Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரின் கடைசி நாளான இன்றும் எதிர்க்கட்சிகளின் கடும் அமளி

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரின் கடைசி நாளான இன்றும் எதிர்க்கட்சிகளின் கடும் அமளி ஏற்பட்டது.

இன்று மக்களவை கூடியதும் நிலக்கரி சுரங்க முறைகேட்டில் பிரதமர் பதவி விலகக் கோரி பாரதிய ஜனதா உறுப்பினர்கள் கோஷம் எழுப்பினர். இதுபோல், மாநிலங்களவையிலும் அக்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன. மக்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

மழைக் காலக் கூட்டத் தொடரின் கடைசி நாளான இன்றும் நாடாளுமன்றம் முடக்கப்பட்டதால், கடந்த 13 நாட்களாக அதன் வழக்கமான அலுவல்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

4 மசோதாக்கள் மட்டுமே நிறைவேற்றம் : இன்றுடன் முடிவடையும் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரின் இரு அவைகளிலும் மொத்தமாகவே 4 மசோதாக்கள் மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளன.

ராஜிவ் காந்தி இளைஞர் மேம்பாட்டு நிறுவன மசோதா, தேசிய மன நல மற்றும் நரம்பியல் மையம் தொடர்பான மசோதா, எய்ம்ஸ் (AIMS) திருத்த மசோதா மற்றும் ரசாயன ஆயுதங்களுக்கான திருத்த மசோதா ஆகிய 4 மசோதாக்கள் மட்டுமே ஒரு மாத காலமாக நடைபெற்ற இக்கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்டுள்ளன.

மக்களவையில் செப்டம்பர் 4-ம் தேதி, 20 நிமிட இடைவெளியில் 3 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. தேசிய நெடுஞ்சாலை ஆணைய திருத்த மசோதா, வடகிழக்குப் பகுதி மறுசீரமைப்பு திருத்த மசோதா, பணியிடங்களில் பெண்கள் பாதுகாப்பு தொடர்பான மசோதா ஆகியவை மக்களவையில் நிறைவேற்றப்பட்டன.

ஆகஸ்ட் 8-ம் தேதி தொடங்கிய மழைக்காலக் கூட்டத் தொடர் இன்று வரை நடைபெறுகிறது. அதாவது விடுமுறைகளை தவிர்த்து, மொத்தம் 20 வேலைநாட்களில் நாடாளுமன்றம் கூடியது.

இந்த கூட்டத் தொடரில் நிலுவையில் உள்ள 29 மசோதாக்களை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள திட்டமிடப்பட்டிருந்தது.

மேலும், 15 புதிய மசோதாக்களை அறிமுகப்படுத்தவும் மத்திய அரசு திட்டமிட்டிருந்தது.அசாம் கலவரம், வடகிழக்கு மாணவர்கள் மீதான தாக்குதல் ஆகிய காரணங்களால் நாடாளுமன்ற கூட்டத் தொடர் முதல் வாரம் பாதிக்கப்பட்டது.

பின்னர், நிலக்கரி சுரங்க விவகாரத்தில் பிரதமர் பதவி விலக வேண்டும் என பாரதிய ஜனதா அமளியில் ஈடுபட்டதால் 13-வது நாளாக நாடாளுமன்றம் முடங்கியது. இதனால், மத்திய அரசுக்கு சுமார் 26 கோடி ரூபாய் வீணாகியுள்ளது.
[vuukle-powerbar-top]

Recent Post