Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

கூடங்குளம் அணுஉலை போராளிகள் மீது காவல்துறையின் தாக்குதல் - வைகோ கண்டனம்


இன்று வைகோ வெளியிட்ட அறிக்கை வருமாறு 

கூடங்குளம் அணு உலை போராட்டத்தினர்  மீது காவல்துறையின் தாக்குதல்!  வைகோ கண்டனம்! 

மதிமுக கூடங்குளம் அணுமின் நிலையம் பேரழிவை ஏற்படுத்தும் என்பதால், அந்தப் பகுதியைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள், இடிந்தகரையில், ஓராண்டுக்கும் மேலாக அமைதி வழியில், அறவழியில், பட்டினிப் போராட்டம் நடத்தி வந்தனர். இம்மாதிரி ஒரு போராட்டம், ஒரே இடத்தில், ஓராண்டுக்கும் மேலாக, அறவழியில் நடந்த வரலாறு, இந்தியாவில் வேறு எங்கும் கிடையாது. சாதி, மதம், கட்சி எல்லைகளைக் கடந்து, அம்மக்கள் போராடினர். 1988 ஆம் ஆண்டு, நவம்பர் மாதம், கூடங்குளம் அணுமின் நிலையம் குறித்து, அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தி அறிவித்த நாளில் இருந்து, இப்பகுதி வாழ் மக்கள், குறிப்பாக மீனவ சமுதாயத்தினர் போராடி வருகின்றனர். 

குறிப்பாக ஜப்பானில் புகுஷிமா அணு உலை விபத்து நேர்ந்ததற்குப் பின்னர், உலகத்தில் பல்வேறு நாடுகள் அணு உலைகளை மூட முடிவு செய்து உள்ள நிலையில், இடிந்தகரைப் போராட்டம், மாபெரும் மக்கள் போராட்டம் ஆகியது. ஆனால், காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு, அணு உலையை இயக்கியே தீருவோம் என்றதோடு, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல், மேலும் அணு உலைகளை அங்கே அமைக்கப் போவதாக அறிவித்தது. தமிழ்நாட்டில் மின்வெட்டால் பாதிக்கப்பட்ட மக்களிடம், கூடங்குளம் அணு உலை மூலமாக மின்சாரம் கிடைக்கும் என்ற பிரச்சாரத்தை, மத்திய அரசும், மாநில அரசும் மேற்கொண்டன. 

இந்தியாவில், மொத்தம் 21 அணு உலைகள் தருகின்ற மின்சாரம், நாட்டின் மொத்த மின்சார உற்பத்தியில், 2.7. விழுக்காடு மட்டுமே ஆகும். கூடங்குளம் அணு உலையால், தமிழ்நாட்டுக்கு அதிகபட்சம், 250 மெகா வாட் மின்சாரம்தான் கிடைக்கும். மின் வாரியத்தைச் சீர்படுத்துவதன் மூலம், இயற்கை எரிவாயு மூலமும், புனல் மின் நிலையங்கள், அனல் மின் நிலையங்கள் மூலம், சூரிய வெப்பத்தின் மூலமும், நமக்குத் தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்து கொள்ளலாம். 

கூடங்குளத்தில் உற்பத்தியாகும் மின்சாரத்தை, கொலைகார சிங்களவனுக்குக் கொண்டு போய்க் கொடுக்க, கடலுக்கு அடியில் கேபிள் அமைக்கும் வேலையும் வேகமாக நடக்கின்றது. இடிந்தகரையில் நடந்த போராட்டத்தில், மாற்றுத்திறனாளிகளும், கன்னியாஸ்திரீகளும் ஆயிரக்கணக்கான தாய்மார்களும், 365 நாள்கள் தொடர்ந்து, உண்ணாநிலை அறப்போர் நடத்தினர். இத்தனைக்குப் பிறகு, தமிழகத்தின் முதல் அமைச்சர், அணு உலையால் எந்தப் பாதிப்பும் இல்லை என்று செப்டெம்பரில் அறிவித்தவர், கடற்கரையோர மக்களின் கொந்தளிப்பைக் கண்டு, அவர்களின் அச்சம் தீரும்வரை, அணு உலையை இயக்க மாட்டோம் என்று உறுதி கொடுத்தார். ஆனால், அந்த உறுதிக்கு மாறாக, அணு உலையை இயக்குவதற்கு அனுமதி அளித்தார். மக்களின் போராட்டத்தை நசுக்கி விடலாம் என்று கருதி, மத்திய அரசு, அணு உலையில் யுரேனியம் எரிபொருள் நிரப்பும் வேலையைத் தொடங்கியது. இவர்களது நோக்கம் எல்லாம், இங்கே கிடைக்கும் புளுடோனியத்தை, அணுகுண்டுக்குப் பயன்படுத்துவதற்காகத்தான்.

 எனவே, நேற்றைய தினம், இடிந்தகரை, கூடங்குளம், வைராவிக்குளம், கூட்டப்புளி பகுதிகளைச் சேர்ந்த மக்கள், அணு உலையைத் திறக்கக்கூடாது என்று அமைதிவழியில், அறப்போர் நடத்தினர். இன்று, அவர்களை, காவல்துறையினர் அச்சுறுத்தி மிரட்டி, போராட்டத்தை ஒடுக்கி விடலாம் என்று, தடியடி நடத்தி, கண்ணீர்ப்புகை வீசினர். இதில் மீனவர்கள் பலர் காயம் அடைந்து உள்ளனர். இடிந்தகரையில்,தேவாலயத்துக்கு உள்ளே காவல்துறையினர் நுழைந்தது அக்கிரமமான செயல். அதுமட்டும் அல்ல, இவ்வளவு காலமும் உண்ணாவிரதப் போராட்டம் நடந்த இடத்தில் இருந்த போர்டுகளை போலீசார் உடைத்து நொறுக்கியதோடு, உண்ணாவிரத மேடையில், அச்சில் ஏற்ற முடியாத விதத்தில், கீழ்த்தரமாக நடந்து கொண்டனர். கூடங்குளத்தில் தெருவில் போவோர் வருவோரையெல்லாம், போலீசார் கடுமையாகத் தாக்கி உள்ளனர். கடற்கரை நெடுகிலும் பதற்றம் ஏற்பட்டதற்கு, காவல்துறையின் நடவடிக்கைகளே முழுக்காரணம் ஆகும் என்பதால், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பலத்த கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாடு அரசு, கூடங்குளம் அணுமின் நிலையத்தை இயக்க அனுமதிக்கக் கூடாது. அப்பகுதி வாழ் மக்கள் மீது போடப்பட்டு உள்ள அனைத்து வழக்குகளையும், காவல்துறை திரும்பப் பெற வேண்டும். 

மேலும் அடக்குமுறையைப் பயன்படுத்த நினைத்தால், அது எரிமலையின் சீற்றத்தைக் கைகளால் அடக்க முயலும் விபரீதம் ஆகி விடும் என எச்சரிக்கிறேன். 

‘தாயகம்’ வைகோ 
 பொதுச் செயலாளர், 
10.09.2012 மறுமலர்ச்சி தி.மு.க
[vuukle-powerbar-top]

Recent Post