Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

உயர் நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக வேண்டும் – சீமான் கோரிக்கை



உயர் நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக வேண்டும் – சீமான்

இன்று நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் வெளியிட்டுள்ள  அறிக்கையில் ..
சென்னை உயர் நீதிமன்றம் அமைக்கப்பட்டு 150 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள பெருமைக்குரிய நிலையில், இப்போதாவது சென்னை உயர் நீதிமன்றத்தின் வழக்காடு மொழியாக தமிழ் மொழியை அங்கீகரிக்க மத்திய அரசு முன்வர வேண்டும். 

தொன்மையும், சொல்வளமும் மிக்க தமிழ் மொழி சட்ட மொழியாகும் தகுதியைப் பெற்றுள்ள மிகச் சிறந்த மொழி என்று மொழியியல் வல்லுனர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நாடு விடுதலைப்பெற்று 65 ஆண்டுகள் கடந்த விட்ட பின்னரும், தமிழ் மொழிக்கு உரிய சட்டப் பூர்வமான உயர் நிலை மத்திய அரசால் வழங்கப்படவில்லை. 

இந்திய அரசமைப்பின்படி, இந்தியும் ஆங்கிலமுமே மத்திய அரசின் ஆட்சி மொழியாக இருக்கிறது. தமிழ் உள்ளிட்ட இந்த நாட்டின் இதர தேசிய இனங்களின் மொழிகள் அனைத்தும் தேச மொழிகள் என்று அரசமைப்புப் பட்டியலில் இடம்பெற்றிருந்தாலும், மத்திய அரசின் ஆட்சி மொழியாக அங்கீகரிக்கப்படாத ஒரு நிலை உள்ளது. இது தமிழ் நாட்டிற்கும், தமிழின மக்களுக்கும் இழைக்கப்படும் அநீதியாகும். 

தொன்மையும், வளமும் நிறைந்த தமிழ் மொழிக்கு செம்மொழி என்ற பெருமையை மத்திய அரசு அளித்திருந்தாலும், அதனை ஆட்சி நிர்வாக மொழியாகவும், சட்ட மொழியாகவும் ஏற்காதது வினோதமாகும். மத்திய அரசு விடுக்கும் நிர்வாக ரீதியிலான கடிதங்கள் அனைத்தும் இந்தியிலும், ஆங்கிலத்திலும்தான் தமிழக அரசுக்கு எழுதப்படுகிறது. தமிழக அரசு மத்திய அரசுக்கு எழுதும் கடிதங்கள் ஆங்கிலத்தில்தான் எழுத வேண்டும் என்ற நிலை உள்ளது. நாடாளுமன்றத்தில் கேட்கப்படும் கேள்விகளுக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த அமைச்சர்கள், இந்தியிலோ அல்லது ஆங்கிலத்திலோதான் பதிலளிக்க வேண்டும் என்ற கட்டாயம் இருக்கிறது. இதேபோல் தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையிலும், மதுரையிலும் இயங்கும் உயர் நீதிமன்றத்தில் தமிழ் மொழி வழக்காடு மொழியாக இல்லை.

தமிழக அரசு எந்தச் சட்டத்தை இயற்றினாலும் அதன் ஆங்கில பதிப்பையே சட்டப் பூர்வமானதாக கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் உள்ளது. இந்த நிலையை மாற்றியாக வேண்டிய கட்டாய சூழல் ஏற்பட்டுள்ளது. தமிழை செம்மொழியாக அறிவித்த மத்திய அரசு, அதனை சென்னை உயர் நீதிமன்றத்தின் வழக்காடு மொழியாக அங்கீகரிக்க வேண்டும். தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும் என்று மதுரையில் வழக்குரைஞர்கள் பட்டிணிப் போராட்டம் நடத்தியபோது, உயர் நீதிமன்றத்தில் தமிழில் வழக்காட தடையேதும் இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி எம்.ஜே. இக்பால் கூறியிருந்தார். 

ஆனால் அது சட்டப்பூர்வமான ஒரு நடவடிக்கை அல்ல. எனவே தமிழை சென்னை உயர் நீதிமன்றத்தின் வழக்காடு மொழியாக்க வேண்டும் என்று கோரி தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை குடியரசு தலைவர் ஏற்றுக்கொண்டு அது அரசிதழில் வெளியாக வேண்டும். இந்தி மொழி பேசும் மக்கள் நிறைந்த மாநிலங்களான உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், இராஜஸ்தான் ஆகிய மாநிலங்களின் உயர் நீதி மன்றங்களில் வழக்காடு மொழியாக இந்தி அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 

அதேபோல் சென்னை உயர் நீதிமன்றத்தின் வழக்காடு மொழியாக தமிழ் மொழி அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசை தமிழக முதல்வர் வற்புறுத்த வேண்டும். இந்தியாவின் மாநிலங்களில் அந்தந்த மக்கள் பேசும் மொழியிலேயே உயர் நீதிமன்ற நடவடிக்கைகள் இருக்க வேண்டும் என்று அரசமைப்பு சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும். அதற்கான போராட்டத்தில் தமிழக அரசும், தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகளும் ஈடுபட வேண்டும். 

 தமிழை உயர் நீதிமன்ற வழக்காடு மொழியாக்க வேண்டும் என்ற தீர்மானத்திற்கு குடியரசுத் தலைவர் ஏற்பளிக்க வேண்டும் என்று கோரி மதுரையில் வழக்குரைஞர்கள் நடத்திவரும் போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி தனது முழு ஆதரவையும் தெரிவித்துக்கொள்கிறது. இவ்வாறு இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.  



[vuukle-powerbar-top]

Recent Post