Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

டீசல் விலை உயர்வுக்கு காரணம் என்ன ?? பெட்ரோலிய அமைச்சகம் விளக்கம்

டீசல் விலை உயர்வு மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டருக்கான கட்டுப்பாடுகள் குறித்து மத்திய பெட்ரோலிய அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

அதில், எண்ணெய்த் தேவைகளில் 74 விழுக்காடு அளவை சர்வதேச விலையில் இந்தியா இறக்குமதி செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைவதே டீசல் விலையேற்றத்திற்கு முக்கிய காரணம் என்றும் கூறப்பட்டுள்ளது.

எனவே கடந்த நிதியாண்டில் பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் ஒரு லட்சத்து 38 ஆயிரத்து 541 கோடி ரூபாய் இழப்பை சந்தித்ததாகவும் இதற்கான உதவித் தொகையை மத்திய அரசு ஏற்பாடு செய்ததாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 

மத்திய அரசின் இந்த உதவியால்தான் எண்ணெய் நிறுவனங்கள் பெயரளவுக்கு அதாவது 6ஆயிரத்து 177 ரூபாய் கோடி லாபம் ஈட்டியதாக கூறியுள்ள பெட்ரோலிய அமைச்சகம், டீசல் விலையை உயர்த்தினாலும் லிட்டருக்கு 13 ரூபாய் 60 காசுகள் உதவித்தொகையை தற்போதும் மத்திய அரசு வழங்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநில அரசுகளுக்கு யோசனை : 

டீசல் விலை உயர்வினால் மாநில அரசுகளுக்கு ஆண்டுக்கு 8ஆயிரத்து 200 கோடி ரூபாய் வரி வருவாய் கூடுதலாக கிடைக்கும். மக்கள் மீதான சுமையை குறைக்க மாநில அரசு வரி வருவாயை விட்டுத் தரலாம் என்றும் பெட்ரோலிய அமைச்சகம் யோசனை தெரிவித்துள்ளது.

இதுதவிர மொத்தம் உள்நாட்டு எல்.பி.ஜி நுகர்வோர்களில் 44 விழுக்காட்டிற்கும் அதிகமானோர் ஆண்டுக்கு 6 அல்லது அதற்கு குறைவாகவே சிலிண்டர்களை பயன்படுத்துவதாக புள்ளிவிவரம் தெரிவிப்பதாக பெட்ரோலிய அமைச்சகம் கூறியுள்ளது.

இதன் அடிப்படையில்தான் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் இதை நாடாளுமன்ற அனைத்துக்கட்சி நிலைக்குழு ஏற்றுக் கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சர்வதேச விலைகளை பொறுத்து டீசல் உள்ளிட்ட எரிபொருள் விலைகளை தொடர்ந்து மாற்றியமைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள பெட்ரோலிய அமைச்சகம், விலை உயர்வு என்பது கடைசிக்கட்ட அணுகுமுறைதான் என தெரிவித்துள்ளது. 

அரசின் விலையேற்ற நடவடிக்கைகளை விமர்சிப்பவர்கள், நடப்பு நெருக்கடியை சமாளிக்க ஏதேனும் ஆக்கப்பூர்வ மாற்றுவழிகளை கூறுமாறும் மத்திய அரசின் பெட்ரோலிய அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.
[vuukle-powerbar-top]

Recent Post