Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

ராஜபக்சேவுக்கு எதிரான அறப்போராட்டம் திட்டமிட்டபடி நடக்கும் வைகோ அறிக்கை

மத்தியப் பிரதேச சாஞ்சியில், ராஜபக்சேவுக்கு எதிரான அறப்போராட்டம் திட்டமிட்டபடி நடக்கும் வைகோ அறிக்கை மத்தியப் பிரதேச மாநிலத்தில், விதிஷா நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சாஞ்சியில் செப்டம்பர் 21 ஆம் தேதி நடைபெற இருக்கும் புத்தமத கல்வி மையத்திற்கு அடிக்கல் நாட்டும் விழாவில், பங்கேற்க வருகின்ற சிங்கள அதிபர் ராஜபக்சே இலட்சக் கணக்கான ஈழத் தமிழர்களை படுகொலை செய்த மாபாவி ஆவான். 

மனித குலத்திற்கு கருணையை, அறத்தை, அன்பை, மனித நேயத்தை, சகிப்புத்தன்மையை போதித்த புத்தர் பெருமான் அரச வாழ்வை உதறித் தள்ளிவிட்டு, அரண்யத்தில் போதி மரத்தடியில் ஞானம் பெற்ற பெருமான் ஆவார். ஈவு இரக்கமின்றி பிஞ்சுக் குழந்தைகளையும், தாய்மார்களையும், யுத்த களத்தில் ஆயுதம் ஏந்தாத நிராயுதபாணிகளையும் தனது முப்படைகளை ஏவி கொன்று குவித்த கொடியவனான ராஜபக்சே, அசோகச் சக்கரவர்த்தி கட்டி எழுப்பிய புத்த விகாரைக்குள் அடியெடுத்து வைக்க அணு அளவும் அருகதை அற்றவர் ஆவார். அதனால்தான் சாஞ்சிக்கு வர இருக்கும் சிங்கள அதிபர் ராஜபக்சேவுக்கு எதிராக கருப்புக் கொடி அறப்போர் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் அறிவித்துள்ளது. 

இது குறித்து மத்தியப் பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகானுக்கு நான் விளக்கமாக கடிதம் எழுதி, அதில் ராஜபக்சே வருகையை இரத்து செய்யுமாறு கோரிக்கை விடுத்தேன். பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற எதிர்கட்சித் தலைவரும், விதிஷா நாடாளுமன்ற உறுப்பினருமான சுஷ்மா சுவராஜ் கொழும்பு நகரில், அதிபர் ராஜபக்சேயைத் தனியாகச் சந்தித்ததோடு, கடந்த ஒன்றாம் தேதி டெல்லியில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியின் போது, சாஞ்சி புத்தமத விழாவில் ராஜபக்சே பங்கேற்க இருப்பதை முதன் முதலாக அறிவித்தார். 

தமிழகத்தில் இதற்கு எதிர்ப்பு எழுந்த உடன்தான் அழைப்பு விடுக்கவில்லை என்கிறார். அப்படியானால், அழைத்தது யார்? மத்தியில் ஆளும் காங்கிரஸ் தலைமையிலான மன்மோகன் சிங் அரசு தான் பின்னணியில் சதித்திட்டம் வகுக்கிறது. அதற்கு மத்தியப் பிரதேசத்தின் பாரதிய ஜனதா அரசு உடந்தையாக செயல்படுகிறது. 

21 ஆம் தேதி அறப்போராட்டத்திற்காக சாஞ்சி காவல்நிலையத்தில் விண்ணப்பம் கொடுப்பதற்கு நேற்றைய தினம் செப்டம்பர் 11 இல் மறுமலர்ச்சி தி.மு.க.வின் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் டாக்டர் சி.கிருஷ்ணன் அவர்களும், எனது உதவியாளர் செந்தூர் பாண்டியனும் சென்றனர். 

அவர்களை காவல்துறையினர் கடுமையான சோதனைக்கு ஆட்படுத்தியதோடு, அவர்கள் தங்கியிருந்த அறையைச் சுற்றிலும் காவல் துறையினர் குவிக்கப்பட்டனர். இந்நிலையில், புத்தமத அமைப்பு என்ற பெயரில் ராஜபக்சேவுக்கு எதிராக அறப்போர் நடத்துவதைத் தாங் கள் கண்டிப்பதாகவும், எதிர்ப்பதாகவும் அறிக்கை வெளியிட்டுள்ளனர். மத்திய அரசினுடைய உளவுத்துறை இதன் பின்னணியில் சதித் திட்டம் வகுப்பது நம்பகமாகத் தெரிகிறது. 

இந்தியாவில் ராஜபக்சேவுக்கு பெரும் வரவேற்பு என்றும், எதிர்ப்பே கிடையாது என்றும் வெளிஉலகத்திற்கு காட்டுவதற்காக மத்திய அரசு சிலரைத் தூண்டிவிட்டு, சதிவேலையில் ஈடுபட்டுள்ளது. இச்சதிச் செயலுக்கு மத்தியப் பிரதேச மாநிலத்தின் பாரதிய ஜனதா அரசு உடந்தையாக செயல்படாது என்று நான் நம்புகிறேன். 

எங்கள் போராட்டம் புத்தமதத்திற்கு எதிரானது அல்ல. புத்தரின் கொள்கைகளுக்கு நேர் விரோதமாக, அரச பயங்கரவாதத்தை நடத்திய ஒரு கொடியவன் புத்தர் விழாவில் பங்கேற்பதற்கு எதிர்ப்புக் காட்டவே எங்கள் அறப்போராட்டம். திட்டமிட்டபடி அறப்போராட்டம் அமைதி வழியில் நடைபெறும். பங்கேற்க விழைவோர், மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் தலைமை அலுவலகமான தாயத்தில், செப்டம்பர் 15 ஆம் தேதிக்குள், தங்கள் பெயர்களை பதிவுசெய்துகொள்ளுமாறு அன்புடன் வேண்டுகிறேன். 

‘தாயகம்’ 
வைகோ 
சென்னை - 8 
பொதுச் செயலாளர், 
12.09.2012 
மறுமலர்ச்சி தி.மு.க
[vuukle-powerbar-top]

Recent Post