Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

முஸ்லிம் காங்கிரஸ் சந்திப்பில் திருப்புமுனை இல்லை-தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு


கிழக்கு மாகாணசபையில் ஆட்சியமைப்பது குறித்து சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், நேற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுக்களை நடத்தியுள்ள போதும், திருப்புமுனை ஏதும் ஏற்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவர் இரா. சம்பந்தன் தலைமையிலும், முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையிலும் நேற்றுக்காலை இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

இதன்போது கிழக்கில் ஆட்சியமைப்பது தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

இந்தச் சந்திப்புக் குறித்து கருத்து வெளியிட்டுள்ள இரா.சம்பந்தன்,

“கிழக்கு மாகாணசபையில் ஆட்சியமைப்பது தொடர்பாக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இன்னும் முடிவு எதனையும் எடுக்கவில்லை என்று ரவூப் ஹக்கீம் எம்மிடம் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண மக்கள் வழங்கிய ஆணையை கருத்தில் கொண்டு, முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானம் எடுக்க வேண்டும் என்று நாம் அந்தக் கட்சியின் தலைவர்களுக்கு சுட்டிக்காட்டினோம்.

எமது கருத்துக்களை மிக அவதானமாக ஆராய்ந்து வருவதாக அவர்கள் கூறினர்.

இந்தப் பேச்சுக்கள் திருப்திகரமாக அமைந்தன.

அதேவேளை, இன்னும் இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுகளை நடத்திவரும் முஸ்லிம் காங்கிரஸ், முடிவொன்றை எடுக்கும் வரை காலஅவகாசம் வழங்குவதே பொருத்தமானது” என்று தெரிவித்துள்ளார்.

அதேவேளை, இந்தச் சந்திப்புத் தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்,

“கிழக்கு மாகாணசபை தொடர்பான இறுதி முடிவை எடுக்கும்போது, நாம் சுட்டிக்காட்டிய விடயங்களைக் கவனமாக ஆராய்வதாக முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்கள் கூறினார்.

நேற்று பேச்சுக்கள் நடத்தப்பட்ட போதும், இன்னமும் திருப்புமுனை ஏதும் ஏற்படவில்லை.

இலங்கை அரசும் கிழக்கில் ஆட்சியமைப்பதற்கு முஸ்லிம் காங்கிரசின் ஆதரவை கோரியுள்ளது.

அவர்கள் இன்னமும் எந்த முடிவையும் எடுக்கவில்லை.

முடிவு எடுப்பதற்கு அவர்கள் காலஅவகாசம் எதையும் கூறவும் இல்லை” என்று கூறியுள்ளார்.

[vuukle-powerbar-top]

Recent Post