Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

கிழக்கில் அனைத்துக்கட்சிகளும் பங்கேற்கும் தேசிய அரசு அமைக்க இடதுசாரி அமைச்சர்கள் தீவிர முயற்சி


கிழக்கு மாகாணசபையில் ஆசனங்களை வென்ற ஐந்து கட்சிகளையும் உள்ளடக்கிய தேசிய அரசு ஒன்றை அமைக்க இலங்கை அரசில் இடம்பெற்றுள்ள இடதுசாரித் தலைவர்கள் தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.

கிழக்குத் தேர்தலில் ஆசனங்களைப் பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, தமிழரசுக் கட்சி, ஐதேக, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தேசிய சுதந்திர முன்னணி ஆகிய ஐந்து கட்சிகளுக்கும் இதுதொடர்பாக இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி கடிதம் எழுதியுள்ளது.

இந்த ஐந்து கட்சிகளையும் உள்ளடக்கிய ஒரு தேசிய அரசை கிழக்கில் நிறுவுவதன் மூலம் போருக்குப் பிந்திய நல்லிணக்க முயற்சிகளுக்கு ஊக்கமளிக்க முடியும் என்று அந்தக் கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல்கட்சிகளின் பிரதிநிதிகளுடன் இலங்கையின் மூத்த அமைச்சரும், கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலருமான டியு.குணசேகர கலந்துரையாடியுள்ளார்.

தேசிய அரசை அமைப்பது தொடர்பாக இலங்கை அரசாங்கம் இந்தத் தேர்தலில் ஆசனங்களை வென்ற ஐந்து கட்சிகளுடனும் பேச வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஐந்து அரசியல் கட்சிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தின் பிரதிகள் இலங்கை அதிபர் மற்றும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி பொதுச்செயலர் மைத்திரிபால சிறிசேன ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் றொபேட் ஓ பிளேக் கொழும்பு வந்துள்ள நிலையில், இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

கிழக்கில் தேசிய அரசை அமைப்பதற்கான இந்த முயற்சிக்கு இலங்கையின் இடதுசாரித் தலைவர்களும் அமைச்சர்களுமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண, வாசுதேவ நாணயக்கார ஆகியோரும் பின்புலத்தில் இருப்பதாக தெரியவருகிறது.

இதற்கிடையே கிழக்கு மாகாணசபையிலும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியே ஆட்சியமைக்கும் என்று இலங்கை அரசின் பேச்சாளரான அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல நேற்றும் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
[vuukle-powerbar-top]

Recent Post