காவிரியில் தண்ணீர் திறந்து விடும்படி கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தமிழக விவசாயிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
காவிரி நதிநீர் ஆணையத்தின் உத்தரவை கர்நாடக அரசு அமல்படுத்தக் கோரி, தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், டிகே ஜெயின், மதுபிலோகூர் ஆகியோர் இந்த விவகாரத்தில் பிரதமரின் உத்தரவை கர்நாடக அரசு மதிக்காதது ஏன் என்று கேள்வி எழுப்பினர்.
தண்ணீர் திறந்து விடுவது குறித்து கர்நாடக அரசு ஒருவாரத்திற்குள் பதிலளிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தனது உத்தரவில் கூறியுள்ளது.
மேலும் காவிரியில் இருந்து விநாடிக்கு நாள்ஒன்றுக்கு 9 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இது தொடர்பாக காவிரி தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பு பற்றி சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் தெரிவித்திருந்தார்.
இதனால் விவசாயிகள் மத்தியில் உரிய நேரத்தில் காவிரியில் தண்ணீர் கிடைக்குமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
குறுவை சாகுபடி பொய்த்து விட்ட நிலையில், சம்பா சாகுபடியாவது நடைபெற வேண்டுமென்றால், உச்ச நீதிமன்ற உத்தரவை ஏற்று காவிரியில் கர்நாடகா தண்ணீர் திறக்க வேண்டும் என்பதே தமிழக விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.