Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

அவுஸ்திரேலிய சொர்க்க கனவினை இழந்து இலங்கை திரும்பியோரின் கதை

கிறிஸ்மஸ் தீவிலுள்ள குடிவரவு தடுப்பு நிலையமும் கொக்கோஸ் தீவுகளும் தனக்கு சொர்க்கமாக இருந்ததாக அந்தோனி சுஜித் கூறுகிறார்.

"அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் மற்றும் கொக்கோஸ் தீவுகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது நாம் நல்ல உணவுகளை உண்டோம். நன்றாக குளித்தோம். தங்குவதற்கு நல்ல வீடுகள் இருந்தன. விளையாட்டுக்களில் ஈடுபட முடிந்தது. ஆங்கில மொழியைக் கற்க முடிந்தது. இது உண்மையில் ஒரு சொர்க்கமாகக் காணப்பட்டது" என இலங்கையின் மேற்குக் கரையில் அமைந்துள்ள மீன்பிடிக் கிராமமான தொடுவாவாவில் உள்ள தனது வீட்டின் முன் அமர்ந்திருந்த அந்தோனி சுஜித் கூறினார்.

"ஆனால் நௌரு தீவு நரகத்தைப் போலிருந்தது. அங்கே தங்குவதற்கு நல்ல வீடுகள் இல்லை. பாம்பு போன்ற காட்டு விலங்குகளின் ஆபத்தைச் சந்திக்க வேண்டும். அங்கே தொழில் செய்ய முடியாது என நௌரு அதிகாரிகள் குறிப்பிட்டனர். எனது குடும்பத்தவர்களுக்காக உழைக்க முடியாதிருந்ததால் நான் மீண்டும் இலங்கைக்கு  வந்தடைந்தேன்" என சுஜித் கூறுகிறார்.


Returned home: Anthony Sujith at home in Thoduwawa. Photo: Ben Doherty
"நௌருவில் என்ன நடக்கும் என எம்மிடம் ஒருவரும் கூறவில்லை. எவ்வளவு காலம் அங்கே நாம் தங்கியிருக்க வேண்டும் எனவும் கூறவில்லை. இதனால் நாம் நௌருவில் தங்கியிருப்பது தொடர்பாக அச்சப்பட்டோம். இதனால் நான் மீண்டும்  இலங்கைக்கு  திரும்பிச் செல்வதென தீர்மானித்தேன்" என கடந்த வாரம் இலங்கைக்கு  திரும்பி வந்த 18 பேரில் ஒருவரான சுஜித் கூறுகிறார்.

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் இறுக்கமான புதிய கரையோர எல்லைப் பாதுகாப்பு நடைமுறை காரணமாக புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட சுஜித் உட்பட 18 பேர் இலங்கைக்கு வந்தடைந்திருந்தனர். இவர்களில் 14 சிங்களவர்களும், 03 தமிழர்களும் ஒரு முஸ்லீமும் அடங்குவர்.

இவ்வாறு மேலும் பல புகலிடக் கோரிக்கையாளர்கள் தாமகவே தமது நாட்டுக்குத் திரும்புவதற்கான முதலாவது நகர்வாக இது உள்ளதாக இலங்கை  அரசாங்கமும் அவுஸ்திரேலிய அரசாங்கமும் நம்புகின்றன. தற்போது
இலங்கையர்கள்  தாமாகவே தமது நாட்டுக்கு திரும்பிச் சென்றுள்ளமை, தனது புதிய கட்டுப்பாட்டு முறைமையின் வெற்றியே என அவுஸ்திரேலிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

ஆனால் இவ்வாறு மீண்டும்
இலங்கைக்குச் திரும்பி சென்ற 18 பேரில் பெரும்பாலானவர்கள் சிங்களவர்களாவர். இலங்கையின் பெரும்பான்மை சமூகமான சிங்கள சமூகத்தைச் சேர்ந்த பலர் தமது பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காகவே அவுஸ்திரேலியாவுக்குச் செல்கின்றனர்.

ஆனால் இங்கு வாழும் சிறுபான்மை தமிழ் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் தமது பாதுகாப்பைக் கருத்திற் கொண்டே படகுகள் மூலம் அவுஸ்திரேலியாவில் தஞ்சம் புகுகின்றனர். இவ்வாண்டில் 3674
இலங்கையர்கள் அவுஸ்திரேலியாவைச் சென்றடைந்துள்ளதாகவும், 2200 பேர் கடல் வழியாகச் செல்ல முற்பட்ட போது தடுக்கப்பட்டதாகவும் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறு இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு தப்பிச் செல்லும் இலங்கையர்கள்  90 சதவீதமானவர்கள் தமிழர்கள் என இலங்கை காவற்துறை மா அதிபர் அஜித் றோகன தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் இலங்கைக்கு திரும்பி வந்தவர்களில் பெரும்பாலானவர்கள் மீனவர்களாவர். அனைத்துலக கப்பல்கள் மீன்பிடியில் ஈடுபடுகின்றமை, எரிபொருள் விலை உயர்வு போன்ற பல்வேறு காரணங்களால் மீன்பிடித் தொழிலை மேற்கொண்டு செய்ய முடியாத நிலையிலேயே இவர்கள் அவுஸ்திரேலியாவுக்குச் சென்றிருந்தனர். தற்போது அவுஸ்திரேலியாவிலிருந்து திரும்பி வந்த சிங்களவரான சுஜித் தனது பொருளாதாரத்தை கருத்திற் கொண்டே  இலங்கை விட்டு வெளியேறியதாக கூறுகிறார்.

"கடந்த மூன்று ஆண்டுகளாக மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவது கடினமாக உள்ளது. பிடிப்பதற்கு மீன்கள் இல்லை. எனக்கு எந்தத் தொழிலும் இல்லை. எனது குடும்பத்தவர்களைப் பராமரிப்பதற்காக நான் நாள்தோறும் பணத்தை கடனாகப் பெறவேண்டியிருந்தது. எனது வாழ்க்கை மிக மோசமாக போகின்றது. அவுஸ்திரேலியாவுக்குச் செல்வதற்காக மேலும் ரூ300,000 கடன் வாங்கியிருந்தேன். நான் நல்ல உழைப்பாளி. எனது குடும்பத்திற்கு நல்ல வாழ்வை அமைத்துக் கொடுக்க நான் விரும்புகிறேன். இதேபோன்று எனது பிள்ளைகளுக்கு கல்வியை வழங்க வேண்டும். சிறிலங்காவைப் பொறுத்தளவில் உணவு உண்ணுவதற்கு பணத்தைச் சம்பாதிக்கக் கூட என்னால் முடியவில்லை" என சுஜித் கூறுகிறார்.

படகு ஒன்றில் 16 நாட்கள் வரை பயணம் செய்து கொக்கோஸ் தீவைச் சென்றடைந்ததாகவும், அங்கே அவுஸ்திரேலிய அதிகாரிகளால் தான் சிறந்த முறையில் நடாத்தப்பட்டதாகவும் ஆகஸ்ட் 13ன் பின்னர் நௌருவுக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர் அவுஸ்திரேலியா தொடர்பான தனது எதிர்கால நம்பிக்கை சிதைந்து போனதாகவும் சுஜித் கூறுகிறார்.

"அவுஸ்திரேலியாவில் தொடர்ந்தும் நான் தங்கியிருந்திருந்தால், நல்ல வாழ்க்கை ஒன்றை உருவாக்கியிருக்கலாம். அங்கே எனது குடும்பத்திற்காக உழைத்திருக்க முடியும். ஆனால் நௌரு தொடர்பாக என்னால் எதுவும் கூறமுடியாது. தொழில் வாய்ப்பெதுவும் இல்லாது நான் அங்கே வாழமுடியாது என நினைத்தேன்" என்கிறார் சுஜித்.

இலங்கைக்கு திரும்பிச் செல்ல இணங்கியதற்காக 3300 டொலர்கள் பெறுமதியான உதவி வழங்கப்படும் என சுஜித் மற்றும் அவருடன் வந்தவர்களுக்கு வாக்குறுதி வழங்கப்பட்டுள்ளது. இதில் எவ்வளவு பணமாகவும் எவ்வளவு பொருளாகவும் தரப்படும் எனத் தெரியாது. அதாவது வியாபாரத்தை மேற்கொள்வதற்காகவும், புதிய மீன்பிடி வலைகள் அல்லது படகுகள் அல்லது ஏனைய உபகரணங்களை பெற்றுக் கொள்வதற்காகவும் உதவி செய்து தரப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. விமான நிலையத்தில் வைத்து தனக்கு ரூ13,000 தரப்பட்டதாக சுஜித் கூறுகிறார்.

இவ்வாறு இலங்கைக்கு திரும்பி வந்தவர்களுக்கு எவ்வாறான உதவிகளை வழங்குவது என்பது தொடர்பாக அவுஸ்திரேலிய அரசாங்கத்திற்கும் தனது நிறுவனத்திற்கும் இடையில் பேச்சுக்கள் மேற்கொள்ளப்படுவதாக இலங்கையில் பணியாற்றும் குடிவரவுக்கான அனைத்துலக அமைப்பின் இயக்குனர் றிச்சாட் டன்சிகர் தெரிவித்துள்ளார்.

"பணமாக கொடுப்பதை விட பொருளாக கொடுக்கவே நாம் விரும்புகிறோம். புதிய தொழில் வாய்ப்பொன்றுக்காக நாம் உதவி செய்ய முற்படும் போது நீண்ட காலம் நன்மை பயப்பதாக இருக்கும். தமது நாட்டுக்கு திரும்பி வந்தவர்களுக்கு இவ்வாறான உதவிகள் சிறந்தாக இருக்கும்" எனவும் றிச்சாட் டன்சிகர் தெரிவித்துள்ளார்.

"தற்போது என்னிடம் தொழில் எதுவுமில்லை. பணம் இல்லை. நாட்டை விட்டு சட்டரீதியற்ற முறையில் வெளியேறியதால் காவற்துறையினரால் எந்தநேரத்திலும் சித்திரவதைப்படுத்தப்படலாம் என்கின்ற அச்சம் உள்ளது" என சுஜித் கூறுகிறார். தனது கணவர் திரும்பி வந்ததிலிருந்து இரவில் தான் நித்திரை கொள்வது கூட அரிதாக உள்ளதாகவும், எந்த நேரம் காவற்துறையினர் கைது செய்கின்றார்களோ என்ற அச்சமே இதற்கான காரணம் எனவும் சுஜித்தின் மனைவியான நோனா தெரிவித்துள்ளார்.

"இவரைக் கைது செய்து விடுவார்களோ என நாம் இரவில் அச்சப்படுகிறோம். இவருக்கு இனி என்ன நடக்கும் என எமக்குத் தெரியாது" என்கிறார் நோனா.

கடந்த வாரம் இலங்கைக்கு திரும்பி வந்த 18 பேரிடமும் கொழும்பு விமான நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. சிலரிடம் ஐந்து மணித்தியாலங்கள் வரை விசாரணை செய்யப்பட்டது. அவுஸ்திரேலியா போனதற்கான காரணம் என்ன, அங்கிருந்து திரும்பி வரத் தீர்மானித்ததற்கான காரணம் தொடர்பாக இலங்கை குடிவரவு அதிகாரிகள், சீருடை தரித்த காவற்துறையினர், குற்றப்புலனாய்வு திணைக்களம் போன்றன விசாரணைகளை மேற்கொண்டன.

இவர்கள் எதிர்காலத்தில் சித்திரவதைகளை அனுபவிக்கலாம் எனக் கருதப்படுகிறது. கடந்த யூலையில் அவுஸ்திரேலியாவிலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட மற்றும் அங்கு செல்ல முற்பட்ட போது பிடிக்கப்பட்டவர்கள் பின்னர் சித்திரவதை செய்யப்பட்டு விசாரணைகள் எதுவுமின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள சம்பவங்களும் உள்ளன.

அவுஸ்திரேலிய அரசாங்கத்தால் புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட சிங்கள சகோதரர்களான சுமித் மற்றும் இண்டிக்க பலப்புவடுஜே ஆகியோர் இரு ஆண்டுகள் வரை எந்தவொரு விசாரணைகளுமின்றி தடுத்து வைக்கப்பட்டனர். இதேபோன்று தமிழரான சரத் கைது செய்யப்பட்டு, தலைகீழாகத் தொங்கவிடப்பட்டு இலங்கை காவற்துறையால் தாக்கப்பட்டார். இவர் விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர் என குற்றம் சுமத்தப்பட்டே இவ்வாறு சித்திரவதைப்படுத்தப்பட்டார்.

இலங்கையில் இவ்வாறான சித்திரவதைகள் மேற்கொள்ளப்படுவதை இலங்கை அரசாங்கம் நிராகரிப்பதைப் போல், காவற்துறை மா அதிபர் அஜித் றோகனவும் மறுத்துள்ளார்.

அந்தோனி சுஜித்துடன் இலங்கைக்கு திரும்பி வந்திருந்த கே.போக்கஸ் பெர்னாண்டோவிடமும் இலங்கை காவற்துறையிளர் இதுவரையில் இரு தடவைகள் விசாரணைகள் மேற்கொண்டுள்ளனர். "அவர்கள் என்னிடம் ஒரே கேள்வியையே இரு தடவைகளும் கேட்டுள்ளனர். அவுஸ்திரேலியா சென்றதற்கான காரணம் என்ன? இதற்காக நான் எவ்வளவு பணம் கொடுத்தேன் என்பதையும், யாருடைய படகில் சென்றேன் எனவும் வினவினர்" என்கிறார் போக்கஸ் பெர்னாண்டோ.

"அவர்களிடம் நான் ஒரே பதிலையே கூறினேன். படகுப் பயணத்தில் நான் சம்பந்தப்படவில்லை எனக் கூறினேன். சிறந்த எதிர்கால வாழ்வைக் கருத்திற் கொண்டே நான் அவுஸ்திரேலியா சென்றேன் எனவும் அவர்களிடம் தெரிவித்தேன்" என்கிறார் பெர்னாண்டோ.

பசுபிக் தீவில் நான்கு ஆண்டுகள் வரை தங்கியிருந்த போதிலும் குடும்பத்தவர்களைப் பராமரிப்பதற்கு தொழில் எதுவும் செய்ய முடியாத நிலையில் தான் இலங்கைக்கு திரும்பி வரத் தீர்மானித்தாக பெர்னாண்டோ கூறுகிறார். "எனது 45 ஆண்டு கால வாழ்க்கையில் நான் ஒருபோதும் காவற்துறை நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருக்கவில்லை. ஆனால் தற்போது அடிக்கடி என்னிடம் வரும் காவற்துறையினர் வாக்குமூலம் பதிவு செய்வதற்காக தமது நிலையத்துக்கு வருமாறு வற்புறுத்துகின்றனர்" என்கிறார் பெர்னாண்டோ.

"இதனால் நான் எனது மீன்பிடித் தொழிலைக் கூடச் செய்ய முடியவில்லை. நான் மீன்பிடிப்பதற்காக வடபகுதிக்குச் செல்ல வேண்டிய சந்தர்ப்பங்களும் உண்டு. இதன் போது எனது வீட்டிற்கு காவற்துறையினர் என்னைத் தேடி வரும்போது அவர்களால் என்னைச் சந்திக்க முடிவதில்லை. அவர்கள் என்னை கைது செய்து விடுவார்களோ என நான் அச்சப்படுகிறேன்" எனவும் பெர்னாண்டோ மேலும் கூறுகிறார்.

இலங்கை விட்டு வேறு நாடுகளுக்குச் செல்பவர்களில் சிலரே பொருளாதார நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு செல்கின்றனர். ஏனையோர் இலங்கை காவற்துறை, இராணுவம், அரசாங்கம் போன்றவற்றின் சித்திரவதைகளைத் தாங்கமுடியாமலேயே நாட்டை விட்டு வெளியேறுகின்றனர்.

இரணவில என்ற இடத்தைச் சேர்ந்த 20 வயதான கஜனை நாம் சந்திக்கச் சென்ற போது "நீங்கள் அரசாங்கத்துடன் தொடர்பற்றவர்கள் என நான் எவ்வாறு உறுதிப்படுத்த முடியும்?" என கேட்டார். நாம் உடனே எமது அடையாள அட்டைகள் மற்றும் ஏனைய உறுதிப்படுத்தல்களை காண்பித்தபோது அவர் எம்மை நம்பி எம்முடன் பேச முன்வந்தார்.

கஜனும் பொருளாதாரத்தை மையப்படுத்தி அவுஸ்திரேலியா சென்று பின்னர் தற்போது இலங்கைக்குத் திரும்பி வந்த 18 பேரில் ஒருவராவார். "எனது வாழ்வை முன்னேற்றி எனது குடும்பத்தவர்களுக்கு உதவி செய்வதற்குப் பொருத்தமான நாடு அவுஸ்திரேலியா என நான் நம்பினேன்" என்கிறார் கஜன்.

இவர் கிறிஸ்மஸ் தீவை அடைந்த போதும், கர்ப்பிணியாக உள்ள தனது மனைவி நோய்வாய்ப்பட்டுள்ளார் என அறிந்ததும் உடனடியாக நாட்டுக்குத் திரும்பியுள்ளார். அவுஸ்திரேலியா செல்வதற்காக கடனாகப் பெற்ற பணத்தை திருப்பிக் கொடுக்க வேண்டிய நிலையிலுள்ளார் கஜன். 3300 டொலர்கள் தருவதாக வாக்களித்துள்ளதை தான் நம்புவதாகவும் இதனைத் தந்தால் தான் தனது கடனை அடைத்த பின்னிருக்கும் மீதிப் பணத்தை வைத்து வியாபாரம் ஒன்றை ஆரம்பிப்பேன் எனவும் கஜன் கூறுகிறார்.

"தற்போதும் எமது கிராமத்திலிருந்து அவுஸ்திரேலியா நோக்கிப் படகுகள் செல்கின்றன. தமது வாழ்வில் தாம் வெற்றி கொள்ள வேண்டும் என மக்கள் நினைக்கின்றனர். நாங்கள் இந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதால் ஏன் இந்தச் சந்தர்ப்பத்தை அடைந்து கொள்ள முடியாது?" எனவும் கஜன் வினவுகிறார்.

செய்தி வழிமூலம் : smh.com.au - Ben Doherty 

மொழியாக்கம் : கவாஸ்கர்
[vuukle-powerbar-top]

Recent Post