Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

இலங்கையில் ஐந்து நாட்களுக்கு ஒருவர் காணாமல் போகின்றார் - இணைய ஊடகம் தகவல்


இலங்கையில் தொடரப்பட்ட உள்நாட்டு யுத்தமானது 2009ல் முடிவிற்கு வந்திருக்கலாம், ஆனால் இந்நாட்டில் வாழும் பல மக்கள் மத்தியில் இன்னமும் சமாதானமானது கிடைக்கப்பெறாத ஒன்றாகவே காணப்படுகின்றது.

யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் அகப்பட்டுக்கொண்ட பொது மக்களை இலக்கு வைத்து தயவுதாட்சண்ணியம் எதுவுமின்றி எறிகணை வீச்சுக்கள் மேற்கொள்ளப்பட்டது. இவ்வாறான யுத்தமீறல்களை விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட கற்றுக் கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை இலங்கை அரசாங்கமானது நிறைவேற்றத் தவறிய நிலையில் அதனை எதிர்த்து ஐக்கிய நாடுகள் சபையால் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது.

தற்போது இலங்கையில் பொதுமக்கள் காணாமற் போவது அதிகரித்து வரும் நிலையில், இச்சம்பவங்கள் தொடர்பான அறிக்கைகளை இலங்கை அரசாங்கமானது புறக்கணித்து வருகின்றது.

இலங்கையில் ஐந்து நாட்களில் ஒருவர் காணமற் போவதாகவும், இவ்வாறு காணாமற் போன அல்லது கடத்தப்பட்டவர்கள் தொடர்பான பட்டியல் ஒன்றை கொள்கை மாற்றீடுகளுக்கான மையத்தின் இலங்கை வாழ் ஊடகவியலாளர்களுக்கான இணையத்தளமான Groundviews வெளியிட்டுள்ளது.

"ஏப்ரல் 01, 2012 தொடக்கம் யூலை 09, 2012 வரையான நூறு நாட்களில் கடத்தல் முயற்சிகள் உள்ளடங்கலாக 21 காணாமற் போன சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக இலங்கையின் பிரதான ஆங்கில ஊடகம் ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது" என Groundviews இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

"ஊடகங்களில் வெளியிடப்பட்ட காணாமற் போன சம்பவங்கள் தவிர, வேறு மூன்று காணாமற் போன சம்பவங்களுடன் தொடர்புபட்டவர்கள் கைது செய்யப்பட வேண்டும் என இலங்கை காவற்துறையிடம் முறையீடு செய்யப்பட்டுள்ளது. கடத்தப்பட்டவர்களில் நான்கு பேர் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர். கடத்த முயற்சிக்கப்பட்ட நான்கு சம்பவங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன. கடத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்ட ஒருவரது உடலம் பின்னர் கண்டெடுக்கப்பட்டது. கடத்தப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்ட 11 பேரில் ஐந்து பேர் தமது கடத்தல்களில்
இலங்கை அரசாங்கத்தின் தலையீடு காணப்பட்டதாக குற்றஞ்சாட்டினர்" எனவும் அவ் இணையத்தளத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் உள்ளடங்கலாக பொது மக்கள் கடத்தப்பட்டமை மற்றும் சித்திரவதைக்கு உள்ளாக்கப்படல் ஆகியவற்றைச் சுட்டிக்காட்டி ஐ.நா மனித உரிமைகள் பேரவையில்
இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இலங்கை அரசாங்கமானது இக்குற்றச்சாட்டை பெரிதும் நிராகரித்துள்ளது. இருப்பினும் இலங்கை பாதுகாப்பு அமைச்சானது இந்த விடயத்தில் தான் காத்த அமைதியைக் கலைத்து ஊடகங்களில் வெளியாகிய சில கடத்தல் சம்பவங்கள் தொடர்பாக பதிலளித்திருந்ததாகவும் Groundviews தகவல் வெளியிட்டுள்ளது.

"இலங்கையில் குறிப்பிட்ட காலப்பகுதியில் 56 பேர் வரை திட்டமிட்டு கடத்தப்பட்ட போதிலும் இதில் 18 பேர் மட்டுமே காணாமற் போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு காணாமற் போனதாக கூறப்படும் 18 பேரில் கடத்தலின் பின் 10 பேர் விடுவிக்கப்பட்டதுடன், ஐந்து பேரின் உயிரற்ற உடலங்கள் கண்டெடுக்கப்பட்டதுடன், வேறு ஐந்து பேர் இலங்கை காவற்துறையின் தடுப்பிலுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது" எனவும் Groundviews இணையத்தளச் செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஒக்ரோபர் 2011 தொடக்கம் மார்ச் 31, 2012 வரையான காலப்பகுதியில் காணாமற் போன மற்றும் கடத்தல் முயற்சி தடுக்கப்பட்ட 38 சம்பவங்களை இலங்கை பாதுகாப்பு அமைச்சானது ஏற்றுக்கொண்டிருந்தது. "இவ்வாறான காணாமற் போன சம்பவங்கள் தொடர்பாக
இலங்கை சட்ட அமுலாக்கல் அதிகாரிகள் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும், கடத்தப்பட்டவர்கள் தொடர்பான தனிப்பட்ட தகவல்களை ஆராய்ந்து வருவதாகவும்" இலங்கை பாதுகாப்பு அமைச்சின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
[vuukle-powerbar-top]

Recent Post