Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தமிழ் தேசியக் கூட்டமைப்பே பொறுப்பு – கிழக்கு முன்னாள் முதல்வர் சந்திரகாந்தன்


கிழக்கு மாகாணசபையில் தமிழர் ஒருவர் முதல்வராக வரமுடியாமல் போனால், அதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே பொறுப்பேற்க வேண்டும் என்று கிழக்கு மாகாண முன்னாள் முதல்வர் சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் கிழக்கு மாகாணசபைக்கு நடந்த தேர்தலில், ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட சந்திரகாந்தனின் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி படுதொல்வியைச் சந்தித்தது.

ஆளும்கட்சியின் பட்டியலில் 11 வேட்பாளர்களை இந்த கட்சி நிறுத்தியிருந்த போதும், முன்னாள் முதல்வர் சந்திரகாந்தன் மட்டுமே வெற்றி பெற்றுள்ளார்.

கடந்தமுறை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் சார்பில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களாக இருந்த 6 பேர் இம்முறை தோல்வியடைந்துள்ளனர்.

எனினும் முன்னாள் முதல்வர் சந்திரகாந்தனே மட்டக்களப்பு மாவட்டத்தில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர்களில் கூடுதல் விருப்புவாக்குகளைப் பெற்றுள்ளார்.

இந்தநிலையில் தேர்தல் முடிவு குறித்து கருத்து வெளியிட்டுள்ள முன்னாள் முதல்வர் சந்திரகாந்தன்,

“கிழக்கு மாகாணசபையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியே மீண்டும் ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பு உள்ளது.

கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஒருவரே முதல்வராக வரவேண்டும்.

அவர் முஸ்லிமா அல்லது தமிழரா என்ற பிரச்சினை ஏதும் இல்லை.

ஆனால் கிழக்கில் தமிழர் ஒருவர் முதல்வராக வரமுடியாமல் போனால், அதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே பொறுப்பேற்க வேண்டும்.” என்று கூறியுள்ளார்.
[vuukle-powerbar-top]

Recent Post