Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

மத்திய அரசு பொது நுழைவுத் தேர்வை இரத்து செய்ய வேண்டும் இல்லையேல் அறப்போர் வைகோ அறிக்கை

மத்திய அரசு பொது நுழைவுத் தேர்வை இரத்து செய்ய வேண்டும் இல்லையேல் அறப்போர் வைகோ அறிக்கை மருத்துவம் மற்றும் பொறியியல் கல்வி மாணவர் சேர்க்கைக்கு பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்று கடந்த ஆண்டு மத்திய மனிதவளத்துறை அமைச்சர் கபில் சிபல் கூறியபோது, கடும் எதிர்ப்பு கிளம்பியது.

ஆனால், மத்திய அரசு கிராமப்புற ஏழை மாணவர்களின் நலனைக் கவனத்தில் கொள்ளாமல், மருத்துவக் கல்வி, பல் மருத்துவக் கல்வி படிப்புக்கு, இந்திய மருத்துவக் கவுன்சில் மூலம் பொது நுழைவுத்தேர்வு நடத்தப்போவதாக அறிவித்திருக்கிறது.

சமூகநீதிக்கு அடித்தளம் அமைக்கப்பட்ட தமிழ்நாட்டில் நுழைவுத் தேர்வு முறை இரத்துசெய்யப்பட்டு, உயர்நீதிமன்றமும், தமிழக அரசின் நடவடிக்கை சரிதான் என்று தீர்ப்பும் வழங்கி இருக்கின்றது. இந்நிலையில், மருத்துவக் கல்வியில் சேர பொது நுழைவுத் தேர்வு எழுத வேண்டும் என்ற மத்திய அரசின் அறிவிப்பு கிராமப் புற ஏழை, எளிய மாணவர்களின் தலையில் பேரிடியாக விழுந்துள்ளது. 

நகர்ப்புற மற்றும் மேல்தட்டு வகுப்பினர் மட்டுமே மருத்துவ பட்டம் மற்றும் பட்ட மேற்படிப்பு பெறும் வகையில் பொது நுழைவுத் தேர்வை திணிப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது ஆகும். 

தேசிய தகுதி மற்றும் பொது நுழைவுத் தேர்வு மூலம் குறிப்பிட்ட சதவிகித இடங்கள் மருத்துவக் கல்லூரிகளில் தனியாக ஒதுக்கீடு செய்யப்படும் என்று கூறப்படுகிறது. இது சமூக நீதியின் அடிப்படையையே தகர்த்துவிடும். தமிழ்நாட்டில் 2007 இல் இரத்துசெய்யப்பட்ட நுழைவுத் தேர்வை மீண்டும் நடைமுறைப்படுத்துவோம் என்று மத்திய அரசு அறிவித்திருப்பது கல்வித் துறையில் மத்திய அரசின் தாந்தோன்றித்தனமான போக்கையே காட்டுகிறது. மாநில அரசின் அதிகாரத்தில் இருந்த கல்வித்துறையைப் பறித்துக்கொண்டு, மத்திய அரசு தமது விருப்பம்போல் ஆதிக்கம் செலுத்துகிறது. 

சமூக நீதி மற்றும் மாநில சுயாட்சிக்கு எதிரான மத்திய அரசின் பொது நுழைவுத் தேர்வு திட்டத்தை உடனடியாக திரும்பப் பெறவேண்டும். சமூக நீதிக்கு உலை வைக்கும் மத்திய அரசு தன் போக்கினை மாற்றிக்கொண்டு நுழைவுத் தேர்வினை இரத்து செய்யாவிடில் மைய அரசை எதிர்த்து மறுமலர்ச்சி தி.மு.க. கிளர்ச்சி செய்யும் என அறிவிக்கிறேன்.

‘தாயகம்’ 
வைகோ 
சென்னை - 8 
பொதுச் செயலாளர், 30.09.2012 
மறுமலர்ச்சி தி.மு.க
[vuukle-powerbar-top]

Recent Post