Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

கூடங்குளம் மக்களுடன் முதலமைச்சர் ஜெயலிதா பேச்சுவார்த்தை நடத்துவது அவசியம்: இராமதாஸ் அறிக்கை!

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

கூடங்குளம் பகுதி மக்களின் உயிருக்கும், வாழ்வாதாரத்திற்கும் பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ள அணுமின் நிலையத்தை திறக்கக் கூடாது என்று வலியுறுத்தி அப்பகுதி மக்கள் இடிந்தகரையில் நேற்று கூடி ஆலோசனை நடத்தினர்.

இதில் பங்கேற்பதற்காக வந்த அப்பகுதி மக்களை விஜயாபதி என்ற இடத்தில் காவல் துறையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர். அந்தப் பகுதியில் பதற்றம் ஏற்படுவதற்கான எந்த சூழலும் இல்லாத நிலையில், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவலர்களையும், தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் வாகனங்கள், கண்ணீர் புகை குண்டுகளை வீசும் ஊர்திகள் ஆகியவற்றையும் நிறுத்தி மக்களை காவல்துறை அச்சுறுத்தியுள்ளது.

இடிந்த கரைக்குள் நுழைவதற்கான அனைத்து பாதைகளையும் மணல் மூட்டைகளை அடுக்கி அடைத்துள்ளனர். ஓராண்டிற்கும் மேலாக கூடங்குளம் மக்கள் நடத்தி வரும் போராட்டத்தில் சிறு வன்முறை கூட நிகழாத நிலையில், காவல் துறையினரே வன்முறையைத் தூண்டும் வகையில் செயல்பட்டுள்ளனர். காவல் துறையினரின் இந்த அடக்கு முறை கண்டிக்கத்தக்கது.

உள்ளாட்சித் தேர்தலின் போது தூத்துக்குடியில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பேசிய முதல்-அமைச்சர் ஜெயலலிதா, கூடங்குளம் பிரச்சினையைப் பொறுத்த வரை மக்களின் கருத்துக்களுக்கு தமிழக அரசு மதிப்பளிக்கிறது. இப்பிரச்சினையில் நான் உங்களில் ஒருத்தியாக இருப்பேன் என்று உறுதியளித்திருந்தார்.

எனவே முதல்-அமைச்சர் அவர்கள் இடிந்தகரைக்கு நேரில் சென்று பொது மக்களுடன் பேச்சு நடத்தி பிரச்சினைக்கு சுமூகத் தீர்வு காண முன்வர வேண்டும்.

கூடங்குளம் அணு உலைக்கு எதிர்ப்பு தெரிவித்து அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் சார்பில் வருகிற 9-ந்தேதி கூடங்குளத்தில் நடைபெற இருக்கும் அணுஉலை முற்றுகை போராட்டத்திற்கு பா.ம.க. முழு ஆதரவு அளிக்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
[vuukle-powerbar-top]

Recent Post