Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

மின் திட்டங்களை விரைவுபடுத்த தனித் துறையை ஏற்படுத்த வேண்டும் – ராமதாஸ்

மின் திட்டங்களை விரைவுபடுத்த தனித் துறையை ஏற்படுத்த வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 

தமிழ் நாட்டில் உள்ள மின் தட்டுப்பாட்டை குறைப்பது குறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில், காற்றாலை மின் உற்பத்தி தடைப்பட்டதை அடுத்து தமிழகம் முழுவதும் 10 முதல் 16 மணி நேரம் அறிவிக்கப்படாத மின்வெட்டு நடைமுறைப் படுத்தப்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார். 

இதே நிலை நீட்டித்தால் பொருளாதார செயல்பாடு தமிழகத்தில் அடியோடு முடங்கி விடும் என ராமதாஸ் கூறியுள்ளார். ஆட்சிக்கு வந்தால் 3 மாதங்களில் மின்வெட்டை போக்குவதாக கூறிய அதிமுக அரசு பதவிக்கு வந்து 15 மாதங்கள் ஆகியும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என்றும் அவர் குறை கூறியுள்ளார். 

மின்வெட்டை தடுக்க முதல் கட்டமாக மத்திய தொகுப்பிலிருந்தும், வெளி மாநிலங்களிலிருந்தும் மின்சாரத்தை வாங்கி தற்காலிக தீர்வு காண வேண்டும் என்றும் அடுத்தகட்டமாக நீண்ட கால திட்டங்களை செயல்படுத்த வேண்டும் எனவும் ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

மேலும் தமிழகத்தின் ஒட்டு மொத்த தேவை எவ்வளவு, மின் உற்பத்தி எவ்வளவு, நடைமுறையில் உள்ள மின் திட்டங்கள் எத்தனை, அந்த திட்டங்கள் எந்த கட்டத்தில் உள்ளன என்பது குறித்த வெள்ளை அறிக்கையை தமிழக அரசு வெளியிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். 

மின் உற்பத்தி துறை என்ற பெயரில் தனித்துறை ஒன்று ஏற்படுத்தி அதற்கு தகுதியான அமைச்சர்களை நியமித்தால் மட்டுமே தமிழகத்தில் உள்ள மின் தட்டுப்பாடு ஒரு சில ஆண்டுகளிலாவது தீர்வு காண முடியும் எனவும் அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
[vuukle-powerbar-top]

Recent Post