Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தமிழகத்தை பற்றி பேசிய இலங்கை பாராளுமன்ற இன்றைய கூட்டம்

இந்திய மத்திய அரசாங்கம் மற்றும் தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆகிய தரப்பினருடன் கலந்துரையாடி இலங்கை யாத்திரிகர்களுக்கு அந்த நாட்டில் சுதந்திரமாக நடமாடுவதற்குரிய சூழலை உருவாக்கிக் கொடுக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர இன்று பாராளுமன்றில் தெரிவித்துள்ளார். 

அண்மையில் இடம்பெற்றதைப்போன்ற சம்பவங்கள் இனிமேல் இடம்பெறாத வகையில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளதாகவும் அவர் கூறினார். இந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்படாத பட்சத்தில் இராஜதந்திர உறவுகளில் விரிசல் ஏற்படலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

இதேவேளை இந்தியாவுடனான வெளியுறவுக் கொள்கைகள் அரசாங்கத்தால் சீர்குலைக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல இன்று பாராளுமன்றில் தெரிவித்துள்ளார். 

புதுடில்லியை விட தென்னிந்தியாவுடனான உறவுகளே இலங்கைக்கு முக்கியமானதாக அமைந்துள்ளது என்றும் மாநிலங்கள் ஊடாகவே இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை நிர்ணயிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

தென்னிந்தியாவிலுள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க ஆதரவாளர்களால் இந்தியாவுக்கான விஜயத்தில் ஈடுபட்டுள்ள ஜனாதிபதிக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டுள்ள எதிர்ப்பு நடவடிக்கைகள் மூலம் எதிர்க்கட்சியினர் மகிழ்ச்சியடைவதாக இந்த விவாதத்தில் கலந்துகொதண்ட பிரதி அமைச்சர் எம்.கே.டி.எஸ்.குணவர்தன தெரிவித்துள்ளார். 

இலங்கை யாத்திரிகர்கள் தென்னிந்தியா ஊடாக பிரயாணங்களை மேற்கொள்வது குறித்து அமைச்சரவை விடுத்துள்ள பயண ஆலோசனையின் பிரகாரம் செயற்பட வேண்டும் என்றும் பிரதியமைச்சர் தெரிவித்துள்ளார். 

எதிர்காலத்தில் அங்கு பிரயாணங்களை மேற்கொள்கின்றவர்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாதவாறு நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் அவர் கூறினார். 

இதேவேளை இந்த விவாதத்தில் கலந்துகொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தென்னிந்தியாவில் யாத்திரிகர்கள் தாக்கப்பட்டமைக்கு கவலையைத் தெரிவித்துக்கொள்வதாகவும் இனப் பிரச்சினைக்குத் தீர்வு வழங்கப்படுமாயின் இத்தகைய பிரச்சினைகள் இடம்பெற மாட்டாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
[vuukle-powerbar-top]

Recent Post