Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

சிவகாசியில் மேலும் ஒரு தீ விபத்து: மூன்று பேர் உடல் கருகி பலி!

உயிர்களைக் காவு வாங்கும் ஆலைகள்!
சிவகாசி அருகே முதலிப்பட்டியில் கடந்த 5ம் தேதி நடந்த பட்டாசு ஆலை தீ விபத்தில் 39 பேர் உடல் கருகி பலியாகினர். இந்த கொடூர விபத்து நடந்து ஒரு மாதம் கூட முடியாத நிலையில் மீண்டும் ஒரு விபத்து நேற்று காலை நடந்துள்ளது.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி வெம்பக்கோட்டை அருகேயுள்ள விஜயகரிசல்குளம் கிராமத்தைச் சேர்ந்த சண்முகையா(53). இவரது மகன் செல்லப்பாண்டி (26), இவர் ஏழாயிரம் பண்ணை அருகே குத்தகைக்கு பட்டாசு ஆலை நடத்தி வந்தார். முதலிப்பட்டி விபத்து நடந்ததன் எதிரொலியாக கடந்த மாதம் அதிகாரிகள் இவரது பட்டாசு ஆலையில் சோதனை நடத்தி சீல் வைத்தனர். 

இதனால், செல்லப்பாண்டி தனது வீட்டில் வைத்து பட்டாசு தயாரித்து வந்தார். இதில் விஜயகரிசல்குளம் அருகேயுள்ள வல்லம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பாக்கியராஜ் (28), குமார் (45), காளிராஜ் (35) ஆகியோர் நேற்று காலை 9.30 மணியளவில் நவீன ரக வெடியில் மருந்து செலுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தனர். 

அப்போது திடீரென உராய்வு ஏற்பட்டதில் தீ விபத்து ஏற்பட்டது. பட்டாசுகள் வெடித்து சிதறின. வெடி மருந்துகள் குபீரென தீப்பிடித்ததில், மூவரும் உடல் கருகி இறந்தனர். செல்லப்பாண்டியன் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் தேடி வருகின்றனர். முதலிப்பட்டி விபத்தையொட்டி, வீடுகளில் பட்டாசு தயாரிப்பு குறைந்திருந்தது. சில நாளில் அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் விட்டதால் மீண்டும் வீடுகளில் பட்டாசு தயாரிப்பது தீவிரமானது. தீபாவளி நெருங்கும் சமயம் ஆகையால் பட்டாசு உற்பத்தி மேலும் சூடுபிடிக்கும். 
[vuukle-powerbar-top]

Recent Post