Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

சில்லரை வணிகத்தில் நேரடி அன்னிய முதலீடு அனுமதியைத் திரும்பப் பெற வேண்டும் வைகோ அறிக்கை

சில்லரை வணிகத்தில் நேரடி அன்னிய முதலீடு அனுமதியைத் திரும்பப் பெற வேண்டும் வைகோ அறிக்கை மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசின் மக்கள் விரோத நடவடிக்கை எல்லையில்லாமல் நீண்டுகொண்டே இருக்கிறது. 

சில்லரை வணிகத்தில் 51 சதவிகித அன்னிய நேரடி முதலீட்டுக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட பின்பும், மத்திய அரசு அதை விடாப்பிடியாக நடைமுறைப்படுத்த முடிவு எடுத்துள்ளது கடும் கண்டனத்திற்கு உரியதாகும். 

விவசாயத்திற்கு அடுத்தபடியாக நாடு முழுவதும் கோடிக் கணக்கான மக்களின் வாழ்வாதாரமாக இருப்பது சில்லறை வணிகம் மட்டுமே. தமிழ் நாட்டில் சில்லரை வர்த்தகத்தின் மூலம் 20 இலட்சத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பயன் அடைந்து வருகின்றனர். 

உப்பு, புளி, மிளகாய், மளிகைப் பொருட்கள் வியாபாரத்தில் கூட, அமெரிக்காவின் “வால் மார்ட், மெட்ரோ” போன்ற பகாசூர நிறுவனங்களுக்கு சந்தையைத் திறந்துவிடுவதன் மூலம் சாதாரண எளிய மக்களின் வாழ்வாதாரத்தைப் பறித்து, வயிற்றில் அடித்துள்ளது மத்திய அரசு. 

இந்தியா போன்ற நாடுகளில் உள்ள மனித வளத்தைப் பயன்படுத்தி, சந்தையில் கொள்ளை அடிக்கவே பன்னாட்டு நிறுவனங்கள் வருகிறதேயொழிய, சேவை செய்வதற்கு அல்ல. 

சில்லரை வணிகத்தில் சுமார் 25 இலட்சம் கோடி ரூபாய் புழங்குவதால், அன்னிய நிறுவனங்கள் இதில் ஆர்வம் காட்டுகின்றன. விவசாயம் சார்ந்த தொழில் நொறுங்கிக் கிடக்கிறது. அதற்கு அடுத்தபடியாக உள்ள சில்லரை வணிகத்தையும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரைவார்த்துவிட்டால், அதை நம்பியுள்ள மக்களின் வாழ்க்கை கேள்விக்குரியாகும். 

பொருளாதார நெருக்கடிகளாலும், விலைவாசி உயர்வாலும் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அன்னிய நிறுவனங்கள் விலையை தாறுமாக விருப்பம்போல், நிர்ணயித்துக்கொண்டு, கொள்ளை அடிக்க மத்திய அரசு அனுமதித்ததற்கு கடும் கண்டனம் தெரிவித்துக்கொள்கிறேன். 

கோடிக் கணக்கான மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, மத்திய அரசு சில்லரை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு வழங்கியுள்ள அனுமதியை திரும்பப் பெறவேண்டும் என்று வற்புறுத்துகிறேன். 

‘தாயகம்’ 
வைகோ 
சென்னை - 8 
பொதுச் செயலாளர், 
15.09.2012 
மறுமலர்ச்சி தி.மு.க
[vuukle-powerbar-top]

Recent Post