Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

கிரானைட் மோசடியில் துரை தயாநிதிக்கு மேலும் சிக்கல்: கைது செய்ய தனிப்படை தீவிரம்!


கிரானைட் மோசடியில் ஈடுபட்ட துரை தயாநிதி உள்பட 40 பேரை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் நடந்த கிரானைட் மோசடியில் ரூ.16 ஆயிரம் கோடி அளவுக்கு அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டதாக முன்னாள் கலெக்டர் சகாயம் அரசுக்கு அறிக்கை அளித்தார். 

இதையடுத்து அரசு உத்தரவின்படி மதுரை கலெக்டர் அன்சுல் மிஸ்ரா 18 அதிகாரிகள் குழுவை அமைத்து கடந்த 50 நாட்களாக கிரானைட் குவாரிகளில் அதிரடி சோதனைகள் நடந்து வருகிறது. இதனிடையே மேலூரில் இயங்கி வந்த 175 கிரானைட் குவாரிகளில் 94 குவாரிகள் முறைகேடாக நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 

பி.ஆர்.பி. கிரானைட் நிறுவனம், ஒலிம்பஸ், சிந்து, மதுரா உள்ளிட்ட 9 கிரானைட் நிறுவனங்கள் சட்டவிரோதமாக கற்களை வெட்டி எடுத்தது தெரிய வந்தது. பி.ஆர்.பி. நிறுவனமும், ஒலிம்பஸ் நிறுவனமும் அதிக அளவில் கிரானைட் கற்களை வெட்டி எடுத்து அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தியதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். 

இது தொடர்பாக பி.ஆர்.பி நிறுவன அதிகாரி பி.ஆர்.பழனிச்சாமி, அவரது மகன்கள் செந்தில்குமார், சுரேஷ்குமார், ஒலிம்பஸ் கிரானைட் நிறுவன பங்கு தாரர்கள் மத்திய மந்திரி மு.க.அழகிரியின் மகன் துரைதயாநிதி மற்றும் நாகராஜ், சிந்து கிரானைட் அதிபர் செல்வராஜ், அவரது மகன் சூரியபிரசாத், மதுரா கிரானைட் அதிபர் பன்னீர்முகமது உள்ளிட்ட தொழிலதிபர்கள் 45 பேரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. 

இந்த நிலையில் பி.ஆர். பழனிச்சாமி, பன்னீர்முகமது ஆகியோர் போலீசில் சரண் அடைந்தனர். அவர்கள் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தலைமறைவாக உள்ள துரைதயாநிதி உள்ளிட்ட குவாரி அதிபர்களை பிடிக்க 10 தனிப்படைகள் கடந்த 2 மாதமாக பல்வேறு இடங்களில் தீவிரமாக தேடி வருகிறது. 

இதனிடையே அவர்கள் அனைவரும் முன்பிணை கேட்டு மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனு மீது நேற்று தீர்ப்பு வழங்கிய மதுரை ஐகோர்ட்டு கிளை துரை தயாநிதி, சிந்து கிரானைட் செல்வராஜ், அவரது மகன் சூரியபிரசாத் உள்ளிட்ட 4 பேரின் முன்பிணையை தள்ளுபடி செய்தது. 

ஏற்கனவே பி.ஆர்.பழனிச்சாமியின் மகன்கள் சுரேஷ்குமார், செந்தில்குமார் மற்றும் முருகேசன், தெய்வேந்திரன் ஆகியோரது முன்ஜாமீன் மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. முன்ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் தலைமறைவாக உள்ள கிரானைட் அதிபர்களை பிடிக்க தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களுக்கு விரைந்துள்ளனர். 

மு.க.அழகிரியின் மகன் துரைதயாநிதி உள்ளிட்ட தொழிலதிபர்கள் வெளி மாநிலங்களில் பதுக்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து தனிப்படை போலீசார் டெல்லி, ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய பகுதிகளுக்கு விரைந்து சென்று தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். 

கிரானைட் அதிபர்கள் கைது நடவடிக்கையை தவிர்க்க வெளிநாடுகளுக்கு தப்பி சென்றுவிடாமல் இருக்க நாடு முழுவதும் உள்ள அனைத்து விமான நிலையங்களும் உஷார் படுத்தப்பட்டுள்ளன. அவர்களது பாஸ்போர்ட் மற்றும் அனைத்து விவரங்களும் விமான நிலைய அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

இவ்வாறு அவர் கூறினார். 

கைது நடவடிக்கை தீவிரம் அடைந்துள்ளதால் தலைமறைவாக உள்ள கிரானைட் அதிபர்கள் போலீசில் சரண் அடைய திட்டமிட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
[vuukle-powerbar-top]

Recent Post