Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

கிழக்கு மாகாணசபையில் யாருக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காது – கருத்துக்கணிப்பில் தகவல்


இலங்கையில் வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ள மூன்று மாகாணசபைகளுக்கான தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியால் வடமத்திய, சப்ரகமுவ மாகாணசபைகளில் மட்டும் இலகுவான வெற்றியைப் பெறமுடியும் என்றும், கிழக்கில் தேர்தல் முடிவு மூன்று அணிகளாக பிளவுபட்டிருக்கும் என்றும் கருத்துக்கணிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

களனி பல்கலைக்கழக தொடர்பாடல் திணைக்கள மாணவர்கள் மேற்கொண்ட கருத்துக்கணிப்பிலேயே இது தெரியவந்துள்ளதாக, களனி பல்கலைக்கழக தொடர்பாடல் திணைக்களத் தலைவர் பேராசிரியர் றோகண லக்ஸ்மன் பியதாச தெரிவித்துள்ளார்.

இந்தக் கருத்துக்கணிப்பின் படி, மூன்று மாகாணசபைகளிலும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு 59 வீதமான வாக்குகளும், ஐதேகவுக்கு 15 வீதமான வாக்குகளும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு 10 வீதமான வாக்குகளும், இலங்கை முஸ்லிம் காங்கிரசுக்கு 8 வீதமான வாக்குகளும், ஜேவிபிக்கு 2 வீதமான வாக்குகளும், ஏனைய குழுக்களுக்கு 2 வீத வாக்குகளும் கடைக்கும்.

4 வீதமான வாக்காளர்கள் தாம் யாருக்கு வாக்களிக்கப் போகின்றனர் என்பதை வெளிப்படுத்தவில்லை.

வடமத்திய மாகாணத்தில் ஆளும்கட்சிக்கு 76 வீத வாக்குகளும், ஐதேகவுக்கு 18 வீத வாக்குகளும், ஏனைய கட்சிகளுக்கு 1 வீத வாக்குகளும் கிடைக்கும்.

சப்ரகமுவ மாகாணத்தில் ஆளும்கட்சிக்கு 68 வீத வாக்குகளும், ஐதேகவுக்கு 24 வீத வாக்குகளும், ஜேவிபிக்கு 2 வீத வாக்குகளும், ஏனைய குழுக்களுக்கு 2 வீத வாக்குகளும் கிடைக்கும்.

கிழக்கு மாகாணசபையில் எந்தவொரு அரசியல் கட்சியாலும் தனிப்பெரும்பான்மையைப் பெறமுடியாது.

சனத்தொகை விகிதாசாரம், கிழக்கில் வாக்குகளை மூன்றாக பிளவுபடுத்தும்.

கிழக்கில் ஆளும்கட்சிக்கு 33 வீத வாக்குகளும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு 29 வீத வாக்குகளும், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு 21 வீத வாக்குகளும், ஐதேகவுக்கு 10 வீத வாக்குகளும் கிடைக்கும்.

இங்கு ஜேவிபிக்கு 1 வீத வாக்குகளும், ஏனைய கட்சிகளுக்கு 3 வீத வாக்குகளும் கிடைப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன.

களனிப் பல்கலைக்கழக மாணவர்கள் 75 பேர், 10 நாட்களாக 3500 பேரிடம் இந்தக் கருத்துக்கணிப்பை மேற்கொண்டனர்.

இதில் 5 வீத வழு ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாகவும் பேராசிரியர் றோகண லக்ஸ்மன் பியதாச தெரிவித்ததார்.
[vuukle-powerbar-top]

Recent Post