Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தாக்குதலுக்குள்ளான இலங்கை சுற்றுலாப் பயணிகளை சிறப்பு விமானம் ஏற்றிச் சென்றது


இலங்கையில் இருந்து சுற்றுலா வந்தவர்கள் மீது தமிழ்நாட்டில் தாக்குதல் நடத்தப்பட்டதை அடுத்து நேற்றிரவு அவசர அவசரமாக சிறப்பு விமானம் மூலம் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

வேளாங்கண்ணி மாதா பேராலய திருவிழாவில் பங்கேற்பதற்காக இலங்கையில் சிலாபத்தைச் சேர்ந்த 184 பேர் கடந்த 2ம் நாள் திருச்சி வந்தனர்.

மறுநாள் அவர்கள் பூண்டி மாதா கோயிலுக்கு சென்று வழிபட்டபோது, அது குறித்து அறிந்து கொண்ட மதிமுக, நாம்தமிழர் கட்சியினர், எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழ்நாடு காவல்துறையினர் தலையிட்டு அவர்களை சமாதானப்படுத்தினர்.

இதையடுத்து அன்றிரவு தங்கிவிட்டு மறுநாள் இலங்கைக்குத் திரும்பி விடுவதாக சுற்றுலாப் பயணிகள் தெரிவித்தனர்.

இந்தநிலையில் நேற்று காலை 5.30மணிக்கு வேளாங்கண்ணிக்கு காவல்துறை பாதுகாப்புடன் புறப்பட்டனர்.

கோயிலில் அவர்களை சிறிது நேரம் மட்டுமே தரிசனம் செய்ய காவல்துறையினர் அனுமதித்தனர்.

அவர்களை உடனடியாக திருச்சி விமானநிலையம் செல்லுமாறு காவல்துறையினர் அறிவுறுத்தினர்.

இதற்கிடையில், இலங்கை சுற்றுலாப் பயணிகள் வந்த தகவல் அறிந்து வேளாங்கண்ணியிலும் மதிமுக, நாம் தமிழர் கட்சியினர் குவிந்தனர். தமிழகத்தை விட்டுசெல்லுமாறு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதனைத் தொடர்ந்து 7 பேருந்துகளில் வேளாங்கண்ணியிலிருந்து திருச்சி விமான நிலையத்துக்கு புறப்பட்டனர். இவர்களுக்கு 20 காவல்துறையினர் பாதுகாப்பு வழங்கினர்.

எனினும், திருவாரூர், கொரடாச்சேரி, நீடாமங்கலம் ஆகிய இடங்களில் மதிமுக, நாம் தமிழர் இயக்கம், விடுதலைசிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு தமிழ் அமைப்பினர் அந்த வாகனங்களை வழிமறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூர் மேம்பாலம் பகுதியில் வாகனங்கள் மீது மதிமுகவினர் செருப்புகளை வீசினர்.

நேற்று பிற்பகல் 2.10 மணியளவில் வாகன அணி காட்டூர் அருகே வந்தபோது, வாகனம் ஒன்றில் வந்தவர்கள், நான்காவதாக சென்ற பேருந்தை வழிமறித்து நிறுத்தினர்.

சுமார் 10 பேர் பேருந்துகள் மீது சராமரியாக கற்களை வீசினர். இதில் 3 பேருந்துகளின் முன்புற கண்ணாடிகள் உடைந்து நொருங்கின. அதிலிருந்த சிலருக்கு கண்ணாடி கீறல்கள் ஏற்பட்டது.

அதன்பின்னர், திருச்சி காவல்துறையின் மேலதிக பாதுகாப்புடன், திருச்சி விமான நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு காவல்துறையினரால் விசாரணைகள் நடத்தப்பட்டன.

அதன்பின்னர், கொழும்பில் இருந்து வந்த மிகின் லங்கா சிறப்பு விமானம் மூலம் அனைவரும் நேற்றிரவு 10.40 மணியளவில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

திருப்பி அனுப்பப்பட்ட சுற்றுலாப் பயணிகளில் பெரும்பாலானோர், சிலாபம், நீர்கொழும்பு பகுதிகளைச் சேர்ந்த சிங்களம் பேசும் தமிழர்கள் என்று தெரியவருகிறது.
[vuukle-powerbar-top]

Recent Post