Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

சீனாவின் திருட்டுக்குத் துணைபோன இலங்கை~ ஐரோப்பிய ஒன்றியத்திடம் அகப்பட்டது

ஐரோப்பிய நாடுகளுக்கான ஏற்றுமதி வரியில் இருந்து தப்பிக்க இலங்கையினை சீனா ஒரு தளமாகப் பயன்படுத்தி வந்துள்ளதை ஐரோப்பிய ஆணைக்குழு கண்டுபிடித்துள்ளது.

சீனாவின் மிதிவண்டி உற்பத்தியாளர்கள், ஐரோப்பிய நாடுகளுக்கான ஏற்றுமதி வரி, சுங்கத் தீர்வை ஆகியவற்றில் இருந்து தப்பிப்பதற்காக, இலங்கை உள்ளிட்ட மூன்றாவது நாடுகளின் ஊடாக மிதிவண்டி ஏற்றுமதிகளை மேற்கொண்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக விசாரணைகள் நடத்தப்படுவதாக ஐரோப்பிய ஒன்றிய நிறைவேற்றுச் சபை தெரிவித்துள்ளது.

இலங்கை  மற்றும் இந்தோனேசியா, மலேசியா, துனிசியா ஆகிய நாடுகளையே சீனா தனது திருட்டுத்தனத்துக்குப் பயன்படுத்தியுள்ளது.

அதுமட்டுமன்றி, ஐரோப்பிய நாடுகளின் வரி மற்றும், தீர்வையில் இருந்து தப்பிப்பதற்காக சீனா தனது மிதிவண்டிகளை ஒருங்கிணைக்கும் பணிகளை இலங்கை, இந்தோனேசியா, துனிசியா, மலேசியா போன்ற நாடுகளுக்கு மாற்றியுள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது.

சீனாவுடன் நீண்டகால வர்த்தகப் போட்டியைக் கொண்டுள்ள ஐரோப்பிய மிதிவண்டி உற்பத்தியாளர் சங்கத்தின் முறைப்பாட்டை அடுத்தே இதுதொடர்பான விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் ஒரு ஆண்டுக்கு 5 பில்லியன் யூரோ அளவுக்கு மிதிவண்டி மற்றும் அதன் உதிரிப்பாக விற்பனை இடம்பெறுகிறது.

ஐரோப்பிய ஒன்றியம், சீனாவின் மிதிவண்டிகளை இறக்குமதிக்கு முதல்முறையாக 1993ம் ஆண்டில், தீர்வை விதித்தது.

அதன்பின்னர், தொடர்ச்சியாக அதிகரிக்கப்பட்டு, கடந்த ஆண்டில் 48.5 வீத தீர்வை அறிவிக்கப்பட்டது. இது 2014ம் ஆண்டு வரை நடைமுறையில் இருக்கும்.

சீனாவின் திருட்டுக்குத் துணைபோனதால், கடந்த ஒக்ரோபர் மாதம், இலங்கையின் மிதிவண்டி ஏற்றுமதி திடீரென இரட்டிப்பாகியது கண்டறியப்பட்டுள்ளது.

திருட்டுத்தனமாக மிதிவண்டி ஏற்றுமதி செய்ததால், ஐரோப்பிய ஒன்றிய சட்டங்களின் படி, சீனா மீதான தீர்வைக் கட்டுப்பாடுகள் மேலும் ஆறு மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை இலங்கையின் மிதிவண்டி ஏற்றுமதியும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கடும் கண்காணிப்புக்கு உள்ளாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
[vuukle-powerbar-top]

Recent Post