Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

கூட்டுறவு சங்கத் தேர்தல் தமிழக அரசுக்கு வைகோ கண்டனம்

தமிழ் நாட்டில் 10,440 கூட்டுறவு சங்கங்களில், பல இலட்சம் பேர் உறுப்பினர்களாக இருந்து பயன்பெற்று வருகிறார்கள். 

இவற்றுள், 4,412 தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள், கிராமப்புற மக்களுக்கு கூட்டுறவுக் கடன், நகைக்கடன், பயிர்க் கடன் வழங்குவதோடு, ஏழை எளிய மக்களுக்குக் குடிமைப் பொருள் வழங்கும் சேவைப் பணிகளிலும் ஈடுபட்டு உள்ளன. 

அவ்வாறே, இதர கூட்டுறவு சங்கங்களும் மக்களுக்குப் பயன் அளித்து வருகின்றன. அரசியல் எல்லைகளைக் கடந்து, முழுக்க முழுக்க சேவை அமைப்பாக நிர்வாகிக்கப்பட வேண்டிய கூட்டுறவு அமைப்புகளை, முழுக்க அரசியல்மயமாக்கி, ஆளும் கட்சியினரின் வேட்டைக்காடாக்கும் நடவடிக்கையில் முந்தைய தி.மு.க. ஆட்சி ஈடுபட்டது. 

2007 இல் கூட்டுறவு சங்கங்களுக்குத் தேர்தல் நடத்துகிறோம் என்று அறிவித்து, ஆளும் கட்சிக்குச் சாதகமாக போலித் தேர்தலையும் நடத்தி, வாக்கு எண்ணிக்கை நடந்துகொண்டிருக்கும் போதே தேர்தல்கள் இரத்து என்று அறிவித்து, ஒரு கோமாளிக் கூத்தை அரங்கேற்றியது. 

முந்தைய தி.மு.க. ஆட்சியிலும் கூட்டுறவு சங்க அமைப்புகளில் முறைகேடுகள் நடப்பதை அறிந்து, 2001 இல் ஆளும் பொறுப்புக்கு வந்த அன்றைய அதிமுக அரசு, கூட்டுறவு சங்கங்களின் நிர்வாகக் குழுவைக் கலைத்துவிட்டு, தனி அலுவலர் பொறுப்பிலே நிர்வாகத்தை ஒப்படைத்தது.

இன்றுவரை தனி அலுவலர் பதவிக்காலம் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை நீட்டிக்கப்பட்டு, கூட்டுறவுச் சங்கங்கள் தனி அலுவலர் கட்டுப்பாட்டில் இயங்கி வருகின்றன. மத்திய கூட்டுறவு சங்கச் சட்ட விதிகள் மற்றும் நீதிமன்ற ஆணையின் விளைவாக, தேர்தல் நடத்தப்படுவது அவசியமாகிறது. அத்தேர்தல் நேர்மையாக நடத்தப்பட வேண்டும். 

இத்தேர்தலை நடத்துவதற்காக இன்றைய அதிமுக அரசு பலமுறைகேடுகளில் ஈடுபட்டு உள்ளது. 

1. கூட்டுறவுச் சங்கங்களின் புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதால், மகாசபை கூட்டத்திற்கான அறிவிப்பு விளம்பரங்கள், மக்கள் அன்றாடம் படிக்கும் செய்தித்தாள்களில் வெளியிடாமல், சின்னஞ்சிறிய நாளிதழ் ஒன்றில் வெளியிடப்பட்டு உள்ளது. 
மேலும் இந்த விளம்பரங்கள், சங்கம் அமைந்து உள்ள பகுதிக்கு வெளியே உள்ள பகுதிகளில், மாவட்டங்களில் தெரியும் வகையில் வெளியிடப்படுகின்றன. 

2. கூட்டுறவு சங்க உறுப்பினர் சேர்கக்கைக்கான விண்ணப்பங்கள், கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர்கள் மூலமாக, அந்தந்த மாவட்ட அமைச்சர்கள்-மாவட்டச் செயலாளர்கள் மூலம், ஆளும்கட்சியின் ஒன்றிய, நகர, கிளைச் செயலாளர்கள் வரை வழங்கப்பட்டு, அவர்கள் வழங்கும் விண்ணப்பப் படிவங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் என்று, எழுதப்படாத விதி நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. 

3. கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் பார்த்தால், உறுப்பினர் கட்டணம் செலுத்த வேண்டிய ரசீது புத்தகம், செல்லான்கள் அனைத்தும ஆளும் கட்சியின் மாவட்டப் பொறுப்பாளர்களிடம ஒப்படைக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் நடைபெற உள்ள கூட்டுறவு சங்கத் தேர்தலில், ஆளும் கட்சியினர் தவிர எவருமே போட்டியிட முடியாத நிலையை உருவாக்க அதிமுக அரசு திட்டமிட்டு உள்ளது. 

இதனால் கூட்டுறவு அமைப்புகளின் நிர்வாகத்தில், ஆளும் கட்சியினர் ஏகபோக உரிமை பெறவும், அதில் ஊழலும், தவறுகளும் தாண்டவமாடத்தான் வழி ஏற்படும். கூட்டுறவு அமைப்புகளின் மூல நோக்கம் சிதைந்து அவை செம்மையாக இயங்க முடியாத நிலையில்தான் போய் முடியும். இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஜனநாயகப் படுகொலை ஆகும். இதனை வன்மையாகக் கண்டிப்பதோடு, தமிழக அரசு வெகுமக்கள் வெறுப்புக்கு ஆளாகாமல், உறுப்பினர் சேர்க்கையை பகிரங்கமாக அறிவித்து, விருப்பம் உள்ள, தகுதியானவர்களை உறுப்பினர்களாக சேர்க்க அனுமதிக்க வேண்டும் என்பதோடு, கூட்டுறவு அமைப்புக்கான தேர்தல் நடைமுறைகள் அனைத்தும் ஒளிவு மறைவு அற்ற முறையில், மேற்கொள்ளப்பட வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன். 

 அந்தந்தப் பகுகளில் உள்ள பொதுமக்கள், கூட்டுறவு அமைப்பில் ஆர்வம் உடையோர் தத்தமது பகுதிகளில் உள்ள கூட்டுறவு சங்கத் தனி அலுவலர்களைத் தொடர்புகொண்டு உரிமையை நிலை நாட்டும் பணியில் ஈடுபடுமாறு கேட்டுக் கொள்கிறேன். 

‘தாயகம்’ 
வைகோ 
சென்னை - 8 
பொதுச் செயலாளர், 
09.09.2012 மறுமலர்ச்சி தி.மு.க
[vuukle-powerbar-top]

Recent Post