Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

கூடங்குளம் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமாரனை சுட்டுப்பிடிக்க காவல்துறை உத்தரவா?

அணு உலை செயல்படத் தொடங்கும் முன்னரே கொதிக்கிறது கூடங்குளம். கரையில் போலீஸும் கடலுக்குள் மக்களும் நின்ற காட்சி​யை மறக்க முடியுமா? 'மக்களை அப்புறப் படுத்தியே தீருவோம்’ என்று போலீஸும், 'அணு உலையைச் செயல்பட விடமாட்டோம்’ என்று அந்தப் பகுதி மக்களும் நேருக்கு நேர் நிற்கிறார்கள். காவல்துறை தேடுதல் வேட்டை:

அணு உலைக்கு எதிராக கடந்த ஒரு வருடத்தைக் கடந்தும் போராடி வரும் மக்கள், கடந்த 9-ம் தேதி அணுஉலை முற்றுகைப் போராட்டத்தில் இறங்கினர். அவர்களைக் கலைக்க போலீஸார் பலப்பிரயோகம் செய்ததில் அப்பாவி மக்கள் பலர் காயமடைந்தனர். அந்த சமயத்தில், போலீஸாரின் கவனம் முழுவதும், போராட்டக் குழுவைச் சேர்ந்த சுப.உதயகுமாரன், புஷ்பராயன் உள்ளிட்டோரைக் கைது செய்வதிலேயே இருந்தது. அதைப் புரிந்துகொண்ட மக்கள், உதயகுமாரனை யார் கண்ணிலும் படாமல் படகில் ஏற்றி இடம் மாற்றிக்கொண்டே இருந்தனர். இதனால், ஏமாற்றம் அடைந்த போலீஸார் இடிந்தகரை கிராமத் துக்குள் நுழைந்து சல்லடை போட்டது. போலீஸின் பார்வையில் லூர்து மாதா ஆலயமும் தப்பவில்லை. அங்கு சோதனை நடந்தபோது மாதா சொரூபத்தை போலீஸார் உடைத்து விட்டதாகவும் ஆலயப் பொருட்களைச் சூறையாடியதாகவும் புகார் எழுந்தது. உடனே கொதித்துப்போன மக்கள் ஆர்ப்பாட்டம், சாலை மறியல் என்று கிளர்ந்து எழவே, கடலோரப் பகுதிகளில் சட்டம் - ஒழுங்கு சீர் குலைந்தது. அதனால் கிராமங்களுக்குள் நுழைந்து ஆர்ப்பாட்டக்காரர்களைக் கைது செய்தது போலீஸ்.

வந்தார் சுப. உதயகுமாரன்!

போலீஸாரின் ஆவேசத்தைக்கண்ட சுப.உதய​குமாரன், 'கூடங்குளம் காவல் நிலையத்தில் சரண் அடையத் தயார். நாடறியப்​​பட்ட தலைவர் ஒருவரின் முன்னி​லையில் கைதாவேன்’ என்று அறிவித்தார். 12-ம் தேதி இரவு 9 மணிக்கு சரண் அடைவதாகச் சொன்ன உதயகுமாரன், மாலை 4 மணிக்கு இடிந்தகரை உண்ணாவிரதப் பந்தலுக்கு வந்து சேர்ந்தார். அவரைப் பார்த்ததும் கூட்டமே உணர்ச்சிவசப்பட்டது.

'எங்க அண்ணன் எங்களுக்காகத்தானே போராடினார். அவர் மேல் மட்டும் எப்படி கேஸ் போடலாம். அணு உலையால் சாவுறதுக்குப் பதிலா எல்லோரும் சேர்ந்து 'உள்ளே’ போவோம்’ என்றனர் பெண்கள். உருக்கமான இந்த சமயத்தில் கூத்தங்குழியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர், 'எங்க அண்ணனை ஒருத்தனும் ஒண்ணும் செய்ய முடியாது. அவரை யாரிடமும் ஒப்படைக்க மாட் டோம்..’ என்றபடி அவரை அள்ளிக்​​கொண்டு கடலை நோக்கி நடந்தனர். சிறிது நேரத்தில் அவர்கள் அனைவரின் செல்போன்களும் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டன.

இந்த விஷயம் தெரியாமல் காவல் துறை தயாராக இருந்தது. ஒரு போலீஸ் அதிகாரி, 'உதயகுமாரன் சரண் அடைய வந்ததும் ஸ்டேஷனுக்கு வெளியே வெச்சு எவ்வளவு நேரம் வேணும்னாலும் பேட்டி எடுத்துக்கோங்க. ஆனா, அவர் ஸ்டேஷனுக்குள் வந்ததும் நீங்களும் உள்ளே வர முயற்சி செய்யக் கூடாது’ என்றார். அதோடு உதயகுமாரன் வந்ததும் கையெழுத்துப் போடு​வதற்கு வசதியாக குற்றப் பத்திரிக்கை தயாராக இருந்தது.

உதயகுமாரனை இளைஞர்கள் படகில் கொண்டு​ சென்றுவிட்டதாகத் தகவல் கிடைத்தும் போலீஸார் கண்டு​கொள்ளவில்லை. 'மக்களைத் திசை திருப்பி விட்டு வேறு ஏதாவது ஒரு ஸ்டேஷனில் கைதாவார்’ என்றன ஊடகங்கள். இரவு முழுவதும் போலீஸும் பத்திரிகையாளர்களும் பரபரப்பாக இருந்தும் உதயகுமாரன் வரவே இல்லை.

இந்நிலையில், உதயகுமாரனை நிச்சயம் கைது செய்தே தீரவேண்டும் என்பதில் காவல் உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது. அவரை சுட்டுப் பிடிக்கவும் உத்தரவிட முனைந்திருப்பதாக சமீபத்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
[vuukle-powerbar-top]

Recent Post