Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

இலங்கை காவல்துறையினரின் மோசமான செயற்பாடுகள்

இலங்கை காவல்துறையினரின் மோசமான செயற்பாடுகள் காரணமாக தாயகத்திலுள்ள தமிழ் மக்கள் பெரும் நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ளனர். தமிழ் மக்களுக்குக் கிடைக்கின்ற சேவைகளை காவல்துறையினர் பயன்படுத்தி வருகின்றனர். இதனாலேயே ஈழத்திலுள்ள தமிழ் மக்கள் தினமும் அவலங்களைச் சந்தித்து வருகின்றனர்.
குறிப்பாக தீவகத்தில் ஊர்காவற்றுறைக்கும் காரைநகருக்கும் இடையிலான பாதைச் (பாஜ்) சேவையை ஊர்காவற்றுறை காவல்துறை அதிகாரியும் அதே காவல்துறை நிலையத்தில் பணியாற்றும் காவல்துறையினரும் பயன்படுத்தி வருவதால் இப்பாதையூடாகப் பயணிக்கும் பொதுமக்களும் அரச உத்தியோகத்தர்களும் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
காரைநகர் மற்றும் வலிகாமத்தில் சுழிபுரம், சங்கானை, மானிப்பாய், நவாலி, அராலி ஆகிய இடங்களிலிருந்து ஊர்காவற்றுறை, வேலணை, நெடுந்தீவு உள்ளிட்ட தீவகத்தின் பல தீவுகளுக்கு தொழில் நிமித்தம் செல்கின்ற உத்தியோகத்தர்களும் அன்றாடத் தேவைக்கு செல்கின்ற பொதுமக்களும் ஊர்காவற்றுறைக்கும் காரைநகருக்கும் இடையிலான சிறு கடலைக் கடப்பதற்கு அதில் சேவையில் ஈடுபடும் பாதை எனப்படும் பாஜ் சேவையைப் பயன்படுத்தி வருகின்றனர்.
இங்கு செல்கின்ற உத்தியோகத்தர்கள் குறித்த பாஜ் சேவையைப் பயன்படுத்தாவிட்டால் பண்ணைப் பாலத்தினூடாகப் பயணித்து யாழ் நகருக்குச் சென்று நீண்ட தூரம் மற்றும் நேர விரயத்துடனேயே தமது இடங்களுக்குச் செல்ல முடியும்.
இந்த நிலையில் பிற்பகல் குறித்த பாதை ஊர்காவற்றுறையிலிருந்து காரைநகர் செல்வதற்கும் காரைநகரிலிருந்து ஊர்காவற்றுறைக்குச் செல்வதற்கும் பொதுமக்களும் அரச உத்தியோகத்தர்கள் ஏறி நிற்கின்ற சந்தர்ப்பத்தில் அங்கு வருகின்ற குறித்த காவல்துறை அதிகாரியும் காவல்துறையினரும் மக்களை இறக்கிவிட்டு தமது வாகனத்தையும் ஏற்றிக்கொண்டு புறப்படுகின்றனர். வீதி அபிவிருத்தி அதிகார சபையால் செயற்படுத்தப்படும் இந்தச் சேவையை பயன்படுத்துகின்ற காவல்துறையினர் மேற்படி சபையின் அதிகாரிகளை அச்சுறுத்துவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில் மக்களுக்கு நீதி நியாயத்தை நிலைநாட்ட வேண்டிய காவல்துறையினரே இவ்வாறு செயற்பட்டால் பொது மக்கள் எங்கு போய் நீதியை எதிர்பார்ப்பது என்று மக்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.
[vuukle-powerbar-top]

Recent Post