Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

சேலத்தில் பட்டப் பகலில் துணிகரக் கொள்ளை: தாய்-மகளை கொன்று கொள்ளையடித்தது யார்?

கொலை நடந்த வீட்டின் முன்பு கூடி நிற்கும் மக்கள்!
சேலம் செவ்வாய்ப்பேட்டை நாகைய்யர் தெருவை சேர்ந்தவர் சேகர். இவரது மனைவி ராணி (46). இவர்களுக்கு சங்கீதா (23), மீனா (22), நந்தினி (18) ஆகிய 3 மகள்கள் உள்ளனர். சேகர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் அவர் செய்து வந்த நார்பட்டு தொழிலை ராணி கவனித்து வந்தார். முதல் மகள் சங்கீதா கல்லூரி படிப்பை முடித்து விட்டு மாலை நேரத்தில் வீட்டில் டியூசன் நடத்தி வந்தார். 2-வது மகள் மீனா ஒரு வாலிபரை திருமணம் செய்து கொண்டு சென்று விட்டார். 3-வது மகள் நந்தினி திருச்செங்கோட்டில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். மேலும் ராணியின் மாமனார் ராமச்சந்திரன் (90) என்பவரும் இவர்களுடன் வசித்து வருகிறார். வயது முதிர்வு காரணமாக படுக்கையிலேயே அவர் இருந்து வருகிறார்.

நேற்று காலையில் இருந்தே உறவினர்கள் ராணியின் செல்போனுக்கு அழைத்து உள்ளனர். ஆனால் அவர் எடுக்கவில்லை. மேலும் சேகரின் அண்ணன் ராஜாராம் என்பவரும் ராணியின் செல்போனுக்கு அழைத்துள்ளார். யாரும் போனை எடுக்கவில்லை. இதையடுத்து அவர் வீட்டிற்கு வந்தார். அப்போது முன்பக்க கதவு திறக்கப்பட்டு கிடந்தது. இதையடுத்து அவர் உள்ளே சென்று பார்த்தபோது ராணி, அவரது மகள் சங்கீதா ஆகியோர் கழுத்தை இறுக்கி கொலை செய்யப்பட்டு பிணமாக கிடப்பது தெரியவந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ராஜாராம் இதுகுறித்து போலீசுக்கு தகவல் கொடுத்தார்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு போலீஸ் கமிஷனர் மஹாலி, துணை கமிஷனர்கள் பாபு, ரவீந்திரன், நுண்ணறிவு பிரிவு உதவி கமிஷனர் பெரியசாமி, உதவி கமிஷனர் ரவிசேகர், மற்றும் இன்ஸ்பெக்டர் சூரியமூர்த்தி, உள்ளிட்ட போலீசார் விரைந்து வந்தனர். அப்போது ராணி, சங்கீதா ஆகியோர் கொலை செய்யப்பட்டு ஒரே இடத்தில் உடல் கிடந்ததை கண்டனர். மேலும் அவர்களது உடலில் மின்சார வயர் சுற்றப்பட்டு இருந்தது. எனவே மின்சாரம் பாய்ச்சி கொலை செய்யப்பட்டார்களா? என்றும் போலீசார் சந்தேகித்தனர்.

சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் வந்து கைரேகை மற்றும் தடயங்களை பதிவு செய்தனர். மேலும் துப்பறியும் மோப்ப நாய் அர்ஜூன் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. அது மாதவராயன் தெரு, அரசமரம், தேவர்சிலை வழியாக சின்னமாரியம்மன் தெரு வரை சென்று நின்றது. இதையடுத்து கொலையாளிகள் இங்கிருந்து தப்பி சென்று இருக்கலாம் என்று தெரியவருகிறது. மேலும் வீட்டில் இருந்த ராணியின் மாமனார் ராமச்சந்திரன் வயது முதிர்வின் காரணமாக பார்வை மங்கி மவுனமாக காணப்பட்டார். அவரிடம் போலீசார் இது பற்றி கேட்டனர். அப்போது அவர் கொடுத்த தகவலின்படி போலீசாருக்கு கொலை குறித்து முக்கிய தகவல்கள் கிடைத்தது.

நேற்று காலை நந்தினி கல்லூரிக்கு சென்ற பின்பு 8-30 மணியளவில் வீட்டிற்கு 4 பேர் வந்து உள்ளனர். அவர்கள் நார்பட்டு தொழில் செய்பவர்கள் என்று கூறப்படுகிறது. ராணி, தன் மகள் சங்கீதாவிடம் வந்தவர்களுக்கு டீ போட்டு தரும்படி தெரிவித்துள்ளார். சங்கீதா டீ போட்டுக்கொண்டு இருந்த போது, நான்கு பேரும் ராணியின் கழுத்தில் துணியை போட்டு இறுக்கி கொலை செய்தனர். ராணியின் அலறல் சத்தத்தை கேட்டு ஓடி வந்த சங்கீதா அதை தடுக்க முயன்றார். அப்போது அவரையும் தாக்கியுள்ளனர். இதில் சங்கீதாவின் பற்கள் உடைந்து வீட்டில் சிதறிகிடந்தது. மேலும் அவரையும் கழுத்தை இறுக்கி கொலை செய்தனர். பின்னர் தாய் ராணியின் உடல் மீது சங்கீதாவின் உடலையும் தூக்கிகொண்டு வந்து போட்டு இருக்கிறார்கள்.

பின்னர் அவர்கள் வீட்டில் இருந்த 3 பீரோக்களை உடைத்து அதில் இருந்த 17 1/2 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்று உள்ளனர். இதன் மதிப்பு ரூ. 3 லட்சத்து 50 ஆயிரம் ஆகும். பீரோவில் இருந்த ஏராளமான சொத்து பத்திரங்களையும் கொள்ளையடித்து சென்றதாக கூறப்படுகிறது. மேலும் இந்த கொலை மற்றும் கொள்ளையில் இவர்களுக்கு தெரிந்த நபர்கள் தான் யாரோ ஈடுபட்டு இருக்க முடியும் என்று சந்தேகிக்கப்படுகிறது. இவர்களை பற்றி நன்கு தெரிந்தவர்கள் தான் வீட்டில் இருக்கும் ராமச்சந்திரனுக்கு பார்வை குறைவு, நடக்க முடியாது என்பதை தெரிந்து கொண்டு நுழைந்து உள்ளனர். மேலும் வீட்டில் 2 பெண்கள் மட்டுமே தனியாக இருப்பார்கள் என்பதையும் தெரிந்து கொண்டே பட்டப்பகலில் தைரியமாக வந்து கொலை சம்பவத்தை அரங்கேற்றியுள்ளனர். இவர்களை பற்றி தெரியாத நபர்களாக இருந்தால் ராணி தனது மகள் சங்கீதாவிடம் டீ போட சொல்லி இருக்க மாட்டார். மேலும் 2 பேரையும் கொலை செய்த கும்பல் ராமச்சந்திரனையும் கொலை செய்து இருப்பார்கள். ஆனால் அவரால் ஒன்றும் நமக்கு ஆபத்து இல்லை என்பதை தெரிந்து கொண்டே அவரை விட்டு விட்டனர். இதை வைத்து பார்க்கும் போது நன்கு அறிமுக மான பழக்கமானவர்களே இந்த கொலையில் ஈடுபட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள் இதையடுத்து கொலை செய்யப்பட்ட ராணி, அவரது மகள் சங்கீதா ஆகியோரின் உடலை மீட்டு போலீசார் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவர்களின் உடல்கள் இன்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

முன்னதாக கொலை நடந்த இடத்தை பார்வையிட்ட போலீஸ் கமிஷனர் மஹாலி நிருபர்களிடம் கூறியதாவது:-

கொலையாளிகள் மின்சாரம் பாய்ச்சி கொலை செய்தனரா? கொலையில் உறவினர்களுக்கு தொடர்பு உள்ளதா? என்பது விசாரணைக்கு பின்னரே தெரியவரும். இந்த கொலை குறித்த விசாரிக்க இன்ஸ்பெக்டர் சூரியமூர்த்தி தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது என்றார். மேலும் கொலை நடந்த வீட்டின் எதிரில் உள்ள 4 வீடுகளின் வாசலில் காமிராக்கள் பொருத்தி உள்ளனர். காமிராக்களின் உதவியுடன் கொலையாளிகளை அடையாளம் காணும் பணியையும் போலீசார் துரிதப்படுத்தி உள்ளனர். சேலத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக நடந்து வரும் கொலை சம்பவங்களால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

இந்நிலையில் நேற்று பட்டப்பகலில் கூட்டம் நிறைந்த பகுதியிலேயே மிகவும் துணிச்சலாக வந்து தாய்-மகளை மர்ம நபர்கள் கொலை செய்து உள்ளனர். போலீசாருக்கு சவால் விடும் வகையில் நடந்துள்ள இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடையவர்களை பிடிக்க போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து உள்ளனர். தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணையை முடுக்கி விட்டு இருக்கிறார்கள்.
[vuukle-powerbar-top]

Recent Post