Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தெரிவுக்குழுவின் மூலம் 13வது திருத்தத்தை பலவீனப்படுத்த முனைகிறது இலங்கை அரசு

அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வு மூலம் மட்டுமே, நிலையான அமைதியை கொண்டுவர முடியும் என்பதை இலங்கை அரச தலைமைக்கு புதுடெல்லி தெளிவுபடுத்த வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார். 

இந்திய ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர், 

“மாகாணங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரங்களை வழங்கியுள்ள அரசியலமைப்பின் 13வது திருத்தத்தை மேலும் பலவீனப்படுத்தவதற்கான கருவியாக நாடாளுமன்றத் தெரிவுக்குழு பயன்படுத்தப்படுமோ என்ற அச்சம் உள்ளது. 

தெரிவுக்குழுவில் 31 உறுப்பினர்கள் இருந்தாலும், எமக்கு 5 உறுப்பினர்கள் மட்டும் தான் ஒதுக்கப்பட்டுள்ளது. 

அவர்கள் 13வது திருத்தத்தை வலுவிழக்கச் செய்ய பரிந்துரைக்கலாம். 

தற்போதுள்ள அதிகாரப்பகிர்வுக்கு குறைந்த விடயங்கள் குறித்து தெரிவுக்குழுவின் நிகழ்ச்சிநிரலில் உள்ளடக்கப்படாது என்று இலங்கை அரசு உத்தரவாதம் அளித்தாலே, நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் கூட்டமைப்பு இணைய முடியும்.” என்று கூறியுள்ளார்.

அதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இந்த அச்சம் அடிப்படையற்றது என்று இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் கூறியுள்ளார். 

13வது திருத்தத்தை வலுவிழக்கச் செய்வதற்கு இலங்கை அரசிடம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் உள்ளதாகவும், அதை நாடாளுமன்றத்தின் மூலமே செய்ய முடியும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
[vuukle-powerbar-top]

Recent Post