Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

இடிந்தகரை, கூத்தங்குழி கிராமங்களைச் சூறையாட காவல்துறை திட்டம்! வைகோ கடும் எச்சரிக்கை

12 மாத காலம் அமைதியான அறவழியில், இடிந்தகரை வட்டார மக்கள் கூடங்குளம் அணுமின் நிலையம் அமைக்கக்கூடாது, இயக்கக்கூடாது என்று, நியாயமான காரணங்களுக்காக போராட்டம் நடத்தினர். 

அந்த அறப்போரைக் கொச்சைப்படுத்துகின்ற முயற்சியில் மத்திய அரசின் அமைச்சர்கள், கிறித்துவத் தேவாலயங்களின் பின்னணி என்றும், வெளிநாட்டுப் பணத்தின் வேலை என்றும் களங்கச் சேற்றை வாரி இறைத்தனர். 

பல்லாயிரக்கணக்கான தாய்மார்கள், அணு உலை கூடாது என்பதில் உறுதியாகப் போராடி வருகின்றனர். அணு உலை, தென் தமிழ்நாட்டின் உயிருக்கு உலை வைக்கும், எமனின் உலைதான் என்பதால், இந்த மக்கள் போராடுகிறார்கள். 

அமைதியாகப் போராடிய மக்கள் மீது, காவல்துறை தடியடியும் கண்ணீர்ப்புகையும் வீசியதால், சில இடங்களில் அடிபட்ட இளைஞர்கள் தற்காப்பில் ஈடுபட்டனர். இந்நிலையில், மணப்பாட்டில் அணு உலை எதிர்ப்பாளரும் மீனவருமான அந்தோணிராஜ் என்பவரை, காவல்துறை சுட்டுக் கொன்றது. 

இடிந்தகரைக்குள் ஏராளமான காவல்துறையினர் நேற்று நுழைந்து, தேவாலயத்துக்கு உள்ளேயும் நுழைந்து, உண்ணாவிரத மைதானத்தில் இருந்த போர்டுகளை உடைத்து நொறுக்கினர். 

பல்லாயிரக்கணக்கில் மக்கள் திரண்டதால், போலீஸ் பின்வாங்கியது. இன்று, காவல்துறையைச் சேர்ந்த ஐந்து பேரை, இடிந்தகரையில் சிறை வைத்து இருப்பதாக ஒரு பொய்ச்செய்தியை, காவல்துறையே பரப்பிவிட்டு, இடிந்தகரைக்குள்ளும், கூத்தங்குழி ஊருக்குள்ளும் நுழைந்து, கடுமையான தாக்குதலை நடத்தத் திட்டமிட்டு இருப்பதாகத் தெரிகிறது. 

அணுசக்தி எதிர்ப்பு மக்கள் இயக்கத்தின் தலைவர் உதயகுமார் அவர்கள், காவல்துறை அடக்குமுறையைத் தடுப்பதற்காக, அப்பகுதி வாழ் மீனவர்களின் நலனைப் பாதுகாப்பதற்காக, இன்று இரவுக்குள் தானே காவல்துறையிடம் தன்னை ஒப்படைப்பதாகத் தெரிவித்து இருக்கிறார். 

இதற்குப் பின்னரும், இந்த கிராமங்களுக்கு அருகாமையில், இந்தியக் கடற்படையின் ரோந்துப் படகுகள் உலவுகின்றன. சில கிராமங்களுக்கு மேலே, இராணுவ ஹெலிகாப்டர்கள் வட்டமிடுகின்றன. 

தரைவழியில் போலீஸ் பட்டாளம் குவிக்கப்பட்டு உள்ளது. ஏதோ அந்நிய நாட்டு ஆக்கிரமிப்பு இராணுவத்தைச் சந்திப்பதுபோல, இத்தகைய கொடிய அடக்குமுறையை ஏவ, மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து திட்டமிட்டு இருக்கின்றன. இத்தகைய அராஜக அடக்குமுறைகளை,சர்வாதிகார நாடுகளில்தான் காண முடியும். 

எனவே, கடற்கரையோர கிராமங்களுக்குள் காவல்துறை நுழைந்து, அடக்குமுறையை நடத்தினால், அதனால் ஏற்படுகின்ற மொத்த விளைவுகளுக்கும், தமிழகக் காவல்துறையும், அரசும்தான் பொறுப்பு ஏற்க வேண்டியது வரும். பின் விளைவுகள், மிகவும் விபரீதமாக அமையும் என எச்சரிக்கிறேன்! 

 ‘தாயகம்’ 
வைகோ 
சென்னை - 8 
பொதுச் செயலாளர், 
11.09.2012 
மறுமலர்ச்சி தி.மு.க
[vuukle-powerbar-top]

Recent Post