Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

கனமழை காரணமாக தமிழகத்தில் 14 பேர் பலி

குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை தமிழகத்தை நெருங்கியது. இதன்காரணமாக இன்றும் மழை நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் தொடர்மழைக்கு இதுவரை 14 பேர் பலியாகி இருக்கிறார்கள். 

கடந்த வருடம் வடகிழக்கு பருவமழை தென் மாவட்டங்களில் பொய்த்துப்போன நிலையில் இந்த வருடம் எப்போது மழை வரும் என்று மக்கள் காத்திருந்தார்கள். 

அவர்கள் எண்ணம் பலிக்கும் வகையில் கடந்த 3 நாட்களாக தென் மாவட்டங்களில் பல இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது. 

இது தமிழக மக்களுக்கு குறிப்பாக விவசாயிகளுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது. இதுகுறித்து சென்னை மண்டல வானிலை ஆராய்ச்சி மைய இயக்குனர் எஸ்.ஆர்.ரமணன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை முற்றிலுமாக அகன்றுவிட்டது. 

நேற்று வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது. கடந்த வருடம் வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் 24-ந்தேதி தொடங்கியது. இந்த வருடம் 18-ந்தேதியே, அதாவது முன்கூட்டியே தொடங்கி உள்ளது. 

தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான குறைந்தழுத்த தாழ்வுநிலை நேற்று இலங்கைக்கு தென்மேற்கே மையம் கொண்டிருந்தது. அது மேலும் மேற்கு நோக்கி நகர்ந்து தென்மேற்கு வங்கக்கடலில் தமிழகத்தின் அருகே நிலை கொண்டுள்ளது. 

இதன் காரணமாக தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் இன்று அநேக இடங்களில் மழை பெய்யும். குறிப்பாக சென்னை உள்பட கடலோர மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும். சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். 

அவ்வப்போது மழையோ அல்லது கனமழையோ பெய்யும். நேற்று காலை 8-30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு வருமாறு:- குடவாசல் 8 செ.மீ., வலங்கைமான், சென்னை நுங்கம்பாக்கம் தலா 7 செ.மீ., மயிலாடி, கும்பகோணம், சென்னை டி.ஜி.பி. அலுவலகம் தலா 6 செ.மீ., காட்டுமன்னார்கோவில், பாளையங்கோட்டை, மாதவரம், நீடாமங்கலம், மணிமுத்தாறு, ஆர்.எஸ்.மங்கலம், சிவகிரி தலா 5 செ.மீ. செங்கோட்டை, சேரன்மகாதேவி, அரியலூர், கேளம்பாக்கம், திருக்கோவிலூர், திருவிடை மருதூர், திருவாரூர், மன்னார்குடி, சென்னை விமானநிலையம் தலா 4 செ.மீ., அம்பாசமுத்திரம், ஆயிக்குடி, பாண்டவையார் தலை (திருவாரூர் மாவட்டம்), பேச்சிப்பாறை, பாபநாசம், சங்கரன்கோவில், நாங்குநேரி, சோழவந்தான், ராதாபுரம், திருச்செந்தூர், பரங்கிப்பேட்டை, சாத்தான்குளம், கன்னியாகுமரி, திருவையாறு, உடுமலைப்பேட்டை தலா 3 செ.மீ., சிதம்பரம், விருதுநகர், நாகர்கோவில், ராஜபாளையம், திருமங்கலம், உளுந்தூர்பேட்டை, குழித்துறை, ஸ்ரீவைகுண்டம், மணப்பாறை, கொள்ளிடம், புள்ளம்பாடி, வானூர், பொன்னேரி, முத்துப்பேட்டை, அரிமளம், கோவில்பட்டி, வேடசந்தூர், பூதப்பாண்டி, அறந்தாங்கி, குளச்சல் தலா 2 செ.மீ. மழை பெய்துள்ளது. மேலும் பல பகுதிகளில் லேசான மழையும் பெய்துள்ளது. 

கடந்த 8 வருடங்களாக வடகிழக்கு பருவமழை காலத்தில் இயல்பான அளவுக்கும் அதற்கு அதிகமாகவும் தான் மழை பெய்துள்ளது. இவ்வாறு இயக்குனர் எஸ்.ஆர்.ரமணன் தெரிவித்தார். தமிழ்நாட்டில் நேற்று முன்தினம் மழை காரணமாக சுவர் இடிந்து 4 பெண்களும், மின்னல் தாக்கி 2 பேரும் பலியானார்கள். நேற்று பெய்த மழையில் ரோட்டில் தேங்கிய தண்ணீரில் மின்சாரம் பாய்ந்து சென்னை அயனாவரத்தில் ரமேஷ் என்பவரும், தண்டையார்பேட்டையில் மணி என்பவரும் பலியானார்கள். 

நெல்லை மாவட்டம் ராதாபுரத்தில் மின்னல் தாக்கி அலெக்ஸ் என்பவர் இறந்தார். சிவகாசி அருகே உள்ள பாரைப்பட்டியில் தங்கமுனீஸ்வரி (32), அவருடைய தம்பி கண்ணன் ஆகியோரும், ஏ.ராமலிங்காபுரத்தில் காளீஸ்வரன் (33) என்பவரும் மின்னல் தாக்கி இறந்தனர். திருத்துறைப்பூண்டியில் வயலில் களை எடுத்துக் கொண்டிருந்த அய்யாக்கண்ணு (58), அவரது மருமகன் மகாலிங்கம் (40) ஆகியோர் மின்னல் தாக்கி பலியானார்கள். இதுவரை தமிழ்நாட்டில் மழைக்கு 14 பேர் பலியாகி விட்டனர். நேற்று அதிகாலை மழை பெய்ய தொடங்கியபோது பலத்த ஓசையுடன் இடி விழுந்தது. 

இதில் இடி தாக்கி சென்னை கொடுங்கைïரில் 5 பேர் படுகாயம் அடைந்தனர். அதில் ஒருவருக்கு காது செவிடானது. பல வீடுகளில் டி.வி., பிரிட்ஜ் போன்ற மின்சாதனங்கள் சேதமானது. இந்த மழை காரணமாக மாநிலத்தில் உள்ள பல அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து, நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. தேனி மாவட்டத்தில் பெய்து வரும் மழை காரணமாக சோத்துப்பாறை அணை கடந்த 12 நாட்களில் 44 அடியும், வைகை அணை 8 அடியும் உயர்ந்துள்ளது. முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டமும் படிப்படியாக உயர்ந்து நேற்று 120.30 அடியை எட்டியது. காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூரிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. 

திருவாரூர் மாவட்டம் குடவாசலில் அதிகபட்சமாக 79 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. சேலம் மாவட்டத்தில் 5-வது நாளாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. சேலத்தில் விடிய,விடிய பெய்த மழையால் 200-க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் புகுந்தது.
[vuukle-powerbar-top]

Recent Post