Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தமிழ் வளர்க்கும் முகநூல் கவியின் அறிமுகம்: இந்த வாரம் கவிஞர் செல்வா!

இந்த வார முகநூல் கவி: கவிஞர் செல்வா
தமிழின் புகழ்பெற்ற கவிஞர்கள் மற்றும் பாடலாசிரியர்களுக்கே எழுத்தில் சவால் விடும் வகையில், முகநூலில் இடம்பெற்றுள்ள வளர்ந்து வரும் கவிஞர்கள் மற்றும் எழுத்தாளர்களை, நம் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துவதில் அலை செய்திகள் பெருமை அடைகிறது.

இந்த வாரம் நாம் பார்க்கப் போவது, கவிஞர் செல்வா அவர்களைப் பற்றி. இவரது இயற்பெயர் செந்தில் குமார். கவிஞர் செல்வா தஞ்சாவூர் மாவட்டம் கள்ளப்பெரம்பூரில் பிறந்தவர். இவரின் வயது 32 ஆகும். இவரது பெற்றோர் விவசாயம் செய்து வருகின்றனர். தற்போது, சிங்கப்பூரில் வசிக்கும் இவர், தமிழில் சிறந்த கவிதைகளை எழுதி வருகிறார். இவரது முகநூல் பக்கம் முழுவதும் ஈழம், புரட்சி, காதல் என பல்சுவைக் கவிதைகளால் நிரம்பி வழிகிறது.கவிஞர் செல்வாவின் முகநூல் பக்கம் செல்ல இங்கே சொடுக்குங்கள்.

இவரின் கவிதைகளில் சில உங்கள் பார்வைக்கு:

யுத்த களம்:

"  பால் சொட்டும் உதடுகளுடன்
பால் மனம் மாறா
பச்சிளம் குழந்தைகள்
படுத்துக் கிடக்கிறார்களடா பூமியில்
பிணமாக......

சிட்டுக்குருவிகளாய்
சிறகடித்து பறந்த

சிறுவர்கள் கூட்டமெல்லாம்
சிதறி கிடக்கிறார்களடா பூமியில்
பிணமாக....

தாலாட்டு படித்த தாய்க்குலங்கள்
தலைவிரி கோலமாய்
தரையில் கிடக்கிறார்களடா
பூமியை முத்தமிட்டபடியே
பிணமாக....

காக்கைகளும் கழுகுகளும்
கருணை மறந்து
கொத்தி பார்க்குதடா -உரு
குலைந்து போன பிணங்களை...

காணும் காட்சிகளெல்லாம்
கண்களை மிஞ்சுதடா
கங்கையின் ஊற்று....
எங்கு கண்டீர் ?
எங்கு கேட்டீர் ? இந்த
கொடுமையின் உச்சத்தை....

உணராத தமிழினம்
உண்டு உறங்குகிறது தமிழகத்தில்
இலவச பணத்தில் வாங்கிய உணவுகளை...

இறந்துவிட்ட உடல்களைகூட
எடுத்து செல்ல வழியின்றி
கொத்து கொத்தாய்
கொட்டி புத்தைக்கிறார்களடா பூமியில்....

நெஞ்சம் வெடிக்கிறது ...
நெருப்பாய் கொதிக்கிறதே ....."

எத்தனை மனிதர்கள்!

"  வணிகமாகிபோன அரசியல் வாழ்க்கையில்
வாழ்க்கைத்துணையை வியாபாரமாக்கி
வயிறுவளர்ப்பவன் மனிதனா?

கல்விசாலைகள் பல நிறுவி
காசிற்கு கற்பை விலைபேசி
கல்லூரி மாணவியரை
கண்ணீர் பெருகிட

கசக்கி பிழிபவன் மனிதனா?

சாதி மதம் பேதம் பார்த்து -தினம்
சண்டைகளை வளர்த்துகொண்டு
கலவரத்தை மண்ணில் விதைத்து அதை
கண்டு ரசித்து வாழ்பவன் மனிதனா?

பாஸ்பரஸ் குண்டுகளில் வெந்து
பரிதவித்து துடிக்கும் மக்களை
பார்த்து ரசிப்பவன் மனிதனா?

மண் மானம் மீட்க
தன்மானம் காக்க
தொப்புள்கொடி உறவுகளை எண்ணி
துடிப்பவன் எவனோ
கண்ணீர் வடிப்பவன் எவனோ
அவனே மனிதன்! "

அணு உலைக்கு எதிரான இவரின் வீரியம் மிக்க கவிதை:

"  அக்கினியும்
அணு உலையும் நிறுவி
அணுவாயுத நாடு என்று சொல்கிறான்
அடித்தட்டு மக்களின் பசியினை
அறிய மறுக்கிறான் !

தெருவே வீடானது
எச்சில் இலைகளே உணவானது
கந்தை துணியே உடையானது ! அப்புறம்
எங்கே இந்தியா அனுவல்லரசு நாடானது?"

தமிழினமே.....

"  தரணியாண்ட தமிழினம்
தன்மானம் காக்க
தன்னை மண்ணிற்கு அர்ப்பணித்த
தமிழினம் ! 


வெள்ளையரை எதிர்த்து
வீரப்போர் புரிந்து மண்ணில்
வீரம் சொன்ன தமிழினம் !
இமயம் வரை வென்று
இமயத்தில் கொடிநட்டு
இவ்வுலகம் வியக்கவைத்த தமிழினம்!
சுமத்திரா வரை படையெடுத்து பகையை வென்று
சூழ்ச்சியை சூறையாடிய தமிழினம்! "   -------
என்று புரட்சி பாடும் இவரே,

"""  எழுதுகோலை தொட்டுப் பார்ப்பதற்குள்
என் -மேல் தொட்டு பார்த்தது
தூரத்தில் இருந்து என் மேல்
விழுந்த தாவணி"   

-என்று காதல் வளர்க்கிறார். 12-ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்திருந்தாலும், இவரின் தமிழ் சொல்லாற்றல் தனிச் சிறப்பு மிக்கதாக காட்சி அளிக்கிறது. பிடித்த கவிஞராக வைரமுத்துவை குறிப்பிடும் இவர், வைரமுத்து அவர்கள் 'இருவர்' படத்தில் எழுதிய 'நறுமுகையே' பாடல் என்னை மிகவும் கவர்ந்தது என்கிறார். 

தற்போது தமிழ் சினிமாவில் பாடல் எழுத முயற்சித்துக் கொண்டிருக்கிறார். சினிமா வாய்ப்புகள் வரும்போது நிச்சயம் தன் அபார திறமையை வெளிப்படுத்துவார் என நம்பலாம். கவிஞர் செல்வாவுக்கு அலை செய்திகள் வாசகர்களின் சார்பாக வாழ்த்துக்கள். 

அடுத்த வாரம் கவிஞர் செல்லத்துரை அவர்களைப் பற்றிய குறிப்புகள் இடம்பெறுகின்றன. தொடர்ந்து  இணைந்திருங்கள்.

-ராஜ்தியாகி
[vuukle-powerbar-top]

Recent Post