Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

சசிகுமாரின் சுந்தரபாண்டியன்: இன்னொரு சுப்பிரமணியபுரம்!


தன் பலம், தனக்கேற்ற கதையை சரியாக தேர்வு செய்வதில் மீண்டும் ஒரு முறை ஜெயித்திருக்கிறார் சசிகுமார்.

நண்பர்களுக்குள் நெருக்கமும் சரி, பெரும்பகையும் சரி... அதன் பின்னணி காதல்தான் என்பது அழுத்தமாகச் சொல்லியிருக்கிறார்கள்.

கண்டமனூர் பெரிய வீட்டுப் பையன் சசிகுமார். அவரது நண்பர்கள் பரோட்டா சூரி, இனிகோ பிரபாகரன். சசிகுமார் ஒரு பெண்ணைக் காதலிக்க, அந்தப் பெண்ணை அவர் நண்பனும் ரூட் விட, அதே பெண்ணை நண்பனின் நண்பனும் டார்கெட் பண்ண, அதில் சசிகுமார் ஜெயிக்கிறார்.

தோல்வியை ஒரு நண்பன் சகித்துக் கொள்ள, மற்றொருவனோ லட்சுமியிடம் வம்பு செய்கிறான். தொடரும் கைகலப்பில் பஸ்ஸிலிருந்து தள்ளப்பட்டு செத்துப் போகிறான். கொலைப் பழியை சசிகுமார் ஏற்று சிறை சென்று, 15 நாள் காவலுக்குப் பிறகு வெளியில் வர, காதலி கண்டு கொள்ளாமல் போகிறாள்.

இருவரும் இணைந்தார்களா என்பது மறுபாதி. இந்தப் படத்தைப் பொறுத்தவரை அந்த மறுபாதிக் கதைதான் செம த்ரில்லிங் என்பதால், திரையில் பார்த்து சசிகுமார் அண்ட் நண்பர்களுக்கு மரியாதை செய்யுங்கள்!

காதல் அரும்பும் பருவத்தில் இனி இளைஞர்கள் ரொம்ப சூதானமா நடந்துக்கணுமப்பா... என்று சொல்லவைக்கும் ஷார்ப்பான திரைக்கதை. புதிய இயக்குநர் எஸ் ஆர் பிரபாகரனை வாழ்த்தி வரவேற்கலாம்.

சசிகுமாரின் முகத்தில் முன்பெல்லாம் எப்போதாவது எட்டிப் பார்க்கும் செயற்கைத்தனம் கூட இதில் இல்லை. ஒரு நடிகராக இந்தப் படத்தில் நூறு சதவீதம் ஜெயித்திருக்கிறார். ஒவ்வொரு கிராமத்திலும் இப்படி ஒரு ரஜினி ரசிகன் நிச்சயம் இருந்தே தீருவான். அதை அழகாக நம்முன் நிறுத்தியிருக்கிறார். 

ரஜினி ரசிகராக அமர்க்களமாக அறிமுகமாவதில் தொடங்கி, நம்மைக் கொலை பண்ண வந்தது நம்ம நண்பனா இருந்தா அவனைக் காட்டிக் கொடுக்கக் கூடாதுடா என முத்திரை வசனம் சொல்வது வரை... சசிகுமார் கொடி பறக்குது!

லட்சுமி மேனனுக்கு இது முதல் படம். ஒப்பனையில்லாத அழகி. பிரகாசமான எதிர்காலம்.

சசிகுமாரின் பலம், பலவீனம் புரிந்து திரைக்கதை எழுதி இயக்கியிருக்கும் எஸ் ஆர் பிரபாகரனின், முதல் முயற்சியே சூப்பர் ஹிட்டாகியிருக்கிறது. வெற்றி தொடர வாழ்த்துகள்!

 அந்த வகையில் சுந்தரபாண்டியன் அவருக்கு இன்னொரு சுப்பிரமணியபுரம்.
[vuukle-powerbar-top]

Recent Post