Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

கிழக்கு மாகாண முதல்வர் பதவிக்கு நஜீப் ஏ மஜீத்தை ஏற்க முஸ்லிம் காங்கிரஸ் மறுப்பு


கிழக்கு மாகாண முதல்வராக சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளரான நஜீப் ஏ. மஜீத் நியமிக்கப்படவுள்ளதாக, தகவல்கள் வெளியாகியுள்ள போதும், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அதை மறுத்துள்ளார்.

கிழக்கில் முஸ்லிம் ஒருவரே முதல்வராக பதவியேற்பார் என்றும், அவர் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசை சேர்ந்தவராகவே இருப்பார் என்றும் ரவூப் ஹக்கீம் ஆங்கில ஊடகம் ஒன்றுக்குத் தகவல் வெளியிட்டுள்ளார்.

கிழக்கு மாகாணசபையில், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசுடன் இணைந்து ஆட்சியமைக்கவுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, அந்தக் கட்சிக்கு இரண்டு மாகாண அமைச்சுப் பதவிகளை வழங்கவுள்ளதாக இலங்கை அரச தரப்பு வட்டாரங்கள் நேற்றுக் கூறியிருந்தன.

ஏனைய மாகாண அமைச்சு பதவிகளில் ஒன்றை முன்னாள் முதல்வர் சந்திரகாந்தனுக்கும், முன்னாள் மாகாண அமைச்சர் விமலவீர திசாயக்கவுக்கும் வழங்க ஆளும்கட்சி முடிவு செய்துள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் தகவல் வெளியிட்டிருந்தன.

அதேவேளை, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிட்ட, அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸ் மற்றும் றிசாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் ஆகியவற்றுக்கு சபை தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளர் ஆகிய பதவிகள் வழங்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.

தேசிய காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் சார்பில் முன்மொழியப்பட்ட அமீர் அலிக்கு முதல்வர் பதவியை வழங்க சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது.

இந்தநிலையிலேயே, நஜீப் ஏ மஜீத்தை முதல்வராக்க இலங்கை ஆளும்கட்சி தீர்மானித்ததாகவும் கூறப்பட்டது.

ஆனால், தமது நிபந்தனைகள் தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு, மற்றும் இலங்கை அரசு ஆகியவற்றிடம் இருந்து பதில் வரவில்லை என்று சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

“எமது நிபந்தனைககுக்கு அரசாங்கமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் பதில் தரவில்லை.

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் யாருக்கு ஆதரவளிக்கும் என்பதை, அவர்களின் பதிலுக்குப் பின்னர் வெளியிடுவோம்.

நாம் விதித்த நிபந்தனை என்ன என்பதை வெளியிட முடியாது.

முஸ்லிம் முதல்வர் ஒருவரைக் கோருவதற்கு எமக்கு உரிமை உள்ளது.

யாரை முதல்வராக நியமிப்பது என்று இன்னமும் தீர்மானிக்கவில்லை.

விரைவில் நடக்கும் அடுத்த உயர்மட்டக் குழுக் கூட்டத்தில் யார் முதல்வர் என்று தீர்மானிக்கப்படும்.

நாம் எமது கட்சியைப் பற்றி சிந்திக்கவில்லை. மக்களின் கோரிக்கைகள், எதிர்பார்ப்புகள் குறித்தே கவனம் செலுத்துகிறோம்.

ஊடகங்களில் வெளியாவது போன்று நஜீப் ஏ மஜீத்தோ அல்லது அமீர் அலியோ முதல்வராக வாய்ப்பில்லை. அது தவறான தவறான தகவல். வெறும் வதந்தி.

கிழக்கு முதல்வர் ஒரு முஸ்லிமாகவே இருப்பார், அதுவும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசை சேர்ந்தவராகவே இருப்பார்“ என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
[vuukle-powerbar-top]

Recent Post