Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

அதிகாரப்பகிர்வை வலியுறுத்திய மன்மோகனிடம் வடக்கு தேர்தல் என்று மகிந்த சமாளித்தார்

இலங்கையில் வாழும் தமிழர்களுக்கான அதிகாரங்களைப் பகிர்ந்து கொடுக்கும் நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறு, இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சவிடம் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் வலியுறுத்தியுள்ளார்.

நேற்று முன்தினம் இரவு புதுடெல்லியில் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கின் இல்லத்தில், இலங்கை அதிபருடனான இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

இதில் இலங்கை அதிபருடன் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், இலங்கை அதிபரின் செயலர் லலித் வீரதுங்க, நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்த்தன ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இந்தியப் பிரதமருடன் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணா, பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. அன்ரனி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் ஆகியோரும் பங்கேற்றனர்.

இந்தசந்திப்பின் போது, இருதரப்பு விவகாரங்கள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதன்போதே, இலங்கையில்  தமிழர்கள் கௌரவமாகவும், சமத்துவமாகவும் வாழ்வதற்கேற்றவாறு, விரைவாக அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்குமாறு இந்தியப் பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.

இதற்குப் பதிலளித்த இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ச, கிழக்கு மூன்று மாகாணசபைகளுக்குத் தேர்தலை நடத்தி முடித்துள்ளதாகவும், அடுத்து வடக்கு மாகாணசபைக்கான தேர்தலை நடத்தப் போவதாகவும் கூறிச் சமாளித்துள்ளார்.

இந்தச் சந்திப்பின் போது, இருநாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

சிறுசிறு சம்பவங்களினால், இருநாடுகளுக்கும் இடையிலான உறவுகள் பாதிக்கப்பட்டு விடக் கூடாது என்றும், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும் என்றும் இலங்கை அதிபரிடம் மன்மோகன்சிங் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
[vuukle-powerbar-top]

Recent Post