒரு சிலிண்டர் என்பது எந்தக் குடும்பத்தின் தேவையையும் பூர்த்தி செய்யாது. அனைத்துத் தரப்பு மக்களையும் வாட்டி வதைக்கும் இந்த விலை உயர்வு கடும் கண்டனத்துக்குரியது. மக்கள் நலனில் மத்திய அரசுக்கு உண்மையான அக்கறை இருக்குமானால் இந்த விலை உயர்வையும், சமையல் எரிவாயு கட்டுப்பாட்டையும் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா கேட்டுக் கொண்டுள்ளார்.
[vuukle-powerbar-top]

Recent Post