Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

டீசல் விலை உயர்வை கண்டித்து வைக்கோ அறிக்கை

ஊழல்களால் நாட்டை திவால் ஆக்கிவரும் காங்கிரஸ் அரசு, டீசல் விலை உயர்வை இரத்து செய்ய வேண்டும் வைகோ அறிக்கை 

மன்மோகன்சிங் தலைமையில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு 2004 இல் பதவி ஏற்றபோது, ஒரு லிட்டர் டீல் விலை ரூ.22.74 ஆக இருந்தது. 

கடந்த 8 ஆண்டுகளில் நூறு சதவீதத்திற்கு மேலாக டீசல் விலை உயர்த்தப்பட்டு, தற்போது மேலும் பகல் கொள்ளையாக ரூபாய் ஐந்து அதிகரிக்கப்பட்டுள்ளதால் ரூ.49.76 ஆகி இருக்கின்றது. சோனியா காந்தி வழிகாட்டுதலில், மத்தியில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி பொறுப்பு ஏற்றதிலிருந்து பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலைகளை உயர்த்துவதையே வாடிக்கை ஆக்கி இருக்கின்றது. 

டீசல் விலை ரூபாய் ஐந்து உயர்த்தப்படுவதால் அதன் சங்கிலித் தொடர் விளைவாக விலைவாசி மிகக் கடுமையாக அதிகரிக்கும். ஏற்கனவே பொருளாதார நெருக்கடிகளால் இந்தியா தத்தளித்துக்கொண்டு இருக்கின்றது. பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. உற்பத்தித் தொழிற்சாலையில் பெரும் சரிவு ஏற்பட்டு இருக்கின்றது. கட்டுபாடற்ற விலையேற்றம் மக்களை வாட்டி வதைத்து வருகின்றது. 

 ஏழை, எளிய, நடுத்தர மக்கள் அல்லல்படும்போது, மேலும் அவர்கள் மீது இந்தச் சுமையை ஏற்றுவது தாங்க முடியாது. எண்ணெய் நிறுவனங்கள் நட்டம் அடைவதாக மத்திய அரசு மோசடித்தனமான அறிவிப்பை வெளியிடுகிறது. எண்ணெய் நிறுவனங்களின் கையிருப்புத் தொகை ரூபாய் ஒரு இட்சம் கோடி என்று கூறப்படுகின்றது. மேலும் அந்நிறுவனங்களின் பங்குகள் விலை குறையவும இல்லை. மக்களை ஏமாற்றும் தந்திர நடவடிக்கையில்தான் மத்திய அரசு தொடர்ந்து ஈடுபடுகிறது. 

பெரும் நிறுவனங்களுக்கு ரூபாய் ஐந்து இலட்சம் கோடி வரிச்சலுகை அளித்துள்ள மத்திய அரசு, சாமானிய மக்கள் மீது நெருப்பை அள்ளிக்கொட்டுகிறது. 2ஜி அலைக்கற்றை ஊழல் மூலம் ரூ.1.76 இலட்சம் கோடி, நிலக்கரி ஊழலில் ரூ. 1.86 இலட்சம் கோடி, மேலும் பல்வேறு ஊழல்களால் நாட்டையே திவாலாக்கிக் கொண்டிருக்கும் மத்திய காங்கிரஸ் அரசு, மக்களின் தலையில் பாறாங்கல்லைப் போடுகிறது. 

மானிய விலையில் சமையல் எரிவாயு வழங்குவதற்கு ஒரு குடும்பத்திற்கு, ஒரு ஆண்டிற்கு ஆறு சிலிண்டர் தான் என்று கட்டுப்பாடு விதிப்பதை ஏற்க முடியாது. படிப்படியாக சமையல் எரிவாயு மானியத்தை இரத்து செய்து, எரிவாயு விலையை பன்மடங்கு உயர்த்துவதற்கு முன்னோட்டமாக, மத்திய அரசு தற்போது கட்டுப்பாடு கொண்டு வந்திருக்கிறது. 

அரசின் இந்த நடவடிக்கை பொதுமக்களுக்கும், பெண்களுக்கும கடும் கோபத்தை உருவாக்கி இருக்கின்றது. ஆகவே, மத்திய அரசு உடனடியாக டீசல் விலை உயர்வை இரத்து செய்வதுடன், சமையல் எரிவாயு வழங்க விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளையும் நீக்க வேண்டும் என்று வற்புறுத்துகிறேன். 

‘தாயகம்’ 
வைகோ 
சென்னை - 8 
பொதுச் செயலாளர், 
14.09.2012 
மறுமலர்ச்சி தி.மு.க
[vuukle-powerbar-top]

Recent Post