Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

பட்டாசு ஆலைகள் எவ்வாறு அமைய வேண்டும் ஒரு சிறப்பு பார்வை

சிவகாசிக்கு அருகிலுள்ள முதலிப்பட்டியில் உள்ள பட்டாசு ஆலை ஒன்றில் நேற்று நண்பகலில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 38 பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில், பட்டாசுகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த குடோன் வெடித்துச் சிதறியதில், ஒட்டுமொத்த தொழிற்சாலையும் இடிந்து தரை மட்டமானது.

இதில், தொழிலாளர்கள் அனைவரும் பல அடி தூரத்துக்கு தூக்கி எறியப்பட்டு, உடல் சிதறி உயிரிழந்தனர்.தகவலறிந்து அவர்களை காப்பாற்றச் சென்றவர்களும், வேடிக்கைப் பார்த்தவர்களில் பலரும் தீயில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

இது போன்ற விபத்துக்கள் நடக்க காரணமாகியிருக்கும் ஆலைகள் பற்றிய ஓர் பார்வை தான் இக்கட்டுரை. ஒரு பட்டாசுத் தொழிற்சாலை செயல்படுவதற்கான விதிகள் என்னவென்று தெரிந்துகொள்வோம்.

அதன்படி, 1950 ஆம் ஆண்டின் தொழிற்சாலை விதிகள் பிரிவு 95 ன் படி, பட்டாசுத் தொழிற்சாலையின் பாதைகள் திறந்த வெளிப்பாதையாக இருக்க வேண்டும். பட்டாசுத் தொழிற்சாலையின் தரையில், 3 மில்லி மீட்டர் அளவிற்கு கனம் கொண்ட ரப்பர் ஷீட் போடப்பட்டிருக்க வேண்டும்.

அது மட்டுமல்லாமல், உற்பத்தி செய்யப்பட்ட பட்டாசுகள் எந்த விதத்திலும் தீப்பிடிக்காத அளவிற்கு தனியாக ஒரு அறையில் மிகுந்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டிருக்க வேண்டும். பட்டாசுத் தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் உரிய தொழில்நுட்பத்திறன் பெற்றவர்களாக இருக்க வேண்டும். அவர்களுக்குத் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள், காற்றோட்டத்துடன் கூடிய பணியிடம், இடவசதி, பணியாளர்களின் நலன் உள்ளிட்ட வசதிகளை பட்டாசுத் தொழிற்சாலையில் ஏற்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.

பட்டாசு தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு பட்டாசு உற்பத்தி பாதுகாப்பு குறித்த பயிற்சி அளிக்கப்பட்டிருக்க வேண்டும். பட்டாசு தொழிற்சாலையில் வேலையில் 18 வயதிற்கு மேற்பட்ட நபர்கள் மட்டுமே ஈடுபடுத்தப்பட வேண்டும்.

பட்டாசுத் தொழிற்சாலையின் பணி பாதுகாப்பு, தொழிலாளர் பாதுகாப்பு குறித்து 3 மாதத்திற்கு ஒரு முறை தொழிற்சாலை துணைத் தலைமை ஆய்வாளர் திடீர் ஆய்வு செய்து கண்காணிக்க வேண்டும் என்று தொழிலாளர் நலச் சட்டம் வலியுறுத்துகிறது. இருபது பேருக்கு மேல் பணிபுரியும் தொழிற்சாலையில் அனைத்து தொழிலாளர்களுக்கும் தொழிலாளர் ஈட்டுறுதி காப்பீடு செய்யப்பட்டிருக்க வேண்டும்.

மேலும், தொழிலாளர்களுக்கான ஓய்வறை, குடிநீர், அவர்களின் குழந்தைகளுக்கான ஓய்வெடுக்கும் அறை, கழிப்பறை உள்ளிட்ட வசதிகள் பட்டாசு தொழிற்சாலையில் வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்று சர்வதேச தொழிலாளர் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
[vuukle-powerbar-top]

Recent Post